Tuesday, May 22, 2012

திருப்பராய்த்துறை விஜயம்!

திருப்பராய்த்துறை...எங்கள் வாழ்வோடு சம்பந்தப் பட்ட ஒரு கிராமம். திருச்சியிலிருந்து கரூர் செல்லும் மார்க்கத்தில் அடுத்த இருபத்தி இரண்டாம் கிலோ மீட்டரில் வந்து விடும் ஒரு அழகிய கிராமம். வழி நெடுக பச்சை பசேலென வயல்கள்..முத்தரச நல்லூர் என்ற ஊர் கடக்கும் போது, அந்த கால ஆட்களுக்கு ஆராதனா படம் ஞாபகம் வந்து விடும். அருகருகே ரயிலும், பஸ்ஸும் போகும் அழகே அழகு. ராஜேஸ் கன்னா மெளத் ஆர்கனில் ’மேர் ஸப்புனிக ஆயே கேது’ என்று காரில் கொட்டமடித்துக் கொண்டு உற்சாகம் கொப்பளிக்கப் பாடும் பாடல் இன்னமும் கண் முன்னே நிற்கிறது!
திருப்பளாத்துறை என்று தான் தாத்தா,பாட்டி, அம்மா,அம்பி மாமா எல்லாரும் அந்த ஊரை சொல்வார்கள்.அதனால் எங்களுக்கும் அது திருப்பளாத்துறை தான்.திருப்பளாத்துறை என்றவுடன்
தித்திப்பு ஞாபகம் வரும். அம்பி மாமா எப்போது எங்களைப் பார்க்க வந்தாலும், கையில் நிறைய மிட்டாய்களுடன் வருவார்.
கோடை விடுமுறை அன்று திருப்பளாத்துறை செல்வது என்றால் எங்களுக்கு மிகவும் இஷ்டம்.அம்மா தான் கூட்டிக் கொண்டு போவா. ஒரு தடவை இங்கு ஆங்கரையிலிருந்து போகும் போது, பஸ் கொள்ளிட ஆற்றைக் கடந்தது. அப்போது பஸ் பயணி ஒருவர் ‘ இந்த இடத்திற்கு கொள்ளிடம் என்று ஏன் பெயர் வந்தது எனக் கேட்க, நான்’ காவிரி பெருக்கெடுத்தால், கொள்ளும் இடம் கொள்ளிடம்’ என்று சொன்னேன்.அந்த கால கட்டத்தில் ‘கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை’ என்கிற பாடல் பிரபலம். அதில் ‘காவிரி பெருக்கெடுத்தால் கொள்ளும் இடம் கொள்ளிடம்’ என்று ஒரு வரி வரும்.அதை டக்கென்று சொன்னதும் அவர் ‘பய கெட்டிக் காரன்’ என்று தட்டிக் கொடுத்தது இன்னமும் ஞாபகம் இருக்கிறது.
ஆச்சு..அம்மாவுடன் திருப்பளாத்துறை வந்தாச்சு.அம்மா, பாட்டியுடன் கொஞ்ச நேரம் பேசி விட்டு சாயங்காலம் அண்ணா வந்து ஆங்கரைக்கு அம்மாவை கூட்டிக் கொண்டு போக, நானும் கிரியும் இங்கு இரண்டு நாள், சுந்தர பெரியம்மா அகத்தில் இரண்டு நாள் என்று இருந்தோம்.
இங்கு சாரதா நகரில், பாட்டி,அம்பி மாமா, ஜெயா சித்தி அங்கு சுந்தர பெரியப்பா, சுந்தர பெரியம்மா கிரிஜா அக்கா,ராமகிருஷ்ணன் .ஆங்கரை பாட்டி அளவுக்கு இந்த பாட்டி எங்களுக்கு பரிச்சயமில்லை.
அம்பி மாமா ஸ்கூல் ஹெச். எம். அந்த எலிமெண்ட்ரி ஸ்கூல் கோவில் உள்ளே இருக்கிறது.
சாரதா நகர் வீடு ரொம்ப சின்னது. வீடு முழுக்க ஈக்கள். கயிற்றில் வாத்தியார் படத்துக்கு க்யூவில் நிற்கும் ரசிகர்கள் போல், துணி உலர்த்தும் கயிற்றில் ஈக்கள் க்யூவில் நிற்கும்! எப்போதாவது ரயில் சத்தம் கேட்டால்,எங்களை பெரியவர்கள் தூக்கிக் கொள்வார்கள்.அந்த சின்ன சமையல் உள் ஜன்னல் வழியே ரயில் போவது ஜோராகத் தெரியும். மதியம் வெயில் தகிக்கும்.அப்போது நான் கொல்லைப் பக்கம் போய் அங்குள்ள வாழை மரத்தைக் கட்டிக் கொள்வேனாம்..எனக்கு ஞாபகம் இல்லை. எப்போதாவது மயிலும் வரும்.
ஆச்சு அடுத்த இரண்டு நாள் சுந்தர பெரியம்மா அகம். ராமகிருஷ்ணன் எங்களை விட ஐந்து வயது பெரியவன்..அப்புறம் அக்கா. இன்னமும் ஞாபகம் இருக்கிறது சிட......ர் (ஸ்ரீதர் என்பதை) என்று பெரியப்பா என்னை கூப்பிடுவது..இங்கிருந்து காவேரி பக்கம். அகண்ட காவேரி.போகும் போதே புளிய மரத்திலிருந்து புளியங்காய் அடித்து தின்போம். அப்புறம் பெரிய மாட்டுப் பண்ணை.
இவர்களகத்திலிருந்து சிவன் கோவில் பக்கம்.
சுந்தரப் பெரியம்மா வீட்டில் தான் கறைத்த மா தோசை என்பது உண்டு என்றே எங்களுக்கு தெரியும். அது வரை தோசை என்றால், மாவை அறைக்க வேண்டும் என்று நினைத்திருந்தோம்..இது கொஞ்சம் பெரிய வீடு..வெயில் அவ்வளவாகத் தெரியவில்லை..
சாயங்காலம் ஆனால் கோவில் தான்.
என்ன அருமையான நாட்கள் அவை!
மறுபடியும் சின்னப் பையன்களாக மாறி விட மாட்டோமா?
அன்று ’டேய் ஸ்ரீதர்’ என்று ஆளுக்கு ஆள் கூப்பிடுவார்கள் செம எரிச்சலாய் இருக்கும். இன்று ’டேய் ஸ்ரீதர்’ என்று யாராவது நம்மை கூப்பிட மாட்டார்களா என்கிற ஏக்கம் ஜாஸ்தியாகி விட்டது. அப்படி வாத்சல்யத்துடன் கூப்பிடும் ஆட்கள் மிகமிகக் குறைவு..ஏனென்றால், இன்றைய கால கட்டத்தில், நாம் தான் பெரியவர்கள். நம்மை அப்படி யார் உரிமையுடன் ..ஆசையுடன் ..கூப்பிடப் போகிறார்கள் இனி?

