Wednesday, April 28, 2010

பந்தம்..


அம்மா போய் விட்டாள்!
போயே விட்டாள்!!
ஏற்கனவே எதிர்பார்த்தது தான். போன வாரம், ராகவன் வெளியூர் டூர் போக வேண்டும். அம்மாவுக்கு ரொம்பவும் முடியாமல் போனதினால் டூரை 'கேன்சல்' செய்தான். என்ன ஒரு நீசத் தனமான எதிர்பார்ப்பு!
US ல் வேலை பார்ப்பவன் தான் லீவ் கிடைக்காது இந்த ட்ரிப்பே கிழம் போனால் தேவலை என்று தவித்துக் கொண்டிருப்பான் என்கிற காலமெல்லாம் இப்போது போய் விட்டது. உள்ளூர் காரனும் அப்படித் தான் இருக்கிறான்.
போன வாரம் தான் அண்ணா ஹைதராபாதிலிருந்து வந்து அம்மாவை பார்த்து விட்டுப் போனான்.'அடுத்த தடவை வரும்போது அம்மாவின் முகமுழி கிடைக்குமோ இல்லையோ என்று வேறு சொன்னான். அவனும் அதே எதிர்பார்ப்பில் தான் வந்திருக்க வேண்டும்!
'என்ன மனிதன் இவன்...' யோசித்துப் பார்த்ததில் 'இங்க மட்டும் என்ன வாழுதாம்' என்று தோன்றியது, ராகவனுக்கு.
பத்து மாத பந்தம்!
உலகிலேயே பிரதிபலன் எதிர்பாராமல் கிடைக்கும் ஒரே பொருள் தாயன்பு. அந்த அம்மாவிடம்...அந்த தெய்வத்திடம் ...நானும், அண்ணாவும் எவ்வளவு கேவலமாய் நடந்து கொண்டு விட்டோம்!
இவன் பெண்டாட்டி முணுமுணுத்தால் அண்ணாவிடம் அனுப்ப வேண்டியது..அவன் பெண்டாட்டி முணுமுணுத்தால், இவனிடம் அனுப்ப வேண்டியது.
என்ன ஒரு பந்தாட்டம்!
அம்மா பாத்ரூமில் வழுக்கி விழுந்து, காலை ஒடித்துக் கொண்ட போது எப்படி அவளை அவ்வளவு தூரம் அண்ணாவிடம் அனுப்ப போகிறோம் என்று தான் வருத்தப் பட்டான்.
கெட்டிக்காரன். நைசாய் நம்மிடம் தள்ளி விட்டானே என்று அவனிடம் ஆரம்பத்தில் ஆத்திரப்பட்டான். இரண்டு சம்பளக் காரன். குழந்தைகளை வளர்த்து ஆளாக்க அம்மாவின் உதவி தேவையாக இருந்தது. குழந்தைகள் வளர்ந்து பெரிசானதும் இவனிடம் அனுப்பி வைத்தான். இவன் பெண்டாட்டி பேச்சைக் கேட்டு, இரண்டு மாதம் கழித்து, அவனிடம் அனுப்பல். இப்படி சில காலம் பந்தாட்டம்.
இப்போது கடைசியில்..இவனிடம் அம்மா!
பழங்கதை எதற்கு? நேராகவே விஷயத்திற்கு வருவோம். சுபஸ்வீகரணம் வரை குறைந்தது பத்தாயிரம் ரூபாயாவது ஆகும். அம்மா இங்கே இருந்ததினால்...எல்லாவற்றையும் நம் தலையில் கட்டி விடுவானோ? அது சரி..அவன் தானே மூத்தவன். அவன் தான் எல்லாவற்றையும் எடுத்துப் போட்டுக் கொண்டு செய்யணும்? அது தானே முறை?
ஜாஸ்தி சம்பளக்காரனுக்கு ..கஞ்சத் தனமும் ஜாஸ்தியாக த்தான் இருக்கும் போல இருக்கு. அவ்வளவு தூரம்..ஹைதராபாதிலிருந்து வரானே ..எதாவது வாங்கிண்டு வந்தால் என்னவாம்? இப்பத் தான் சர்க்கரை வந்து பாடாய் படுத்தறது..புல்லா ரெட்டி ஸ்வீட் ஸ்டால்னு ஒண்ணு இருக்காமே.. அடச்சே..அம்மா இங்கே சவமாய் கிடக்க புள்ளைக்கு புல்லா ரெட்டி ஸ்வீட் கேட்குதோ?'
நினைவுகளை, பாழ் மனத்திலிருந்து விரட்டப் பார்த்தான். அது அவனை விடுவதாக இல்லை!..
'... இப்பத் தான் பசங்கள்ளாம் பெரிசாப் போய் காலேஜ் படிக்கிறான்கள்..அந்த நாளில் இருந்தே அண்ணா கை குறுகிண்டுடும். பசங்களுக்கு ஆசையாய் பெரியப்பா ட்ராயர்,சட்டை வாங்கிண்டு வந்தான்னா, எவ்வளவு சந்தோஷம்! நானே பண்ணினதுன்னு மன்னி முறுக்கு, தட்டை எதாவது கொண்டு வருவா..வாயில வைக்க வணங்காது அது!'
' என்னய்யா இது அநியாயமாய் இருக்கு. காட்டுக்கு தூக்கிட்டுப் போக நாப்பது ரூபாயா...நீ நகரு..நான் பாத்துக்கறேன்...' - அண்ணா கத்தினான்.
'ஒரு காஃபி கெட்ட கேடு..இரண்டு ரூபா விக்குது. ஏதேதுக்கோ அர்த்தம் இல்லாம செலவு பண்ணுவீங்க..எங்களுக்கு கொடுக்கணும்னா மட்டும் ஆயிரம் யோஜனை...ம்..எங்க நேரம்யா..'
'... காஃபியா குடிக்கப் போறான்? எந்த கண்றாவியையோ குடிச்சுட்டு வேட்டி அவிழ்ந்தது கூடத் தெரியாம..ரோட்டில உருளப் போறான்...பேச வந்துட்டான்..பாரேன்..'
' விட்டுத் தள்ளுங்கோ ஸார்..நாம செத்தா தான் அவன் பொழைக்கவே முடியும். அப்படி ஒரு பொழைப்பு அவனுக்கு..' சமாதானப் படுத்தினார், ஒருவர்.
அண்ணா முணுமுணுத்தவாறே நகர்ந்தான்.
' உசிரோட இருக்கிறதை விட செத்துப் போறது கொஞ்சம் 'காஸ்ட்லி' தான். எங்க தாத்தாவுக்கு 'மைல்டா ஹார்ட் அட்டாக்' னு கோட்டைக்கு டாக்ஸியில் போறோம். ஐம்பது ரூபா தான் கேட்டான், ஆஸ்பத்திரிக்கு. இரண்டு நாள்ள உசிர் போயிடுச்சு. ஊருக்குத் திரும்பி வர்ரதுக்கு நூத்தைம்பது ரூபாய் கொடுத்தேன். இப்ப சொல்லுங்கோ, உசிரோடு இருக்கிறது எவ்வளவு சீப்னு'
சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் யார் யாரோ பேசிக் கொண்டே இருக்க...யார் பேசுவதும் மனதுக்கு ஒட்டவில்லை.அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டான், ராகவன்.
சீக்கிரம் 'அதை' எடுத்துக் கொண்டு போனால் தேவலை. டிங்குவும்..டிட்டுவும் பசி பொறுக்க மாட்டான்கள்.....
அழுகை.....
சட்டென சுருக்கென்றது உள்ளே...
நம்மை ஆளாக்கி..பேங்க்கில் க்ளார்க் உத்யோகம்...கை நிறைய சம்பளம்...இந்த கை, கை நிறைய சம்பளம் வாங்க..அந்த கை எத்தனை பேர் வீட்டில்..அழுந்த..அழுந்த..பத்து தேய்த்திருக்கிறது!.... மான அவமானம் பாராமல்..எத்தனை பேர் வீட்டில் சமையல் வேலை செய்திருக்கிறது?


