Saturday, April 27, 2013

TO LET!


"இன்னும் ஒரு மாசத்துல வீட்டை காலி பண்றேன்”
“சரி...எப்ப சொல்றீங்களோ அப்ப அட்வான்ஸ் தந்துடறேன்”
எனக்கும், எங்க வீட்டுக் காரருக்கும் (சாரி HOUSE OWNER க்கும்) நடந்த உரையாடல் இது..
இந்த B 305 இரண்டாவது மாடி! அதற்கு மேல் மொட்டை மாடி..அதனால் வெயில் ஏகத்துக்கு அடிக்கும் ..”கூல் பெயிண்ட் அடிச்சுத் தாங்க” என்று சொல்லிப் பார்த்தாகி விட்டது..மனுஷன் கூசாம மாசம் சுளையா எட்டாயிரம் ரூபாய் வாடகை வாங்குகிறார்..ஒரு சின்ன செளகர்யம் கூட செய்து தர மாட்டேன் என்கிறார்.செளகர்யபடா விட்டால் வீட்டை காலி செய்து கொள்ளுங்கள்..எனக்கு பத்தாயிரம் ரூபாய் வாடகைக்கு ஆள் இருக்கிறது என்று சொல்கிறார்.
பொறுத்துப் பொறுத்து பார்த்து, அது முடியாமல் போனதால் தான் மேல் கண்ட டயலாக் ஒரு நாள் நடந்தது..
“ என்ன சார்..வீடு மாற்றப் போறீங்களாமே..”
“ ஆமாம் சார்”
“ ஒரு தாய் வயிற்றுப் பிள்ளை போல பழகினோம்..இப்ப நீங்க வீட்டை காலி பண்ணப் போறீங்க.. நினைச்சாலே கஷ்டமா இருக்கு..
சார் ..ஒரு சின்ன ஹெல்ப்.. நீங்க வீடு பார்க்கும் போது எனக்கும் சேர்த்துப் பாருங்களேன்.. நீங்க இல்லாம எங்களுக்கும் போர் அடிக்கும்”
எனக்கோ ஆச்சர்யமான ஆச்சர்யம்..இந்த B 304 எனக்கு எதிர்த்த வீடு.அவர் வந்து ஆறு வருடங்களாகிறது..இது வரை ஒரு தடவை கூட என்னுடன் பேசியதே இல்லை..மூன்று நாட்களுக்கு ஒரு முறை , முருங்கைக் காய் சீப்பாக கிடைக்கிறதென்று ஆண்டார் வீதி சின்ன மார்க்கெட்டிலிருந்து வாங்கி வரும் ஆசாமி, எதிர்த்தாற்போல் நான் வரும் போது ஒரு நாள் கூட பேசியது கிடையாது..ஏன் தெரிந்தவர் என்கிற பாவனையில் ஒரு அசட்டு சிரிப்பு கூட கிடையாது..
இப்போது என்னவென்றால்...இந்த பேச்சு பேசுகிறார்..என்ன ஒரு ஆச்சர்யம்!
அதை விட ஆச்சர்யம் என்னவென்றால், என்னைப் பார்க்கும் போதெல்லாம் இப்போதெல்லாம் ஏதாவது பேசுகிறார்...சீனா ஊடுருவல் வரை கூட இரண்டு பேரும் பேசியாகி விட்டது... கடைசியில் “வீடு கிடைச்சாச்சா” என்று தான் எங்கள் உரையாடல் முடியும்!
இப்படியாக ஒரு மாதம் ஓடியே விட்டது..எனக்கும் வீடு கிடைத்த பாடில்லை...எங்கு விசாரித்தாலும் எக்கச் சக்கமாய் வாடகை!
ஒரு நாள் வீட்டுக் காரரைப் பார்த்து சொன்னேன்:
“ சார் ... நான் வீடு காலி பண்ண வில்லை”
“ ரொம்ப சரி.. தெரியாத பிசாசுக்கு தெரிஞ்ச பேயே மேல்!..நீங்களே இருங்க...” என்று அவரும் பெரிய மனசு பண்ணி சொல்லி விட்டார்..
பிறகு தான் தெரிந்தது அந்த பத்தாயிரம் ரூபாய் வாடகை தருவதாக சொன்னவர் வீட்டில் அரை டசனுக்கு மேலே உருப்படிகளாம்!
எல்லாம் சரியாகத் தான் போய்க் கொண்டிருக்கிறது ..
ஒன்றைத் தவிர!
அது, மூன்று நாட்களுக்கு ஒரு முறை , முருங்கைக் காய் சீப்பாக கிடைக்கிறதென்று ஆண்டார் வீதி சின்ன மார்க்கெட்டிலிருந்து வாங்கி வரும் அந்த B 304 , எதிர்த்தாற்போல் நான் வரும் போது இப்பொழுதெல்லாம் ஒரு நாள் கூட பேசுவது கிடையாது..ஏன் தெரிந்தவர் என்கிற பாவனையில் ஒரு அசட்டு சிரிப்பு கூட கிடையாது..
நான் நினைக்கிறேன்...
நான் வீடு காலி பண்ண வில்லை என்கிற விஷயம் அவர் காதுகளுக்கும் எட்டி இருக்க வேண்டும்!

