Wednesday, January 1, 2014

அடியேனின் குறள் அஞ்சலி
-----------------------------

1. மண்ணுலகில் செய்த மகத்தான பணி தொடர 
    விண்ணுலகம் சென்றாயோ நீ.
2. வெற்றுடம்பு வெண்தாடி கொண்ட இவன்
    சிற்றெறும்பிற்கும் செய்யான் தீங்கு.
3. மக்கிய உரமும் மண்புழுவும் இருக்குமட்டில்
    மன்னுலகம் மறவாது உனை.
4. மின்னும் மணி அரிசி பசுந்தாள் உரம் இட்டால்
    இன்னும் ஒரு கவளம் கொள்.
5. பண்ணிற்கு ஆழ்வார் பலர் இருந்த மாநிலத்தில்,
    மண்ணிற்கு இவனே கதி.
6. உழவினைத் தொழிலாகக் கொண்டோர்க்கெல்லாம் இக்
    கிழவனே இனி நல் தெய்வம்.
7. நிலம் என்னும் நல்லாள் நம்மாழ்வார் என்றாலே
    பலம் பல கொள்வாள் நயந்து.
8. செயற்கை உரமிட்டால் செத்தொழிந்து போவீரென,
    செவ்விளக்கு காட்டிய செம்மல்.
9. மண்ணைப் பொன்னாக்கும் ரசவாதம் அறிந்தவனை,
    விண்ணுலகம் ஏற்கும் வியந்து.
10. நல்லார்க்கு தெரியும் இவனொருவனால் தான்,
      எல்லோர்க்கும் பெய்தது மழை.