'சித்தப்பா..சித்தப்பா...'
' யாரது..யார் வேணும்...' - சித்தியின் குரல்.
'நான் தான் ராகவன் வந்திருக்கேன், சித்தி'
உள்ளே...கசமுச...சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு கதவு திறக்கப் படுகிறது.
' என்னடா ராகவா, இந்த நேரத்தில்..' கதவை ஒருக்களித்துக் கொண்டு,எங்கே இவன் வந்து விடப் போகிறானோ என்கிற பயத்தில்..சித்தப்பா....பக்கத்தில் சித்தி, கரடி பொம்மைக்கு 'கீ' கொடுப்பது போல...
' சித்தப்பா..சித்தப்பா..அப்பாக்கு கண் சொருகி..என்னமோ மாதிரி இருக்கு, சித்தப்பா..எங்களுக்கெல்லாம் ஒரே பயமாயிருக்கு...அம்மா உங்களை கையோடு...'
' ஓவரா போட்டிருப்பான். என்னடா இது...இப்படி கொட்டற மழையில..'
' இல்ல சித்தப்பா..அப்பா உசிரோட இருக்காளான்னே தெரியலே ...'
குலுங்கி..குலுங்கி அழுதான், ராகவன்.
' இருடா வரேன்...'
பரபரப்புடன் உள்ளே போய், சட்டையை மாட்டிக் கொண்டார், சித்தப்பா.
'க்கும்' - ஒரு கனைப்பு தான் கனைத்தாள்,சித்தி.
' உங்களுக்கோ 'இயாஸ்னோஃபோலியா' கொட்டற மழையில ...போனா..இங்க நானில்ல லோல் படணும்...'
உள்ளுக்குள் யாருக்கும் தெரியாமல்,ரொம்பவும் மங்கலாய் எரிந்துக் கொண்டிருந்த 'மனிதாபிமானம்' என்கிற அந்த 'ஜீரோ வாட்ஸ்' பல்பும் பட்டென்று அந்த வார்த்தையில்
ஃப்யூஸ் ஆகி விட்டது!
சித்தப்பா வரவில்லை!
அப்பா இறந்து போய்..உறவுக்காரர்கள் எல்லாரும் எங்கே ஒட்டிக் கொண்டு விடுவார்களோ என்று பயந்து...
வாழ்க்கை என்ற 'ரேஸி'ல், தனி ஒரு ஆளாய், இரண்டு இரண்டுங்கெட்டான் குழந்தைகளை சுமந்து கொண்டு...தள்ளாடி..தள்ளாடி..அம்மாவும் தன் இலக்கினை அடைந்து விட்டாள்!
...ராகவா ப்ளீஸ்டா..ராகவா..இன்னும் ஒரே ஒரு சான்ஸ்...இத்தனை நாள் அம்மாவை கவனிக்காமல் விட்டதற்காக பரிகாரம்...
அழுடா....குலுங்கி..குலுங்கி அழு...
ஆனால் சமயத்தில் அழுகை ..வருவேனா...என்கிறதே, சனியன்!
......சோகமான திரைப்படம்
...ஆஃபீஸ் பரிட்சையில் பெயில்
....காதல் தோல்வி
...ப்ரமோஷன் கட்....
ஊகும்...பாறாங்கல்லாய் ஆய் விட்டதோ? கண்ணிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை!
அழுகை வருவது போல் முகத்தை வைத்துக் கொண்டான். ரொம்ப..ரொம்ப..செயற்கையாய் இருந்தது, அது!
மற்றவர்களுக்காக இல்லை..அவனுக்காக..அவனுடைய அம்மாவுக்காக ஒரு அழுகை...ஒரே ஒரு அழுகை...அழுடா..ராகவா அழு..
என்ன அவஸ்தையடா இது! இது சமயம்..அழ வேண்டும்...அழுகை அனிச்சையாக
வர வேண்டும்.. உம்மென்று...உறவிலிருந்து இவன் மட்டும் பிரிந்து தனியாக....ஆண்டவனே!
அட சட்...அம்மாவை தூக்கி விட்டார்கள்!
'....டேய் பசங்களா..இந்தாங்கடா ஆளுக்கு ஒரு நெய் பந்தம்...இந்தா டிட்டூ நீ பிடி...இந்தாடா அம்பி உனக்கு...'
' எல்லாரும் சொல்லுங்கோ ...தேவ..தேவ..மஹா தேவ...'
' தேவ தேவ ...மஹா தேவ....'
நகர ஆரம்பித்து விட்டாள், அம்மா!
ம்ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்மாஆஆஆஹ்....ஹ்....ஹ்..'
நாபிக் கமலத்திலிருந்து தீப் பந்தம் ஒன்று பீறிட்டு எழ..அடி வயிற்றிலிருந்து..ஆங்காரமாய்...ஆக்ரோஷமாய்...