Thursday, May 17, 2012

சமைத்துப் பார்?

முருங்கைக் கீரை ஸ்ட்யூ

தேவை : 1. முருங்கைக் கீரை - ஒரு கட்டு
2. கெட்டியான தேங்காய்ப் பால் - ஒரு கப்
3. பூண்டு - ஒரு பல்
4. மிளகு - 2
5. பெரிய வெங்காயம் - 1
6. எலுமிச்சைச் சாறு - 5 துளி
7. ஆலிவ் ஆயில் (அ) ந. எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
8. வேக வைத்த உருளைக் கிழங்கு - 2 துண்டு
9. உப்பு - தேவையான அளவு.

செய்முறை :
வெங்காயம், கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு
பாத்திரத்தில் கீரையைப் போட்டு, வெங்காயம், உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
நன்றாக வெந்ததும், மசித்த உருளைக் கிழங்கை சேர்த்தால், கீரை கெட்டியாகி
விடும்.பிறகு, உப்பு,மிளகு,பூண்டு தேங்காய்ப் பால் சேர்த்துக் கொதிக்க விடவும்.
கொதித்ததும் எண்ணெய் சேர்க்கவும். இறக்கிய பிறகு, எலுமிச்சை சாறு
சேர்க்கவும்.
இது, ஆவியில் வேக வைத்த இட்லி,இடியாப்பம்,புட்டு போன்ற உணவுகளுக்கு ஏற்ற சைட் டிஷ்!

