Saturday, June 30, 2012

வாழை அடி வாழை!


” என்னப்பா..எப்படி இருக்கே?”
“செளகர்யமா இருக்கேன்.. நீ?”
“ நானும் தான்..அது சரி பாரேன்..இன்னும் அஞ்சு வருஷம் தான் இருக்கு சர்வீஸ்..உனக்கு?”
“எனக்கும் தான்?..  நேற்று தான் வேலைக்கு சேர்ந்தார் போல இருக்கு அதுக்குள்ள கிடுகிடுன்னு ஓடிப் போச்சு காலம்..”
“ அந்த கால ஜெய்சங்கர் படத்தில விறுவிறுன்னு ஓடிப் போகுமே காலண்டர் தேதி..அது மாதிரில்ல இருக்கு..
“ஆமாம்ப்பா ...ஆமா...அது சரி..உன் பையன் என்ன பண்றான்?”
“அவன் B.E. படிச்சான்..அப்படியே எங்க கம்பெனியில ஜாயின் பண்ணிட்டான்
  இஞ்சினீயரா..”
“அப்ப  நீ ரிடய்ர்ட் ஆனாலும் அந்த B3/303 வீட்டை உனக்கு அப்புறம் உன் பையனுக்குத் தான்னு சொல்லு..”
“ அட உனக்கு இன்னும் அதெல்லாம் ஞாபகம் இருக்கா?”
“ இல்லாமலா .. நான் அப்ப வேலையில்லாம இருந்தேன்..  நான் தான் வந்து  ட்யூப் லைட் ..ஃபேன்லாம் ஃபிட் பண்ணிக் கொடுத்தேன்..”
அது சரி..உன் பையன் என்ன பண்றான்?”
“ அவன் ஒரு பெரிய MNC ல டில்லில இருக்கான்..இப்பத் தான் கல்யாணம் ஆச்சு..அவன் WIFE இங்க விஜய வாடால பேங்க்ல வேல ..’
“ட்ரான்ஸ்ஃபர்க்கு ட்ரை பண்ண வேண்டியது தானே?”
“இரண்டு பேருமே ட்ரை பண்ணிக்கிட்டுத் தான் இருக்காங்க..உனக்கு தெரியுமா.. எனக்குக் கல்யாணம் ஆன போது எனக்கு நாகர்கோவிலில் வேலை..என் மிஸஸ்க்கு சென்னையில வேலை.இரண்டு பேருமே ரொம்ப தீவிரமா ட்ரான்ஸ்பருக்கு ட்ரை பண்ணிக்கிட்டு இருந்தோம்..இப்ப மாதிரி அப்ப செல்லெல்லாம் ஏது.. நான் என் ட்ரான்ஸ்ஃபர் ஆர்டரை எடுத்துக் கிட்டு சென்னைக்கு ரயில் ஏறினேன்..அவங்களுக்கும் ட்ரான்ஸ்பர் ஆச்சு..அவங்களும் அந்த ட்ரான்ஸ்பர் ஆர்டரை எடுத்துக்கிட்டு சந்தோஷமா ரயில்ல வராங்க..இரண்டு பேருமே ஒருத்தொருக்குஒருத்தர் ஆர்டர் வந்த விஷயத்தை சொல்லாம போய்க்கிட்டிருக்கோம்....”
“அப்புறம்?”
“அப்புறமென்ன..விழுப்புரம் ஜங்ஷன்ல ரயில் நின்னது..அவங்க எதிர்த்த ட்ரெயின்ல..”
“ சினிமா மாதிரி இருக்கே.”
“சினிமா மாதிரி தான்..அவங்க சந்தோஷமா நாகர்கோவில்லுக்கு ட்ரான்ஸ்ப்ர் ஆன அவங்க ஆர்டரைக் காண்பிக்க.. நான் பெருமையா எனக்கு சென்னைக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆன ஆர்டரைக் காண்பித்தேன்..”
“போச்சுடா..”
“அது போல இவங்க இரண்டு பேரும்  நாக்பூர் ஜங்ஷன்ல இறங்கி அவங்கவங்க ட்ரான்ஸ்ஃபர் ஆர்டரைக் காண்பிப்பாங்களோ என்னவோ..”
          

Friday, June 22, 2012

கொல வெறி....கொலவெறி......