' ஐயோ..எங்க அம்மாவை தூக்கிண்டு போறாளே.. '
தூக்கிய நால்வரும் சம உயரம் இல்லாத காரணத்தினால்.. 'பேலன்ஸ்' கொஞ்சம் தடுமாற... 'அம்மா' தலை சற்று சாய..அம்மா அவனைப் பார்த்து
'அழாதேடா குழந்தே...' என்று சொல்வது போல் அது தோன்றவே,
குலுங்கி...குலுங்கி அழுதான், ராகவன்!
********
என்னுரை : இந்த சிறுகதை தமிழ் அரசி 17.10.1993 இதழில் வெளி வந்தது.

Wednesday, April 21, 2010

அஞ்சலி..அஞ்சலி..அஞ்சலி....


'காலா.. காலருகில்
நீ வாடா உன்னை,
நான் காலால்
மிதிக்கிறேன்' என்று
கர்ச்சித்த...
பாரதி இன்று
இல்லை என்கிற
தைர்யமா உனக்கு?
எத்தனை பேர்களை
தூக்கி சென்று விட்டாய்..
பாவி..படு பாவி !
இன்னுமா உன்
பசி அடங்கவில்லை?
தாகம் தீரவில்லை?
கடல் கடந்த
மௌரிய பேரரசுகளுக்கு,
CORE COMPETENCE
என்கிற 'அர்த்த சாஸ்த்திரம்'
தந்த அந்த
அறுபத்திமூன்று
வயதே ஆன
நம் சாணக்கியனை,
எடுத்துக் கொள்ள
எப்படியடா
உனக்கு மனம்
துணிந்தது?
அறிவு கெட்ட மூடனே..
என் பெண்
US போகும் போது,
சந்தோஷப்பட்டேனே
அட்லீஸ்ட்
அவள் கண்களினால்
ஆவது அவரைப்
பார்ப்பேன் என்று!
எப்படியடா அது
உனக்குத் தெரிந்தது?
பீட்டர் ஃப். ட்ரக்கருக்குப்
பிறகு,
ஒரு பெரிய ஆள்
நம்ம ப்ரஹ்லாத்
என்று தலை
நிமிர்ந்திருந்தேனே..
உனக்கு அது
பொறுக்கவில்லையா?
என் வாழ் நாள் சாதனையாய்,
சர்வதேச அளவில்,
BUSINESS உலகில்
நம் எல்லாரையும்...
தலை நிமிர வைத்த..
C.K.PRAHALAD உடன்..
ஒரு நிமிடம்..
ஒரு நிமிடமாவது..
பேச வேண்டும் என
நினைத்தேனே...
அதை நிராசை
ஆக்கி விட்டாயே,
பாவி!
பாரதி போனால்
என்ன...
இதோ
வாழையடி வாழையாய்
வந்த நான்
இருக்கிறேன்...
காலா
என் கண்ணெதிரில்
நீ வாடா..
உன்னை,
நான்
காலால்
மிதிக்கிறேன்!!!!!!!!!

Tuesday, April 20, 2010

கல்யாணமாம்...கல்யாணம்...


சமீபத்தில் உறவுக்காரர் கல்யாணத்திற்கு வெளியூர் சென்றிருந்தேன். எல்லாரையும் போல் முகூர்த்த நேரத்திற்கு தலையைக் காட்டி விட்டு,
ஊரை சுற்றிக் கொண்டிருந்தோம். எப்போது கல்யாண சத்திரத்தில் இருப்போம்..எப்போது ஊர் சுற்றுவோம் என்பதை யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டோம்!.

பொதுவாக கல்யாணம் என்பது குழந்தைகளுக்கும்..கிழவர்களுக்கும் பிடித்தமான நிகழ்வு. முன்னவர்களுக்கு கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாது. பின்னால் சொல்லப் பட்டவர்களுக்கு அந்த கஷ்டமானது இத்தனை வருடங்களில் சுத்தமாய் மறந்து போயிருக்கும்!