Saturday, April 13, 2013

ரவா உப்புமாவும், ராப்பிச்சைக் காரனும் ...........

காமெடி சானல் பார்க்கலாமா.. நியூஸ் சானல் பார்க்கலாமா எதுல காமெடி ஜாஸ்தி என்று ரொம்பவும் போர் அடித்ததினால் நான் பூவா தலையா போட்டு பார்த்துக் கொண்டிருக்கும் போது, வாசலில் சலசலப்பு..
பார்த்தால்...
ராப்பிச்சை!
அடச்சே என்றாகி விட்டது எனக்கு!
கொஞ்ச நேரம் முன் தான் நினைத்தேன்..குடுகுடுப்பைக் காரன், ராப்பிச்சை, சிட்டுக் குருவி, மூட்டை பூச்சி என்று நம் இளம் பருவ காலத்தில் நம்முடன் இருந்த இவர்கள் எல்லாம் இப்போது எங்கே தொலைந்து போய் விட்டார்கள் என்று பிலாக்கில் எழுதலாம் என்று இருந்தேன்..
கெடுத்து விட்டானே இந்த ராப்பிச்சை!
என்னை எதையும் சிந்திக்க விடாமல் வாசலில் கமலா அந்த ராப்பிச்சையுடன் சண்டைப் போட்டுக் கொண்டு இருந்தாள்..
அதுவும் ரொம்ப நேரம் நீடிக்க வில்லை..
குக்கர் தைர்யமாக (அதற்கு இருக்கும் தைர்யம் கூட எனக்கு கிடையாது) விசில் அடித்து கமலாவை கூப்பிடவே அவள் உள்ளே ஓடினாள்..
ஓடினவள் சும்மா ஓடவில்லை!
‘வாசலில் இருந்த அந்த ராப்பிச்சையை துரத்துங்க..’ என்று கத்திக் கொண்டே ஓட, நான் ஏதோ பெரிய ஹீரோ போல் வாசலுக்கு விரைந்தேன்..
அந்த ராப்பிச்சை ஏதோ கத்திக் கொண்டிருந்தான்..
சட்டென்று அவன் வாயை அடைக்க, சட்டைப் பையில் இருந்து, பத்து ரூபாய் நோட்டை அவன் தட்டில் போட்டேன்..
“சா...மீ............இந்த வூட்டு சாமி நீங்களா...” என்று பெரிதாய் கும்பிடு ஒன்று போட்டான்..
அட..ஒரு வெறும் பத்து ரூபாய்க்கா இந்த கும்பிடு என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் போதே...’சா...மீ... நீங்க நல்லா இருக்கணும்.....” என்று தன் கைகளை தலைக்கு மேல் தூக்கினான்..
எனக்கு லைட்டாக இப்போது தான் சந்தேகம் தட்டியது..இந்த கூழைக் கும்பிடு...இந்த வணக்கம் இதெல்லாம் இந்த வெறும் பத்து ரூபாய்க்கு இருக்காதே... ...
அட்லீஸ்ட் ஒரு நூறு ரூபாயாவது தட்டில் விழுந்திருக்க வேண்டும்..
ஏதாவது ஞாபக மறதியாய் நூறு ரூபாய் நோட்டு ஏதாவதை போட்டு விட்டேனா...என்ன?
சந்தேகத்துடன் தட்டைப் பார்த்தேன்..
சந்தேகமே இல்லை
பத்து ரூபாய் தான்!
சாமி...சாமி....என்று நாத் தழுதழுக்க குழறினான்...கண்களில் மாலை மாலையாய் கண்ணீர் .....
கொஞ்சம் விட்டால் அழுது விடுவான் போல இருந்தது..
ஏதோ அந்த கால ஹிந்தி படத்தில் அரதப் பழசு பாடல் ஒன்று ஐம்பது வருடமாய் பிரிந்த அண்ணன்,தம்பிகளை ஒன்று சேர்ப்பது போல, இவன் ஏதோ என்னோட அண்ணன் என்று சொந்தம் கொண்டாடி விடுவானோ என்று மனதுக்குள் லேசாய் பயம் எட்டிப் பார்க்க......
நல்ல வேளை..
குக்கர் வாயை அடைத்து விட்டு கமலா வந்தாள்!
அதற்குள் அவன் போய் விட்டான்..
“ஏதாவது காசு,கீசு போட்டீங்களா?”
“சேச்சே”
“அவனுக்கு ரவா உப்புமா வேண்டாமாம்..காசு தான் வேணுமாம்..”
என்றாள் கமலா.
“அப்டியா?”
“ ஏம்ப்பா.. நேத்திக்கு மட்டும் ரவா உப்புமா வாங்கிண்டியேன்னு கேட்டேன்”
“அதுக்கு அவன் என்ன சொன்னான்?”
“ நேத்திக்கு உங்க வீட்ல ரவா உப்புமா வாங்கிண்டதினால் தான் சொல்றேன்... உங்க வீட்டில பண்ணின எதுவுமே எனக்கு வேண்டாம்..காசு கொடுங்கங்கறான்..என்ன கொழுப்பு பாருங்களேன் அவனுக்கு!”
அடக் கடவுளே!
அந்த பிச்சைக் காரன் இத்தனை நேரம் என்னைப் பார்த்து இதற்காகவா பரிதாபமாப் பட்டிருக்கான்?...
”வாங்க நாம ரவா 