செல் போன் கிணுகிணுத்தது.
“பரத் ஹியர்”
“பரத் .. நான் தான் ’சுநாதபோதினி’ஆசிரியர் பேசறேம்ப்பா..இங்க , ஒரு கும்பல் நம்ம ஆஃபீஸை லூட் அடிச்சுட்டு இருக்கு..எல்லாரும் உம்மேல காட்டமா இருக்காங்க..போன வாரம் நீ எழுதின ’ஸ்கூப்’ அவங்க தலைவரை அவமானப் படிச்சிச்சாம்..அதனால, உன்னைத் தேடி எந்நேரமும் அந்த கும்பல் வரலாம்.. நாங்க யாரும் ஒன் அட்ரஸ் தரல்ல..எப்படியாவது கண்டுபிடிச்சுண்டு அந்த கொலை வெறி கும்பல் வரும்..தப்பிச்சுக்கோ..”
“சார்..”
ஃபோன் துண்டிக்கப் பட்டது..”வைடா ஃபோனை” என்ற காட்டமான குரல் இங்கு துல்லியமாகக் கேட்டது..
“என்ன பரத்?”
“ஒண்ணுமில்ல..”
“இல்ல ஏதோ?”
“ஆமாம்ப்பா..போன வாரம் எழுதினேனே..அது அவங்க தலைவரை ரொம்ப கோபமாக்கிடிச்சாம்..அதனால, தொண்டர் படைங்க, பத்திரிகை ஆஃபீசை
பீஸ்...பீஸாக்கிட்டு என்னைத் தேடி வராங்க”
“ பரத்..போலீசுக்கு ஃபோன் பண்ணு”
“போலீஸ் என்ன பண்ணும்?”
“இல்லாட்டி வா..ஓடிப் போயிடலாம்..அந்த கும்பல் வரதுக்குள்ள..”
“சேச்சே.ஓடறதா..எழுதறவன் ஓட ஆரம்பிச்சா, ஒவ்வொரு வார்த்தைக்குமில்ல ஓடணும்..”
“ பரத் பி சீரியஸ்..வரது ஒரு மாப் ..அது என்ன வேணா செய்யும்..உனக்குத் தான் தெரியுமே...’மாப் சைக்காலஜி’ என்னன்னு!”
தற்குள் அந்த கும்பல் வந்தே விட்டது..
வாசலில் இருந்த கூர்க்காவை எட்டி உதைத்து...’எவண்டா அவன் பரத்..எங்க தலைவரைப் பற்றி எழுதினவன்..’ என்று ..ஒவ்வொருத்தன் கையிலும்..சவுக்கு கட்டை..அரிவாள் ..சைக்கிள் செயின் என்று ஆயுதங்கள்...
“டேய் இவன் தாண்டா..’
“விடாதே..பிடி..”
“இந்த கை தானே தலைவரைத் திட்டி எளுதினது..வெட்டுங்கடா..அதை..”
 ஆத்திரம் தீருமட்டும் துவைத்து விட்டு ஆங்காரத்துடன் சென்றது அந்த காலிக் கும்பல்....    
 “ பரத் ..சொன்னேனே ..கேட்டியா..இப்படி அநியாயமாய் .......”
பேச முடியாமல் தவித்தார் அந்த நாளிதழ் ஆசிரியர்..
“ நான் கூட சொன்னேன் சார்..கேட்கலை..” விசும்பினாள், வினிதா..
” இப்ப எழுத முடியாம போச்சே. வலதுகையை இப்படி வெட்டிட்டானே..”
 அந்த உயிர் போகும் வலியிலும் பரத் சைகை செய்தான்..ஆஸ்பத்திரி நர்ஸ் பேப்பர்..பேனா கொண்டு வந்தாள்...
உயிர் போகும்  வலியையும் மீறிய முறுவலுடன் முகம்!
கை எழுதியது.......    
 “ I AM A LEFT HANDER"



                

Monday, June 18, 2012

இது ஒரு பொன் மாலைப் பொழுது!