ஆனால் இந்த கல்யாணத்திலோ வித்யாசமாய் ஒரு சின்னப் பையன் எப்போது பார்த்தாலும் 'நை..நை..' என்று அழுது கொண்டிருந்தான். அவனுக்கு ஒரு பெரிய பலூன் வாங்கிக் கொடுத்தேன். அப்பவாவது அழுகையை நிறுத்தினானா என்றால் அது தான் இல்லை. என்னுடைய செய்கை அவனை மேலும் அழ வைத்து விட்டது. எனக்கோ ப்ராண சங்கடம். அவன் அழுகையை அதிகமாக்கினதில் என் பங்கு கணிசமாய் இருந்ததினால் அவனை ஆற..அமர்த்தி விசாரித்ததில்....
ஏண்டா கேட்டோம் என்றாகி விட்டது எனக்கு!
அவனுக்கு இப்பவே கல்யாணம் பண்ணி வைக்கணுமாம்!
பயல் எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு வந்திருக்கிறான். ஜான வாசத்தில் மாப்பிள்ளை போட்ட கோட், சூட்..கார் சவாரி...(எல்லா பசங்களும் போட்டிப் போட்டு உட்கார்ந்து கொண்டதால், அவனுக்கு காரில் இடமில்லாமல் போய் விட்டது. அது வேறு வருத்தம்) நிறைய ஃபோட்டாக்கள்...
விதம் விதமாய் பக்ஷணங்கள்....பழங்கள்...
அலங்கார சேரில் உட்கார வைத்தது....ஊஞ்சல்..
புதுசா குடை ...புது செருப்பு...
எல்லாவற்றையும் பார்த்து அவனுக்கும் கல்யாண ஆசை வந்து விட்டது.
இப்பவே தன்னை மாப்பிள்ளை ஆக்கினால் தான் ஆயிற்று என்று முரண்டு பண்ணினான். அவனை சமாதானம் பண்ணுவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது, எல்லாருக்கும்.
எதற்கு சொல்கிறேன் என்றால் அந்த ஒரு நாள் மட்டும் மாப்பிள்ளை என்பவன் ஒரு ஹீரோ. அவனை எல்லாரும் தாங்கு, தாங்கு எனறு தாங்குவார்கள். எப்படி பழம் விற்பவன் பழங்களை அடிக்கடி துடைத்துக் கொண்டிருப்பானோ...எப்படி சோஃபா..கட்டில் விற்பவன் அதுகளை துடைத்துக் கொண்டிருப்பானா அது போல...
இந்த சமயத்தில் ஒரு அறிஞர் சொன்னது எனக்கு ஞாபகம் வந்து தொலைத்தது!
அவர் சொல்கிறார்..' marriage is an agreement between the father of a bride groom and the father of a bride to sell the bride groom for some considerations like car, jewels etc..etc..'
இவர்கள் பண்ணும் ஆரவாரங்களும்...சடங்குகளும்...சாங்கியங்களையும் பார்த்தால் எப்படியாவது பெண் வீட்டாரிடம் பையனைத் தள்ளி விடுவதிலேயே குறியாக இருப்பவர்கள் போலத் தோன்றும்! அதற்கு சாட்சிகளையும்..சாட்சியங்களையும் வேறு ஜோடித்து வைப்பதுப் போல் ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் இருக்கும்!
அந்த நாட்களில் கல்யாணம் என்பது நான்கு நாட்கள் ஜே..ஜே என்று நடக்கும். நிறைய சடங்குகளும்...சம்பிராதயங்களுமாய் ..
நிறைய உறவுக்காரர்கள் கல்யாணத்துக்கு வருவார்கள். இரண்டு,மூன்று நாட்கள் பேசும் பேச்சுக்களில் யார் வீட்டில் கல்யாண வயதில் பையன் இருக்கிறான்..யார் வீட்டில் பெண் இருக்கிறாள் என்று தெரிந்து விடும். அந்த நான்கு நாள் கல்யாணத்தில் அட்லீஸ்ட் இரண்டு,மூன்று கல்யாணங்களுக்காவது அந்த மேடையில் அச்சாரம் போடப் படும். வயதானவர்களுக்கு வேறு என்ன வேலை. இப்போது போல் matrimonail.com எல்லாம் கிடையாது. வீட்டுப் பெரியவர்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டார்கள்.இப்போது நடக்கும்
இந்த ஒரு நாள் ரிசப்ஷனில் (இப்போதெல்லாம் கல்யாணத்துக்கு யார் கூப்பிடுகிறார்கள். எல்லாம் ரிஷப்ஷன் தான்!) எதையும் எதிர்பார்க்க முடியாது!
இருந்தாலும், அன்றைய நான்கு நாள் கல்யாணமாகட்டும்...இன்றைய half day fast marriage (fast food போல் fast marriage) ஆகட்டும். எல்லாமே காலத்தை வென்று நம் பெரியவர்கள் பார்த்து வைத்த உறவுகள் எல்லாம் துளிர்த்து நிற்கின்றன!
அதனால் தான் என்னவோ நம்ம ஊர் கல்யாணங்களில் divorce என்பது ரொம்பவும் சொல்பமாக இருக்கும். அப்படியே ஒன்றிரண்டு
divorce கேஸ் வந்தாலும் அதை ஒரு சாதாரண தேங்காய் மூடி வக்கீல் கூட RCR ( Restitution of conjugal right) போட்டு உடைத்து விடுவான்.
அது சரி, விஷயத்திற்கு வருவோம்!
எப்படி காலத்தைக் கடந்து நம் திருமணங்கள் ஆல வர விழுதுகளாய் நிற்கின்றன?
ரொம்ப சுலபம். கல்யாணம் என்பது என்ன?
It is a sale.
Sale என்றால் அதன் முக்ய தாத்பர்யம் என்ன?
" GOODS ONCE SOLD CAN NOT BE TAKEN BACK"
விற்ற பொருள் வாபஸ் இல்லை என்று இருக்கும் போது எப்படி ஐயா நம் கல்யாணங்களில் DIVORCE என்பது வரும்????