பி.கு. : நான் சமைத்துத் தான் பார்த்தேன். சாப்பிடவில்லை. முடிந்தால்,
நீங்களும் அப்படியே செய்யவும். எதையாவது சமைத்து,அதை சாப்பிட்டு,எதாவது ஏடாகூடமாகி, அதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல!

Tuesday, May 8, 2012

அஸ்வத்தாமா அதஹ குஞ்சரஹ..............


அது ஒரு அழகிய பர்ணசாலை!
குருகுல வாசம் முடிந்த ராஜகுமாரர்கள், விடுமுறையைக் கழிக்க
வந்திருக்கிறார்கள்.
இது ஒரு எளிய வாழ்க்கை..இங்கு எல்லாவற்றையும் தேடித் தேடித் தான்
போக வேண்டும்.
“யாரங்கே?” என்கிற ராஜகுமாரர்களின் அதிகாரம் இங்கு செல்லாது!
அவர்களும் குரு பத்னி இட்ட ஏவல்களை மற்ற மாணாக்கர்கள்
போல் செய்ய வேண்டும்..
மூன்று மாதங்கள் தான்!
அப்புறம் ராஜ போக வாழ்வு!
அந்த நான்கு ராஜகுமார்களுக்கு ஒரு சகோதரி!
அந்த ராஜ குமாரியும் அவர்களுடன் இங்கு வந்திருக்கிறாள்..
இந்த பர்ண சாலையில் ஓய்வு என்று தான் பெயர்!
ஆனால், இங்குள்ள மஹ ரிஷியிடம் வேதம் கற்க வேண்டும்!
பாடசாலை மாணாக்கர்கள் போல் ராஜ குமாரர்களும் தர்க்கம்,
வ்யாகர்ணம், சூத்ரம் போன்றவற்றைக் கற்க வேண்டும் என்று
மன்னவனின் ஆசை.
ரிஷி பத்னிக்கு பேச்சுத் துணைக்கு ராஜ குமாரி!
பொழுது போகாத நேரங்களில் ராஜகுமாரி பர்ண சாலைக்கு
வரும் மான்களுடன் பேசுவாள்..மயில்களுடன் ஆடுவாள்.
அந்த நான்கு ராஜ குமாரர்களும் ராஜகுமாரியிடம் ப்ரியமாக இருப்பார்கள்.
அவர்கள் அத்தனை பேருக்கும் அவள் என்றால் உயிர்!
கருவேப்பிலைக் கன்று போல் ஒரே சகோதரி ஆயிற்றே!
இப்படித் தான் ஒரு நாள்!
விளையாடச் சென்ற ராஜகுமாரியைக் காணவில்லை!
பதைத்துப் போய் விட்டார்கள் ராஜகுமாரர்கள்!
மஹரிஷியிடம் ஓடிப் போய் சொன்னார்கள்!
தியானத்தில் ஆழ்ந்த மஹரிஷி சொன்னார்.
“ கவலை வேண்டாம்..ராஜகுமாரி கிடைத்து விடுவாள்” என்றவர் மேலும்
சொன்னார்:
“ஹூம்....பஹதத்தன் வம்சம் இப்படியா போக வேண்டும்!”
அவர் சொன்னது போல், இரண்டு நாள் கழித்து, ராஜ குமாரி வந்தாள்...
ஒரு குதிரையுடன்!
“இதென்னது” என்று ராஜகுமார்கள் குதித்தார்கள், அவள் சொன்னதைக் கேட்டு!
ராஜ குமாரி தீர்க்கமாகச் சொன்னாள் : “இந்த குதிரை என்னுடன் தான் இருக்கும், இனி மேல்!”
கடைசியில் அவள் பிடிவாதமே வென்றது..
அந்த நான்கு ராஜ குமார்களும், அந்த ராஜ குமாரியும் அரண்மனை திரும்பினர்.
அந்த குதிரையும் தான்!
அந்த ராஜ குமாரர்களுக்கு அந்த குதிரையை கொஞ்சம் கூட பிடிக்கவில்லை!
வேண்டா வெறுப்பாகத் தான் அதைப் பார்த்தார்கள்..
ஆனால், அந்த ராஜகுமாரியின் கட்டளைப் படி, அதற்கு ராஜோபசாரம்!
