வந்தவன் ராம்குமார் ...
ராம் குமாரே தான்!
அவர் பெண் ஸ்வேதா தான் அவனை அறிமுகப்படுத்தியது.
ராம்குமார் ஸ்வேதா ஆபீசில் அவளோட வேலை பார்க்கிறவன்..
In fact அவளோட டீம் லீடர்...
படு ஸ்மார்(த்த)(ட்டான) பையன்!
சொந்த ஊர் திருவிடை மருதூர்......
ஆரவாமுதன் வலங்கை மான்.
ஐயங்கார்!
வாரம் தவறாமல் இரண்டு தடவை வந்து விடுவான். வரும் போது போன் செய்து விட்டுத் தான் வருவான். நல்ல குணம்.செவ்வாய் கிழமை,வெள்ளிகிழமை
ஏழு மணிக்கு அவன் வருவதை வைத்து செல்லில் டைம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். அவ்வளவு பங்க்சுவல். அதைப் போல, எட்டரை மணிக்கு 'டின்னர் சாப்பிட்டு விட்டு கிளம்பலாம் என்று ஆன மட்டும் சொன்னாலும் கேட்க மாட்டான். 'அம்மா பசியோடு காத்துக் கொண்டிருப்பாள்' என டாணென்று கிளம்பி விடுவான்.
வழக்கமாக அவனுக்காக ஆரவாமுதன் மூன்று பட்டணம் பகோடா ப்ளஸ் டிக்ரி காபியுடன்
காத்துக் கொண்டிருப்பார்..
இரண்டு மாதங்களாக அவனைக் காணோம்!
அவரும் ஸ்வேதாவை கேட்கவில்லை. எங்காவது on sight போயிருப்பான்!
ஆனால், அவன் வராதது தான் அவருக்கு எதையோ பறி கொடுத்தாற் போல இருந்தது.
இன்று அத்தி பூத்தாற் போல அவனிடமிருந்து போன்!
இதோ அவனே வந்து விட்டான்..அவருக்கு ஏக சந்தோஷம்!
இன்று அவனுக்காக சமையல் கார மாமியிடம் சொஜ்ஜி, பஜ்ஜி ஸ்பெஷலாக செய்ய சொல்லி இருந்தார்.
பஜ்ஜியும்,சொஜ்ஜியும் சூடாக இருந்தது.
ஆனால்,வந்த ராம் குமாரோ அதை விட சூடாக இருந்தான்!
வந்தவன் சேரில் உட்காரக் கூட இல்லை!
"இரண்டு மாசமா, நான் வரலியே,,ஏன் வரலைன்னு கேட்கக் கூட ஒங்களுக்கு தோணலை?"
"எங்காவது பெல்ஜியம்,ஹாலண்ட்னு ஆபீஸ் வேலையாய் டூர் போயிருப்பாய்..முதல்ல உட்காரு அப்பா.."
"ஸ்வேதா ஏதாவது சொன்னாளா?"
"அவளிடம் நான் எதுவும் கேட்கவில்லை!"
"ரெண்டு மாசமா நான் இங்கே வந்துண்டிருக்கேனே..எதாவது பேசி இருக்கேனா, நான்?"
"நீ பேசலை..நான் தான் எதாவது பேசிண்டு...இப்ப அதுக்கென்ன? வா..உட்கார்,,,சூடா பஜ்ஜி, சொஜ்ஜி உனக்காக காத்துண்டு இருக்கு..வா, சாப்பிடு.."
"அது இருக்கட்டும், நான்...."
"நீ எதுவும் பேச மாட்டே..'உம்'னு கேட்டுண்டு இருப்ப..நான் தான், டிபன்ஸ் அக்கவுண்ட்ஸ்ல அந்த காலத்துல,நடந்த கதை எல்லாம் சொல்லிண்டு இருப்பேன்..மீரட் ல, நான் இருக்கறச்ச, நாலாவது வெள்ளிகிழமை பேங்க்ல விதட்ரா பண்ணின பணம், திங்கள் கிழமை சாலரி டிஸ்பர்ஸ்மெண்டுக்கு வரும்..லெட்ஜர் போஸ்டிங் திங்கள் கிழமை ஆகி இருக்கும்...ஆனா,பாஸ் புக்ல வெள்ளிக் கிழமை என்ட்ரி! கேட்டால், போஸ்டிங் போட மறந்துடுச்சும்பான்...அது எப்படி இரண்டு மாசத்துக்கொரு தடவை மறக்கும்?
அந்த சனி,ஞாயிற்றுக் கிழமை அக்கவுண்டண்ட்டும், கேஷியரும் ஜோடி சேர்ந்துண்டு, அந்த கேஷை ரொட்டேஷன் விட்டு, கொஞ்சம் காசு பார்த்ததை நான் கண்டு பிடிச்சேன் ..அதுக்கு எனக்கு பரிசு ஜபல்பூர் ட்ரான்ஸ்பர்....ஜபல்பூரில.."
"போதும்...நிறுத்துங்க...இந்த ரெண்டு மாசமா நான் உள்ளூரில தான் இருந்தேன்.."
"பின்ன ஏன் இங்கே வரலை?"
"ரெண்டு மாசம் முன்னால நான் ஸ்வேதாட்ட ப்ரபோஸ் பண்ணினேன்.."
"அடப் பாவி!"
நாற்காலியை விட்டு எழுந்திருக்க முயற்சி செய்தார்,ஆரவாமுதன்!
"பொறுங்க ....ஆனா, அவ என்னை ரிஜக்ட் பண்ணிட்டா...அதனால.."
"அதனால?"
"செவ்வாய் கிழமையும், வெள்ளிக் கிழமையும் இனி மேல் ரொட்டீனா இங்கே வருவேன்.."
"வந்து?"
"எப்ப ஒங்க பொண்ணு என்னை வேண்டாம்னு சொல்லிட்டாளோ, அதனால இனிமேல் என் டர்ன்!"
"அப்டீன்னா?"
"இங்கே வந்து நான் இனிமேல் எங்க ஆபீஸ் ப்ரதாபங்களை ஒங்க கிட்ட அளந்து விடுவேன்...நீங்க எப்படி நான் அப்ப 'உம்'
கொட்டினேனோ...அது போல இனிமேல் நீங்க எனக்கு 'உம் ' கொட்டணும்!"
............