Friday, April 16, 2010

செல் சிரித்தது!!!


செல் ஒன்று
சிரித்தது..
எக்காளத்துடன்..
சிட்டுக் குருவியைக்
கண்டுபிடித்துக்
கொடுத்தால்,
பரிசு...
ஒரு அறிவிப்பு!
செல் ஃபோன் டவர்,
கதிர்வீச்சால்..
சிட்டுக் குருவி
என்கிற இனமே..
அருகி,
கருகிப்
போய்க் கொண்டிருக்கும்,
அவலம்....
டெக்னாலஜி வளர..வளர..
மனிதன் சிரிக்கிறான்,
இயற்கை அழுகிறது...
இன்னும் கொஞ்ச
நாட்களில்,
மனிதன் அழ..
இயற்கை
சிரிக்க
ஆரம்பிக்க....
நேற்று குருவி..
இன்று நீ...
செல் ஒன்று,
இப்போதும்
சிரித்தது.....
அதே,
எக்காளத்துடன்!!!

Tuesday, April 13, 2010

தமிழ் புத்தாண்டே வருக..!!


நாம் சிறுவர்களாய் இருந்த காலத்தில், தமிழ் புது வருஷப் பிறப்பு என்றாலே கொண்டாட்டம் தான். காலையில் எழுந்தவுடன் பூஜை ரூமில் கண்ணாடி, அதன் பக்கத்தில் ஆப்பிள்,ஆரஞ்சு,கொய்யா,திராட்சை,பேரீச்சை என்று விதம்,விதமாய் பழங்களும்,நூறு ரூபாய் நோட்டுகளும் தட்டில் வைத்துப் பார்க்கச் சொல்வார்கள். ஸ்வாமி படத்தின் அருகில் நமஸ்காரம் செய்து விட்டு, கொஞ்ச நேரம் அப்படியும்,இப்படியுமாய் பொழுது போய் விடும்.
வாசல் திண்ணைக்கு வந்து நம்மோடத்த நண்பர்களுக்கு வாழ்த்துச் சொல்லுவோம். டூ விட்ட நண்பர்களுக்குக் கூட வாழ்த்துச் சொல்லி, நட்பைப் புதுப்பிப்போம்.
அதற்குள் வாசலில் ஒரு அறிவிப்பு வரும். பெருமாள் கோவிலில் இத்தனை மணிக்கு பஞ்சாங்கம் படிக்கப் போகிறார்கள் என்று. அங்கு போனால், பானகம்,நீர் மோர், வெள்ளரிப் பிஞ்சு என்று விதம்,விதமாய் தருவார்கள். ஏக குஷி தான்!
அப்புறம் சாப்பாடு. நிச்சயம் வேப்பம்பூ பச்சடி இருக்கும். அதை தவிர பழப் பச்சடி. யாராவது உறவுக் காரர்கள் வீட்டுக்கு வருவார்கள். வீடே ஜே ஜே என்று இருக்கும். என்ன ஒரு கஷ்டம் என்றால், குழந்தைகளாகிய எங்களை சீக்கிரம் குளி சீக்கிரம் குளி என்று உயிரை எடுப்பார்கள். மற்றபடி எல்லாமே ஜாலி தான்.
ஆனால் இன்று....
ஒரு நாள் தான் லீவ். மெல்ல சோம்பல் முறித்து எழும்பல். பல் தேய்த்து காஃபி குடிக்கும் போது தான் கண்ணாடியில் பழங்கள் பார்க்க வேண்டும் என்ற ஞாபகம் வரும். அதை செய்யலாம் என்று நினைக்கும் போது, தொலைக் காட்சியில் ஒரு interesting ஆன ப்ரோக்ராம். அதைப் பார்த்துக் கொண்டே இருந்தால், பொழுது போயே போய் விடும்!
ஊரில் இருந்து அப்பா, அம்மா வாழ்த்து சொல்லும் போது தான் ஆஹா.. இன்று பண்டிகை என்று ஞாபகம் வரும். அதற்குள் கொஞ்சம் வீட்டு வேலைகள் செய்வோம். பெரும்பாலும் டி.வி.யில் advertisement வரும் போது தான் வேலைகள் செய்வோம். பிள்ளைகள் நமக்கு மேல். தொலைக் காட்சி நிறுவனங்கள் நிறைய நிகழ்ச்சிகள் வைத்து நம் நேரம் எல்லாவற்றையும் விழுங்கி விடுவார்கள்.
அதற்குள் சாயங்காலம் வந்து விடும். எதாவது கோவில் போக வேண்டும் என்று தீர்மானம் செய்து, அதை செயல் பட ஆரம்பிக்கும் போது, இன்னொரு programme வந்து நம்மை மறக்கடிக்கச் செய்து விடும். இப்போது blog என்று ஒரு புதுப் பழக்கம் வேறு!
யாராவது தப்பித் தவறி வீட்டுக்கு வந்தால் கூட, வா என்று ஒரு ஒற்றைச் சொல்லை உதிர்த்து விட்டு, டி.வி. பார்க்க ஆரம்பித்து விடுவோம்! அதையும் அவர்களும் தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் வீட்டுக்கு நாம் போனாலும் இது தான் நடக்கும் என்பது எங்கள் இருவர்களுக்கும் தெரியும்!
புத்தாண்டே புதுப் புடவை கட்டிக் கொண்டு, நம் வீட்டுக்கு வந்தாலும், அதற்கும் நம் முகத்தை டி.வி. யிலிருந்து சற்றே முகம் திருப்பி வா என்கிற ஒற்றைச் சொல் தான்!
இரவு எல்லாரும் தம்தம் முகங்களை முழுவதும் தொலைத்து விட்டு, ஒரு வெறுமை பரவ, 'ஆஹா.. வீட்டில் கட்டா..கட்டையாய் பெரியவர்கள் இருந்தால் எவ்வளவு ரம்யமாய் இந்த பண்டிகையை நாம் கொண்டாடியிருப்போம் 'என்ற ஏக்கம் மனதினை கவ்வும். அதற்குள் அடுத்த நாள் ஆஃபீஸ் போக வேண்டியதற்கான ஆயத்தங்கள்
மனதினை அழுத்த அதுவும் மறந்து போய்...
இன்றைய பண்டிகைப் பொழுது இப்படி கழிந்து விட்டது.
இப்போதே இப்படி போய் விட்டது!
நாளை எப்படியோ!!!!