 உப்மா சாப்டலாம்” என்றாள் கமலா!

Monday, April 8, 2013

ஆரண்ய நிவாஸம் (2)

" உம் ..சொல்லுங்க "
ஒரு பெருமூச்சு என்னிடமிருந்து பதிலாகக் கிளம்பியது .....அதன் பின் ஒரு ஆழ்ந்த மெளனம் ...இனி மேல் பேசாமல் இருந்தால் அவ்வளவு மரியாதை இல்லை என்று தோன்றவே, தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேச
ஆரம்பித்தேன்....
   "உங்களுக்கு களியக்காவிளை தெரியுமோ?"
   "கேரளாவா?"
   "கன்யாகுமரி  டிஸ்ட்ரிக்ட்..கேரளா பார்டர் !"
   "அந்த பக்கம் கொஞ்ச நாள் நான் இருந்தேன்"
   "அப்படியா?"
   "என் தம்பியும் அங்க மார்த்தாண்டத்தில இருந்தான்..."
   "ம்"
   "ஒரு இரண்டு நாள் சேர்ந்தாற்போல் லீவ் கிடைத்தது.. ஆபீஸ் ஜீப் எடுத்துண்டு பேச்சிப் பாறை ....பெருஞ்சாணி டேம்....திப்பரப்பு ஃபால்ஸ்...
திருவெட்டாறு என்று சுற்றினேன்...”
  இதிலென்ன சுவாரஸ்யம் இருக்கிறது என்பது போல் பார்த்தார் வரதன்.
   ”அப்புறம் மார்த்தாண்டத்தில் தம்பியைப் போய் பார்க்கலாமென்று தோன்றியது..  செல்ஃப் ட்ரைவிங் தான்!”
  “தம்பியைப் பார்த்தீங்களா?”
   “ அந்த பக்கமெல்லாம் ஏக வறட்சி...கோடை வெயில் வேற....எங்க பார்த்தாலும் பாலை வனம் போல பொட்டல் காடு...கொஞ்ச நேரம் முன்னால,
பசுமையா  நான் பார்த்த பச்சை பசேலென்ற வயல்வெளிகளும்..வெள்ளக் காடாய் சுழித்துக் கொண்டு ஓடும் ஆறும் எங்கேயோ காணாமல் போனது போல ஒரு பிரமை!...அட...ஒரே நாளில் இவ்வளவு வித்யாசமா என்று கோடையின் வெப்பம் தாளாமல் கண் எரிச்சலில் நான் ஜீப் ஓட்டிக் கொண்டு போகும் போது...”
    வரதன் பேசவில்லை...உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.
    “ஒரே பொட்டல் காடா....தார் ரோடு தகதகவென மின்னியது...தார் எங்கே குழம்பாக உருகி விடுமோ என்ற பயம் வந்தது எனக்கு...எங்கு பார்த்தாலும்
வெட்ட வெளி...கொஞ்ச தூரத்தில் ஒரு குடிசை..எனக்குள் ஏதோ தோன்றியது..
அந்த குடிசை வாசலில் ஜீப்பை நிறுத்தினேன்..         
   உள்ளிருந்து தீனமாய் ஒரு குரல்...யாரோ உடம்பு முடியாமல் படுத்துக் கொண்டு, வலியின் வேதனை தாங்காமல் எழும் அழு குரல்...உள்ளேப் போய்ப்
பார்த்தேன்...ஒருவரும் இல்லை..ஆனால் சப்தம் மட்டும் வந்து கொண்டிருந்தது..