ராஜகுமாரியின் கண்களுக்கு ..ராஜகுமாரியின் மனசுக்கு... அந்த குதிரை இரவில் ஒரு அழகிய ஆண் மகனாய் தோன்ற....!
ஒரு நாள் இரவில் அந்த குதிரை சொன்னது.
“ராஜ குமாரி..என்னை மறந்து விடு... நான் மறுபடியும் காட்டிற்கேப் போகிறேன்”
“முடியாத்”
“பிடிவாதம் வேண்டாம் ப்ரிய ஸகி..உன் அண்ணன் மார்களைப் பார்த்தால் எனக்கு
பயமாக இருக்கிறது..ஏதாவது சூழ்ச்சி செய்து என்னை கொலை செய்து விடுவார்கள்”
“ஒன்றும் நடக்காது.. நான் இருக்கிறேன்”
“ நீ இருப்பாய்... நான் இருப்பேன் என்று தோன்றவில்லை”
” நீ இல்லாமல் நானும் நானல்ல”
இந்த உரையாடல் முடிந்து நான்கைந்து நாட்கள் இருக்கும்.
ஒரு முரசு அறிவிப்பு!
“ மன்னன் அஸ்வ மேத யாகம் செய்யப் போகிறானாம்.”
ராஜ குமாரி துவண்டாள்..அழுதாள்...அழற்றினாள்...ஒன்றும் பயனில்லை!
அவள் குதிரை தான் அஸ்வ மேத யாக க் குதிரையாம்!
அந்த ராஜ குமார்கள் பிடிவாதமாக நின்றார்கள்..
கடைசியில் அவர்கள் பிடிவாதமே வென்றது!
அதன் பிடரியைப் பிடித்துக் கொண்டு பிரியா விடை கொடுத்தாள், அந்த
ராஜகுமாரி.
திட்டமிட்டபடி அடுத்த ஐந்தாம் நாள் வந்தது அந்த செய்தி!
“ கள்வர்கள் அந்த குதிரையைக் கொன்று விட்டனர்”
வடக்கிலிருந்து வந்தது அச்செய்தி!
ராஜகுமாரி அழவில்லை..
அப்படியே வடக்கு பார்த்து ஹடயோஹத்தில் அமர்ந்து விட்டாள்!
அந்த அஸ்வம் இறந்த ஐந்தாம் நாள்....
அவளும் இறந்து விட்டாள்!
தான் கூறிய வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்க வேண்டி, தன் இன்னுயிரைத்
துறந்தாள், அப்பேதை!
“ நீ இல்லாமல் நானும் நானல்ல!”
பின்னொரு காலத்தில், குருஷேத்ரப் போரில் தர்மன் “அஸ்வத்தாமா கதா குஞ்சரஹ” என்று சொன்னானாம்..சொல்லும்போதே, அது வரை தரைக்கு மேல், இருந்த அவன் ரதம் தரையைத் தொட்டதாம்..
அஸ்வம் என்றால் குதிரை..ஆனால், அஸ்வத்தாமா என்பது ஒரு யானையின் பெயராம்..அதையும் அந்த கதாகுஞ்சரஹ என்பதை மெதுவாகச் சொன்னானாம் தர்மன்.
தன் மகன் அஸ்வத்தாமன் சிரஞ்சீவி என்பதை துரோணாச்சார்யார் மறந்து விட்டாரா?
ஏதாவது மாயை அவர் கண்களை மறைத்து விட்டதா?
துரோணர் என்கிற மாவீரனை வீழ்த்த அந்த மாயக் கூத்தன் விரித்த வலை இது!
வலையில் சிக்கியவன் யானைப் போரில் வல்லவனான பஹதத்தன்..
அவனுடன் கூடவே மாண்டு போன அந்த நான்கு ராஜ குமாரர்கள்!
தன் அருமை மகள் இறந்த உடனேயே மனதளவில் இறந்து விட்டான், பஹதத்தன்! குரிஷேத்ரத்தில் இறந்தது பிம்பம் மட்டுமே!
ஆக, ஒரு யானையை வீழ்த்தியது குதிரை!
ஒரு வம்சமே புல் பூண்டு இல்லாமல் போய் விட்டது என்பது மட்டும் இதில் உண்மை!

பின்குறிப்பு : இது மகாபாரத காப்பியத்தின் உபகதை அல்ல!
அடியேனின் கற்பனை மட்டுமே!