Friday, April 9, 2010

காரும்...பேரும்.....


சூரியன் உச்சித் தலைக்கு சரியாக வரும் வேளையில், ஒரு 'போலீஸ் ப்யூகில்' ஓசை என் கவனத்தை கலைக்க, வண்டியை பிரேக் அடித்து நிறுத்தச் சொன்னேன்.
ஒரு போலீஸ் காரர் வந்தார்.
' சார்...கார் பெல்ட் என்னாச்சு..'
என் கார் ரோடில் போகும் ஆயிரக்கணக்கான கார்களில் வேறு பட்டது. அதன் பாரம்பரியமே தனி. ஆனந்த ரங்கம் பிள்ளை தனது டைரியில் இதைப் பதிவு செய்திருக்கிறார். கி.பி. 1782 ல் டூப்ளே யினால் பிள்ளையவர்களின் இருபதாவது வயதிற்குப் பரிசளிக்கப் பட்ட கார் இது!
இவரிடம் இது எடுபடுமா? யோசித்தேன், நான்.
' சார்... உங்க பெயர்?'
அவர் ஒரு தீர்மானத்திற்கு வந்து விட்டார்.
' எதுக்குக் கேக்கறீங்க?'
' புக் பண்ணத் தான்'
மனதுக்குள் சட்டென்று ஒரு ஃப்ளாஷ்!
அடடா.. மாசக் கடைசி...என் கையிலும் காசு இல்லை...அவர் கையிலும் காசு இல்லை...
என் முகத்தை பார்த்தார். அதில் ஒரு எழவும் இல்லை. அது அவருக்கு பெரிய ஏமாற்றமாய் போய் விட்டது.
இருந்தாலும் லேசில் விட்டு விட மனம் இல்லை.
' உங்க பேரை சொல்லுங்க?'
' அகில உலக ப்ளாக் புகழ், நகைச்சுவைத் தென்றல், சிலேடை செம்மல், ஹாஸ்ய சக்ரவர்த்தி ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி என்று அடியேனை சுருக்கமாக அழைப்பார்கள்'
' சுருக்கமா இது?' - தலையில் அடித்துக் கொண்டார், அவர்.
' யாரும் இதையெல்லாம் போட மாட்டேங்கறாங்க..அட்லீஸ்ட் போலீஸ் ரிகார்டிலாவது ஏறட்டுமேன்னுதான்...'
'நான் தான் கிடைத்தேனா' என்பது போல் பார்த்தார், அவர்!
'அட்ரஸ்?'
'சுடலை நகர், கண்ணாம்பா பேட்டை'
' என்ன ஸார், விளையாடறீங்களா?'
' விளையாட்டு இல்ல சார், கடைசீல அங்க தானே போகப் போறேன்!'
'பார்த்தா டீஸண்டா படிச்ச ஆள் மாதிரி இருக்கீங்க!'
' அதையும் போட்டுக்குங்க..MA(TAMIL) MA (ENGLISH) M.COM.,MBA., MCA., MCS.,BGL,ACS, AICWA .. முன்னாடி சொன்னதெல்லாம் படிச்சது..கடைசி இரண்டும் படிக்க ஆசைப் பட்டது. படிச்சதெல்லாம் போதும் எனக்கு உதவியா இருன்னு அப்பா சொன்னதால படிக்க முடியாம போயிடுச்சு..'
' அப்பா என்ன பண்றாரு'
' சும்மாத் தான் இருக்காரு'
' இதையும் எழுதுங்க..'
' எதை'
' நான் பார்க்கும் போது டிரைவர் பெல்ட் போட்டுக்கிட்டு இருந்தார். சார் பின்னாடி தான் இருந்தார். சாருக்கு கார்னு எழுதத் தான் தெரியும்.ஓட்டத் தெரியாதுன்னு'
'என்ன உளர்றீங்க?'
' உளரலே..உண்மையைத் தான் சொல்றேன்'
' ஸார்..கார் நம்பரையாவது சொல்லுங்க ஸார்?'
' எதுக்கு?'
' எங்கியாவது தப்பித் தவறி பார்த்தா ரிவர்ஸில 100 கிலோ மீட்டர் வேகத்தில் தலை தெறிக்க ஓடத் தான் !!!'