  வாசலுக்கு மறுபடியும் வந்தேன்..குடிசையின் வலது பக்கமிருந்து தான் அந்த சப்தம் வந்து கொண்டிருந்தது..போய் பார்த்தால் ஒரு வயோதிகர் அனத்திக் கொண்டிருந்தார்...”
“ம் அப்புறம்”
“ஜன நடமாட்டம் துளிக் கூட இல்லாத இடம்! அவருக்கு என்னால் என்ன உதவி செய்ய முடியும்? பக்கத்துல ஏதாவது ஹாஸ்பிட்டல் இருக்கா? காரில தான் வந்திருக்கேன்..உங்க சொந்தக் காரங்களைக் கூப்பிடணுமா என்று நான் கேட்ட ஆயிரம் கேள்விகளுக்கு ஒன்றே ஒன்று தான் அவர்  சொன்னார் ”
“கொஞ்சம் தண்ணீர் வேண்டும்”
   துரதிர்ஷ்டவசமாய் என்னுடைய வாட்டர் பாட்டிலில் கொஞ்சம் தான் தண்ணீர் இருந்தது..அதை எடுத்துக் கொண்டு போய் கொடுத்தேன்..
ஆவலுடன் அந்த பாட்டிலை வாங்கினவர், தண்ணீரைக் குடிக்க  வாயருகே கொண்டு போனார்..பிறகு என்ன தோன்றியதோ..அந்த பாட்டிலில் இருந்த தண்ணீரின் பெரும் பகுதியை அவர் கட்டிலுக்கு கீழே வாடிக் கொண்டிருந்த வாழைக் கன்றுக்கு தெளித்தார்...இப்போது பாட்டிலில் கொஞ்சம் தான் தண்ணீர் இருந்தது..அதை அவர் அருந்துவதற்க்குள் அவர் தலை சாய்ந்து விட்டது..”
   “ அடடா...”என்றார் வரதன்.
   “ அப்புறம் என்ன...பக்கத்து ஊருக்குப் போய் தகவல் சொல்லி சில ஆட்களைக் கூட்டி வந்து கோவிந்தாகொள்ளி போட்டு வந்து விட்டோம்..”
      அதற்கும் நாம் சாப்பிட்ட ஏத்தம் பழத்திற்கும் என்ன சம்பந்தம் என்பது போல பார்த்தார், வரதன்..
    “ வரதன்
... நீங்க சாப்பிட்டீங்களே..அந்த ஏத்தன் வாழைப் பழம் அன்னிக்கு அந்த களியக்கா விளைக்கும், மார்த்தாண்டத்திற்கும் நடுவில அந்த குடிசையில குற்றுயிராய் கிடந்த கிழவர், தன் தண்ணீர் தாகத்தை தியாகம் செய்து கீழே கிடந்த காய்ந்து போன வாழைக் கன்றுக்கு ஊற்றினாரே, அதனோட பொண்ணோட பொண்ணு தான் இந்த கன்னு!”
      .”.களியக்கா விளையில இருந்து ட்ரான்ஸ்பரில் வரும் போது அந்த வாழையோட கன்றையும் பிடிவாதமா நம்மூருக்கு கொண்டு வந்து நட்டேன்...எல்லாரும் கிண்டல் பண்ணினாங்க...  நம்மூரில அந்த வாழை வர்ரதுக்கு சான்சே இல்லைன்னு  அடிச்சுச் சொன்னாங்க..அது உண்மையும்  கூடத் தான்..ஆனா, அந்த புண்யாத்மாவோட கரம் பற்றிய நீரின் மகிமையோ என்னவோ இது அதிசயமா இங்கே நம்மூரில வளர ஆரம்பித்து விட்டது!”
      கீழே படிகளில் இறங்கி சற்று தள்ளி, குலைப் போட்ட தளதளவென இருந்த வாழை மரத்தை தடவிக் கொடுத்தேன் .....
      பக்கத்தில் வரதன்!