Saturday, May 5, 2012

முதல் பாடல் இது !

பட்டத்தை பறக்க விட்டு
பரதேசி போல் முடி வளர்த்து
பக்கவாட்டில் கிருதாவை
பாங்குடனே வளர்த்து விட்டு
இஞ்சி தின்ற குரங்கு போல்
எப்போதும் முகம் தொங்கி
நண்பர்கள் புடை சூழ
கடை வீதி நடந்து சென்றால்,
ஜவுளிக்கடை பொம்மை கூட
சட்டென்று திரும்பிக் கொள்ளும்!


( இது ஒரு மீள் பதிவு )

Wednesday, May 2, 2012

ஆயிரம் பொற்காசுகள்......




“தருமி”
“யாரோ என்னை கூப்பிடறாங்க?”
“யாருமில்லை நான் தான்”
“நான் தான்னா?”
“நான் தான்னா நான் தான்”
“ஒண்ணும் தெரியலியே”
“இன்னுமா தெரியவில்லை..என்னைப் பார்”
“ஐயையோ..மறுபடியும் நீயா..வாணாம்பா ஆள வுடு”
“கவலைப் படாதே, தருமி..இந்த முறை எந்த ஏமாற்றமும் இல்லை..உனக்கு ஆயிரம்
பொற்காசுகள் வாங்கித் தருகிறேன்”
”யப்பா..ஆள வுடுப்பா.. நீ தானே..எனக்கு நல்லாத் தெரியுமே?”
“ உன்னை விடுவதாக இல்லை..உனக்கு ஆயிரம் காசு வாங்கித் தராமல் நான் ஓயப் போவதில்லை”
“ நீ ஓய மாட்டே...நான் ஓஞ்சுட்டேன்..உன்னை நான் ஏதாவது உதவி கேட்டேனா.. நீ யாக ஓடி வந்து எனக்கு ஏன் உபத்திரவம் தரே?”
“கவலைப் படாதே, தருமி..இந்த முறை யாம் ஏமாற மாட்டோம்..”
“ ஆமாம்..இந்த பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல..ஆனா, கடைசீல, கழனிப் பானையில டொக்குன்னு கையை விட்டா மாதிரி நக்கீரனோ, பக்கீரனோ அவன்ட்ட நம்மள மாட்டி விட்டுடு..”
“தருமி, கவலைப் படாதே, நக்கீரன் ரிடயர்ட் ஆயிட்டான்..”
“அதனால, என்ன வேறோருத்தன்ட்ட என்னை மாட்டி விடப் போறே, அதானே?”
“எம்மை நம்பியவரை நட்டாற்றில் விடுவது நம் பழக்கம் அல்ல”
“ அப்ப பாழும் கிணற்றில் தள்ளித் தான், பழக்கம்..அப்படித்தானே? ஏன்யா வடிவேலுவை
பிடிச்ச பார்த்திபன் மாதிரி என்னை விடமாட்டேங்கிற? நான் என்ன பாவம் செய்தேன்”
“கவலைப் படாதே ..இம்முறை அந்த ஆயிரம் பொற்காசுகள் உனக்குத் தான்!”
”உன்ன..உன்ன நான் கேட்டேனா..ஏதோ காமா சோமான்னு குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கேன்..ஆள விடு அப்பனே”
“உன்னை விடுவதாக இல்ல..”
“அப்ப புடிச்சுக்கோ..?”
“இது மிகவும் எளிது..இந்த கல்வெட்டைப் பார்..இதில் ஐந்து..ஐந்தே வெண்பாக்கள் இருக்கின்றன..கேள்வி மிகவும் எளிது..அந்த ஐந்து வெண்பாக்களையும் யார் எழுதியது என்று சொன்னால் போதும்..ஆயிரம் பொற்காசுகள்..அதிலும் முதலில் வரும் நூறு நபர்களுக்கு முதல் பறவை ஊக்குவிப்புத் தொகையாக நூறு வெள்ளிக் குத்து விளக்குகள்..” பாண்டியன் பரிசு தருகிறான்..
“முதல் பறவை ஊக்குவிப்புத் தொகை..அப்படின்னா..”
“EARLY BIRD INCENTIVE”
”யப்பா..யப்பா போதும்பா..”
”பயப்படாதே, தருமி..அந்த கல்வெட்டில் உள்ள பாக்களைப் பார்..”
முதல் பாடல்
இச்சை பற்பல இனிது துய்ப்பினும்,
பச்சை மூங்கிலே பத்தியமாம், நெஞ்சே!
கச்சி ஏகம்ப நாதனைக் கண்டு கொண்டால்,
சொச்ச காலமும் சுகம் தரும் தானே!