Tuesday, April 6, 2010

ஜீன் டெஸ்ட் !!!!!


எதேச்சையாய்,
பையனின்,
'ஸ்கூல் பேக்'கை ப்
பிரித்தேன்.
தமிழ்ப் புத்தகத்தில்,
ஒரு மயிலிறகு,
என்னைப் பார்த்து
'நீயும் எனக்கு அரிசி
போடுகிறாயா' என்று,
சிரித்தது!!!
*
இன்னொரு பக்கம்...
'ப்ராக்ரஸ் ரிப்போர்ட்'
ஆறு சப்ஜெக்டில்,
நாலில் சிகப்பு பேனாவில்
அண்டர்லைன்!
பக்கத்திலேயே,
நான் போடாத
என் கையெழுத்து,
என்னைப் பார்த்து,
சிரித்தது!!!
*
பை நிறைய
ஏகப்பட்ட பென்சில்கள்..
எத்தனைப் பேரை
மிரட்டி வாங்கினானோ!
அத்தனை பென்சில்களும்,
என்னைப் பார்த்து,
சிரித்தன!!!
*
இப்போது எனக்கு
சிரிப்பு வந்தது,
என் ஜீன் அல்லவா!!!
*

Thursday, April 1, 2010

சிறகு முளைக்கும்.....


