"சார்..ஒங்களுக்கு, ஒரு பையன், இரண்டு பொண்ணுங்க!" என்றார் பக்கத்தில் இருந்தவர்..
"ம்"
"கையை திறக்காதீங்க..நல்ல செல்வாக்கான கை இது!"
"ம்"
கிண்டல் பண்ணுகிறேனோ என்ற சம்சயத்தோடு பார்த்தார்.என் பேஸ்து அடித்த முகத்தை வைத்து அவரால் ஒரு மண்ணும் கண்டு பிடிக்க முடியவில்லை..
"நீங்க எஜுகேஷன் லைன்"
கால்களை நன்றாக நீட்டிக்கொண்டேன்..ஆற்று மணலில் கைகளை பின்னால் விஸ்ராந்தியாக வைத்துக் கொண்டு கால்களை நீட்டிக் கொண்டு இருப்பது பரம சுகம்..
"நான் திண்டுக்கல்,நீங்க?"
"திருக்கோடிக்காவல்"
"திருவானைக்காவலா?"
'ஐயோ'என்று வாய் வரை வந்த வார்த்தையை ஒரு பயத்துடன் கொட்டாவியாய் கன்வர்ட் பண்ணினேன்...
பக்கத்தில் உள்ள ஒரு பாகவத சிரோன்மணி 'தரன்னா' என்று இழுத்தார்..
நான் அந்த பக்கம் திரும்பி 'ஹம்ஸத்வனி தானே!' என்றேன்...
"ஆமாம்..அதுல தான் நிஷாதம் கொஞ்சம் தூக்கலாக இருக்கும்.."
இந்த பக்கம் திண்டுக்கல் என்னை விடுகிறார் போல இல்லை.
எல்லா பக்கமும் மக்கள் தப்பு தப்பாய் தாளம் போட்டுக் கொண்டு இருந்தார்கள்...
" சார்..நீங்க கோபக்காரர்...இப்ப கையை விரிங்கோ..இந்த சாலமன் ரேகை இருந்தா நீங்க எஜுகேஷன் லைன்...அதோ அந்த ரேகை ஒங்க குழந்தைகளைப் பற்றிய டிடேய்ல்ஸ் சொல்லும்."
தரன்னா தன் பங்கிற்கு யாரும் கேட்காமலேயே ஶ்ரீ யை மத்யமாவதி என்றும் மத்யமாவதியை ஶ்ரீ என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்..
"சார்..ஒவ்வொருத்தர் கச்சேரி சோபிக்கறதுன்னா,அவர் அதுல அசுர சாதகம் பண்ணியிருக்கார்னு அர்த்தம்...ஒரு வர்ணம் சூப்பரா வரணும்னா, அதை பாடறவர் அதை லட்சம் தடவை சாதகம் பண்ணியிருக்காராக்கும்..........நாம அதை லட்சத்து ஒண்ணாம் தடவை கேட்கிறோம்...ஆஹா....இந்த எடுப்புக்கு பத்மஶ்ரீயே குடுக்கலாம்!"
"பக்கத்து வீட்டுகாரருக்கு பத்மபூஷனே குடுக்கலாம்" என்றேன் நான் 'ஏதோ நாங்கள் இரண்டு பேர் மட்டும் அந்த பத்ம விருதுகளை டிஸைட் பண்ணுகிற கமிட்டியில் இருக்கிறார் போல்!'
"எதுக்கு?"
"அந்த மஹானுபவர் தானே இந்த கண்றாவியை லட்சம் தடவை கேட்டது!"
திண்டுக்கல் டர்ன் இப்ப..
"அதென்ன....பேரு கத்ரின்னு"
"கத்ரிங்கறது பேர் இல்ல.....மங்களூர் பக்கத்தில் இருக்கற ஒரு ஊர்"
"சார்...2001ல திண்டுக்கல் போர்ட் ஹைஸ்கூல் ஹெச் எம் மா இருந்து ரிடையர்ட் ஆனேன்..ப்ரானிக் ஹீலிங் ப்ராக்டீஸ் பண்றேன்..வாஸ்துவும் தெரியும்..." என்றார், திண்டுக்கல் மறுபடியும்.
"ம்"
"ரெய்கி வேற....ப்ரானிக் ஹீலிங் வேற....தெரியுமா?"
"தெரியும்,"
நடு நடுவே, கச்சேரிகளும் கேட்டுக் கொண்டிருந்தோம்..
ஓ.....சொல்ல மறந்துட்டேனே...இந்த சம்பாஷணைகள் எல்லாம் நடந்த இடம், தியாகையர் ஆராதனை மண்டபம் ....சுகமான காவேரி ஆற்று மணல் படுகை, திருவையாறு!