”ஐயையோ முதல் பாடலே நெஞ்சைப் பொளக்குதே.. பட்டினத்தாரா..காளமேகமா...ஒரு எழவும் தெரியலேயே!”
”ஏய் கூச்சல் போடாதே, இரண்டாவது பாடலைப் பார்.”
இரண்டாவது பாடல்
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்ததில்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்ட பின்,
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ,
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே..
”இதென்னடாது..இத்தனைக் குழப்பமா இருக்கு.. நம்ம டி. ராஜேந்தரோ அல்லது வலம்புரி ஜானோ தான் எழுதியிருக்கணும்”
“ தருமி, இதென்ன விளையாட்டு..அமைதியாக மூன்றாவது பாடலைப் பார்”
மூன்றாவது பாடல்
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்,
வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறைந்த கோடியே..
“யப்பா..இந்த ஆட்டத்துக்கு நான் வல்லே..என்ன பாட்டு இது..அப்பப்பா.. நம்ம வாலி இல்ல
கண்ணதாசன் எழுதியிருப்பாரோ? அவரு தானே ஊர்...காய்..தேன் எல்லாம் வைச்சு பாட்டு எழுதறவரு”
“ பொறு தருமி.. நான்காம் பாடலைப் பார்”
நான்காவது பாடல்
மைத்தடங்கண் மார் தேவி வார் துகிலை யான் பிடிக்க
அற்று விழுந்த அருமணிகள் மற்றவற்றை
கோக்கேனோ என்றுரைத்த கொற்றவர்க்கே, என்னுயிரை
போக்கேனோ வெஞ்சமத்து புக்கு?”

”பாட புஸ்தகத்தில படிச்ச பாட்டு போல,இருக்கே..அரிச்சந்திர புராணமா இது?”
”உன் தலை! ஐந்தாம் பாடலைப் பார்”
ஐந்தாம் பாடல்
சண்டாளி தாடகை சூர்ப்பனகையைப் போல் வடிவு
கொண்டாளை பெண்டாகக் கொண்டாயே தொண்டா!
செருப்படி தான் உன் சேரன்ன செல்வம்..
நெருப்பில் வீழ்ந்திடுதல் நேர்.

”யப்பா..பாட்டுன்னா இது பாட்டு..எவனோ என்ன மாதிரி ஒருத்தன் அனுபவிச்சுப் பாடி இருக்கான்..அவன் நல்லா இருக்கணும்..”
” அப்ப தருமி...இந்த ஐந்து வெண்பாக்கள் எழுதியவர்களை நான் சொல்கிறேன்..போய் ஆயிரம் பொன் வாங்கிக் கொள், பாண்டியனிடமிருந்து”
“ யோவ்வ்...வ்வ்வ்வ்...... நான் உன்ன எதாவது கேட்டேனா..ஏன் என் வம்புக்கே வரே..ஆள விடுப்பா..வேண்டாம் பா..இந்த வெண்பா விளையாட்டுக்கு நான் வல்லேப்பா...”
” தருமி...தருமி..”
”என் பான்னு சொல்லி உன் பாவை காண்பித்து வாங்கிக் கட்டிக் கொண்டது போதும்பா..வேணடாமப்பா இப்ப வெண்பா”
கூப்பிட..கூப்பிட தருமி தலை தெறிக்க ஓடுகிறார்...
” அவன் போகட்டும்...சுடு பால் குடித்த பூனை அப்படித் தான் சுறுசுறுப்பாய் ஓடும்..உங்களுக்குத் தெரிந்தால், புலவர்களின் பெயர்களைச் சொல்லி, பாண்டியனிடம் ஆயிரம் பொற்காசுகள் வாங்கிக் கொள்ளுங்கள்..பகுள ப்ஞ்சமி அன்று
பொற்றாமரைக் குளத்துக்கு பாண்டியன் வருகிறான்..பரிசினை வெல்லுங்கள்..”