என்னமோ எனக்குள் மாலதியைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல்.
பார்த்து ஒரு நான்கைந்து வருடங்கள் இருக்குமா? கண்டிப்பாக இருக்கும். என் தம்பி கல்யாணத்துக்கு மதுரை வந்திருந்த போது பார்த்தது. தனியாகத் தான் வந்திருந்தாள். சுண்டி இழுக்கும் படியான, கருத்து செறிவுள்ள கவர்ச்சி கரமான பேச்சு...மறுபடியும் பார்க்கத் தூண்டும் அழகு என்று எல்லாவற்றையும் இழந்து, புயலில் சிக்கிய பூங்கொடி போல களைத்துப் போய் இருந்தவளை அவளுடைய சிரிப்பு தான் எனக்கு அடையாளம் காட்டியது.
"என்னடி இது?"
" என்னவோ போ.."- அலுப்புடன் அதற்கும் ஒரு சிரிப்பு.
எப்படி இருந்த பெண் அவள்! கலகலப்பான சுபாவம்! படிப்பில் கெட்டிக்காரி. 'பாரதி கண்ட புதுமைப் பெண் இவளோ' என்று ஆச்சர்யப் பட வைக்கும் பேச்சு...
பணியில் இருக்கும் போது, அவள் தந்தை இறந்து விட, 'இறந்த ஊழியரின் வாரிசுக்கு வேலை' என்ற அடிப்படையில் மின் வாரியத்தில் எழுத்தராக வேலை கிடைத்தது என்ற அளவுக்குத் தெரியும். ஆனால், இப்படி உருமாறிப் போவாள் என்று எதிர்பார்க்கவேயில்லை.
என்ன வந்து விட்டது இவளுக்கு?
' சின்னா பின்னமாகக் கிடந்த குடும்பத்தைத் தூக்கி நிறுத்தியதை, இரண்டு தம்பிகளை படிக்க வைத்து, வேலை வாங்கித் தந்ததை, தங்கைக்குத் திருமணம் செய்து வைத்ததை ... அப்பாவின் மறைவிற்குப் பிறகு, அந்த குடும்பத்திற்காகத் தான் பாடுபட்டதை...' என்று ஒன்று விடாமல் சொன்னவளை இடை மறித்து நான் கேட்டேன்.
' அது சரி..பொறுப்பெல்லாம் தான் முடிஞ்சுப் போச்சே...நீ ஏன் கல்யாணம் பண்ணிக் கொள்ளக் கூடாது?'
' கல்யாணமா எனக்கா?'
சிரித்தாள். அந்த சிரிப்பில் ஒரு வெறுமை தெறித்தது.
' என்னை யார் பண்ணிப்பாங்க? என் இளமையை...பணத்தை...உழைப்பை..என்று எல்லாத்தையும் இந்த வீட்டுக்காக அர்ப்பணிச்சாச்சு..என்னைப் பற்றிக் கவலைப் பட யார் இருக்காங்க?'
'ஏன் அம்மா இல்லியா?'
' அம்மாவா....நல்லா சொன்னே போ!'
'பி.ஃப்.லிருந்து எல்லாத்தையும் வழிச்சு எடுத்தாச்சு... கட்டோ கடைசியா ஒரே ஒரு பத்தாயிரம் மட்டும் இருந்தது. அம்மா கேட்டாள்னு அதையும் எடுத்துக் கொடுத்துட்டேன்'
' அம்மாக்கு எதுக்காம் பத்தாயிரம்?'
' எல்லாம் ஒரு தற்காப்புக்குத் தான். நாளைக்கே எனக்கு எதாவது ஒண்ணு ஆச்சுன்னா, அவங்களை யாரு கவனிச்சுப்பாங்க..ஏதாவது கையில..காலில பொட்டுத் தங்கம் இருந்தால் தானே கடைசி காலத்துல கஞ்சியாவது ஊத்துவாங்கன்னு சொல்லி, நாலு பவுன்ல வளையல் செஞ்சிப் போட்டுக்கிட்டாங்க..'
' அப்ப உனக்கு?'
' அப்பாவோட வேலைதான். இதைச் சொல்லி சொல்லியே,ஆளை ஒரு வழியா காலி பண்ணிட்டாங்க..இவ்வளவு செஞ்சும் எல்லாருக்கும் கழுத்தளவு குறை இருக்கு'
' இன்னும் என்ன குறை?'
' எனக்கு நல்ல மனசு கிடையாதாம். 'இன்வால்வ்மெண்டோட' செஞ்சா இன்னும் நல்லா செஞ்சிருப்பேனாம்'
' கொஞ்சம் கூட விசுவாசம் இல்லாம ...எல்லாரும் ஏன் இப்படி மாறிட்டாங்க?'
' யாரும் மாறலை, சுகன்யா. காலம் தான் மாத்திடுச்சு..'
விரக்தியுடன் சிரித்தாள், மாலதி.
அதற்குப் பிறகு மாலதியைப் பார்க்க முடியாமல் போய் விட்டது.
இத்தனை நாள் கழித்து, மாலதியை திடீரென்று ஏன் பார்க்க வேண்டும் என்று தோன்ற வேண்டும் என்று யோசித்துப் பார்த்தேன். சில நேரங்களில் அத்யாவசியமான உறவுகள் கூட அன்னியமாகப் போய் விடும். வேறு சில நேரங்களில், ஆயிரக் கணக்கான மைல் தள்ளி இருப்பவர்களைக் கூட உடனே பார்க்க வேண்டும் என்று தோன்றும்.
என்னவருக்குத் திடீரென்று திருநெல்வேலிக்கு ஆபீஸ் வேலையாகப் போகும் சந்தர்ப்பம் கிடைக்கவே, மாலதிக்குப் பிடித்த ரவாலாடு செய்து கொடுத்து அனுப்பினேன். எனக்கும் அவருடன் போகவேண்டும் என்று தான் ஆவல். குழந்தைகளுக்குப் பரிட்சை சமயமாதலால் என்னால் போக முடியவில்லை.
இப்போது எப்படி இருப்பாள், மாலதி?
இன்னமும் வீட்டுக்காக உழைத்து ஓடாகத் தேய்ந்து கொண்டிருப்பாளோ.. இல்லாவிட்டால், அவளால் பயன் பெற்றவர்கள் அவளுக்குப் பிற்காலத்தில் பாதுகாப்பிற்காக திருமணம் செய்து வைத்திருப்பார்களோ...இல்லாவிட்டால், தங்களுடைய சுயநலத்திற்காக, என்னுடைய அழகிய தோழியின் முகத் தோலை உரித்து, எலும்புக் கூடாக ஆக்கி விடுவார்களோ?
பாவம். மாலதியைப் பற்றி நினைத்தாலே, மனம் வெறுமையாகி விடும் அளவிற்கு அவளுடைய தாக்கம் என்னுள் பரவியது. இப்போது எப்படி இருப்பாள்?
அவளை ஒரு வாரம் லீவ் போடச் சொல்லி, அவளுக்குப் பிடித்த உணவு வகைகளை செய்து கொடுத்து, அவளுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று என்னுள் ஒரு ஆசை. என்னவரிடமும் சொல்லி இருக்கிறேன் 'முடிந்தால் அவளை லீவ் எடுத்துக் கொண்டு, கையோடு கூட்டி வாருங்கள் என்று'
என்ன செய்வாரோ?
அவளுக்கும் லீவ் கிடைக்க வேண்டும். அவர் வரும் வரை ரொம்பவும் தவிப்பாகவே இருந்தது, எனக்கு.
மாலதிக்குப் பிடித்ததெல்லாம் பட்டியலிட்டுப் பார்த்தேன்.
உருளைக் கிழங்கு பால் கூட்டு... அறைத்து விட்ட வெங்காய சாம்பார்...அடை....அருநெல்லிக்காய்.... பாலச்சந்தர்...கமல் படங்கள்...பொன்னியின் செல்வன்....ஜெயகாந்தனின் ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம், எஸ்.வி.சேகர் ட்ராமா...
ஒவ்வொரு நாளும் அவளுடன் ஜாலியாக இருக்க வேண்டும் என மனத்துக்குள் ஒரு சந்தோஷம் என்னுள்ளும்!
குடும்பத்துக்காக ரொம்பவும் பாடுபட்டு விட்டாள், பாவம்!
அவர் வந்ததும், வராததுமாய் பிடித்துக் கொண்டேன்.
' என்ன பொண்ணு போ! நீதான் கிடந்து உருகுறே. கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாம, உன் ஃப்ரண்ட் பண்ணின காரியத்தைப் பார்! பாசமுள்ள தம்பி..தங்கைங்க..வயசான அம்மா..இப்படி எல்லாரையும் பரிதவிக்க விட்டுட்டு, யாரோ ஆபீஸ்ல வேலைப் பார்க்கறவனைக் கல்யாணம் பண்ணிகிட்டு எங்கேயோ ட்ரான்ஸ்வர் வாங்கிட்டுப் போய்ட்டாளாம்!..'
அவர் சொல்ல..சொல்ல..என்னுள் ஏதோ ஒன்று ஜிவ்வென்று கிளம்பி..ஒரு கூட்டுப் புழு கூட்டை உடைத்துக் கொண்டு, சிறகு முளைத்த வண்ணத்துப் பூச்சியாய் கிளம்பி....
அவள் இங்கு வந்திருந்தாள் கூட இவ்வளவு சந்தோஷம் நான் பட்டிருப்பேனோ..தெரியாது!!
ஆனால், இது என்னவருக்குப் புரிய நியாயமில்லை!!!!!
*
என்னுரை: இந்த சிறுகதை 9.8.2000 தேவி வார
இதழில் வந்தது.