Wednesday, January 27, 2016

பீஸ் பீஸ் ஆக ஆக்கும் பேஸ் புக்!

"சாயங்காலம் ஆபீஸ் முடிஞ்சு வந்ததும், சந்தி பண்றது"
"சரி"
"கடைக்குப் போய் மளிகை சாமான் வாங்கிண்டு வரணும்"
"மளிகை கடைக்கு போன் பண்ணேன் ப்ளீஸ்!"
"அது சரி,எப்ப பார்த்தாலும் என்ன FACE BOOK வேண்டி கிடக்கு?"
"இப்ப என்ன பண்ணனுங்கறே?"
"மில்லுக்கு போய் அரிசி மாவு திரிச்சிண்டு வரணும். FACE BOOK லேர்ந்து கொஞ்சம் எழுந்திருங்கோ!"
"FLOW நல்லா வரும், போது தான் DISTURB பண்ணுவ..ஒரு நிமிஷம் இரேன்,ப்ளீஸ்!"
"FLOW ஓ...BLOW ஓ...ஏதோ ஒண்ணு ஒங்களுக்கு நிச்சயம் கிடைக்கத் தான் போறது"
"என்ன சாபமா?"
"ஆமாம்,இங்கே வழியறது போறாதுன்னு,போன்லியும் வழிஞ்சாறது போல இருக்கு!"
"என்ன உளர்றே?"
"அதாரு, ஸ்நேகா...அஞ்சாறு மிஸ்டு கால்!"
எங்கே, என்று பரபரவென போனை எடுத்து,அந்த ஸ்நேகாவிற்கு கால் பண்ணினேன்...
"சாமி....நாந்தேன் பாம்பு புடிக்கற ஆறு முகம் பேசறேன்...எங்ஙன இருக்கீங்க? ஆறு மணிக்கு பாம்பு புடிக்க வரட்டுமா?"
கரகரப்பான கட்டைக்குரல் போனிலிருந்து வந்தது.
இங்கே, உட்கார்ந்து கொண்டிருந்த எனக்கும் உயிர் வந்தது!

Thursday, January 14, 2016

நா நயம்! நாணயம்!!

டொக்....
ஒற்றை ரூபாய் நாணயமொன்று கண்டக்டரின் தோல் பையில் விழுந்தது.
பக்கத்தில் புத்தம் புதியதாய் ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டு!
'நாம யாரு....நம்ம ஜபர்தஸ்த் என்ன....இந்த தோசிப்பயல் நமக்கு பக்கத்துல சரிக்கு சரியா உட்கார்ந்திருக்கானே' என செம எரிச்சல் அந்த ஆயிரம் ரூபாய் நோட்டிற்கு!
அடுத்த ஐந்து நிமிஷத்தில் அந்த ஒற்றை ரூபாய் நாணயம் எடுக்கப் பட்டு விட்டது!
ஒரு வாரம் கழித்து அவை இரண்டும் ஒன்றை ஒன்று சந்தித்துக் கொண்ட போது....
"அண்ணே, எப்டீண்ணே இருக்கீங்க?"- ஒற்றை ரூபாய் நாணயம்..
"நல்லா இருக்கேன்..அங்கேர்ந்து, ஆபீஸ் கேஷ் செஸ்ட்டுக்கு போனேன்....அடுத்த நாளே பேங்குக்குப் போயாச்சு...ஏஸி ரூம் வாசம் தான், கொஞ்ச நாளா..." 
.....இந்த பன்னாடையையும் ஒரு ஆளா மதிச்சு கேட்க வேண்டியிருக்கிறது பாரு!
"ஆமா, நீ எப்டி இருக்க?"
"நாய் பொளப்புண்ணே நம்மளோடது.....ஒரு ஐம்பது  பேருகிட்டயாவது போயிருப்பேன்....அதுல ஒரு புறம்போக்கு ஒரு பிச்சைக் காரனுக்கு என்னைப் போட, அந்த பிச்சைக்காரப் பய என்னை தெருவுல தூக்கி எறிஞ்சுட்டாண்ணே"
குலுங்கி குலுங்கி அழுதது அந்த ஒற்றை ரூபாய் நாணயம்...
"கூல்.....கூல்....." என்று அதை சமாதானப் படுத்தியது, அந்த ஆயிரம் ரூபாய்நோட்டு.
அந்த சமயம், நாதஸ்வரக் குழலோசை, கேட்க கொட்டு மேளம் கொட்ட, மாங்கல்ய தாரணம் நடந்தேறியது...
"மொய் பணம் கொடுத்துட்டு சாப்பிட போலாமா?"
சட்டைப் பையிலிருந்து, ஆயிரம் ரூபாய் நோட்டு எடுக்கப் பட்டது.
"ஒரு ரூபாய் காயின் இருந்தா கொடுங்க....ஆயிரத்தோரு ரூபா கொடுத்தா தான் சபைல மருவாதி!"
மாரில் ஏற்பட்ட எரிச்சலுக்கு,மயிற்பீலியால் மருந்து தடவியது போல இருந்தது அந்த ஒற்றை ரூபாய் நாணயத்திற்கு!