16.06.2012 இரவு பத்து மணி சுமாருக்கு ..................
"எங்கேப்பா ஜாலியா புள்ள குட்டிங்களோட  போயிட்டு வரே?.....சினிமா?”
   “இல்ல”
  “சர்க்கஸ்?”
  “ஊஹூம்”
 “எக்ஸிபிஷன்?”
 “அதுவும் இல்ல”
 ”சொந்தக் காரங்க கல்யாணமா?”
 “கல்யாணம் மாதிரி தான்..ஆனா, மாப்பிள்ளை அழைப்பு,   நாதஸ்வரம் ,ரிஷப்ஷன், கெட்டி மேளம், முகூர்த்தப் பை..என்று எதுவும் இல்லாத கல்யாணம்..”
“என்னப்பா..புதிர் போடறே?”
 “ஒரு ’கெட்-டு-கெதர்’ பா.. நம்ம சூப்பர் சிங்கர்ஸ் மாளவிகா,பூஜா,சந்தோஷ் அப்புறம் ‘அசத்தப் போவது யாரு’ மதுரை முத்து என்று எல்லாரையும் ஒரே மேடையில் பார்த்தோம்”
 “எங்கேப்பா.. நான் இவங்கள டிவி பெட்டியில பார்த்ததோட சரி”
“தனுஷ் ஜுவல்லர்ஸ் ஒரு மீட் வைச்சிருந்தாங்கப்பா..அதுக்கு முன்னால, போன்..ஒரு மீட் வைச்சிருக்கோம்..இன்விடேஷன் அனுப்பறோம்..அவசியம் கலந்துக்கணும்’னு அன்பு கட்டளை.. அடுத்த வாரத்தில இன்விடேஷன் கூரியர்ல வந்தது..
அது வந்த ரெண்டாவது நாள், ‘ சார், இன்விடேஷன் வந்ததா....என்று ஒரு கேள்வி கேட்டு,” அவசியம் கலந்துக்கணும்னு” ஒரு அழைப்பு..கல்யாணத்துக்கு கூப்பிட்டாக் கூட ”பத்திரிகை அனுப்பறேன்..கல்யாணத்துக்கு வா என்று ஒரு தடவை கூப்பிடுவதோடு சரி..”என்னடா, பத்திரிகை அனுப்பிச்சோமே போய் சேர்ந்ததா” என்று கவலைப் படுவது இல்லை..”
“அது தான் பிஸினெஸ் டேக்டிக்ஸ்”
“இருக்கட்டுமே..யார் இப்படி செய்யறாங்க..? எத்தனை நகைக்கடை இருக்கு நம்மூரில..இவங்கள மாதிரி  வாய் நிறைய வாங்க செளக்யமான்னு யார்அன்யோன்யமா கூப்பிடறாங்க?”
 “அதுவும் சரிதான்...முன்னெல்லாம் மளிகைக் கடை நம்ம தெருக்கோடில இருக்கும்..அந்த முதலாளி..” என்ன சார்....பொண்ணு வந்திருக்கா மாதிரி இருக்கு..ஏதாவது விசேஷமா என்று கேட்பாங்க.. நாமளும் குட் நியூஸ்னு சொல்லவும், சந்தோஷம்னு சொல்லி மளிகை சாமானோட கொஞ்சம் கல்கண்டு, சீனி மிட்டாய் எல்லாம் ஃப்ரீயா..அதே சமயம் சந்தோஷமாவும் தருவார்..
     இப்ப பெரிசா டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் வந்துடுச்சு..ஆனா, அந்த கடைக்காரருக்கும் நமக்குமுள்ள அந்த பாசப் பிணைப்பு போயிடுச்சு”
 ” கரெக்டா சொன்னே..இவங்க இந்த விழாவை ரொம்ப சூப்பரா அமைச்சிருந்தாங்க..ஆரம்பத்தில ஒரு பெண் பரத நாட்டியம்..முடிவில ..இந்த பெண் நம் வாடிக்கையாளரின் பெண் என்று ஒரு சிறிய அறிமுகம்..அப்ப, அந்த அப்பா, அம்மா முகத்தை நீ பார்ககணுமே”
 “ அட...”
 “ அது மட்டுமா? சென்னையிலிருந்து மானாட, மயிலாட,அசத்தப் போவது யாரு போல நிறைய எண்டர்டையின்மெண்ட்..”
“அப்படியா..”
 “ அது மட்டுமில்லப்பா..குட்டி..குட்டிக் குழந்தைங்க எல்லாம் மேடையில டான்ஸ் ஆட வைச்சாங்க..”
 “சூப்பர் தான் போ”
 “ அது மட்டுமில்ல..இப்ப காலம் இருக்கிற இருப்பில..ஏதாவது கல்யாணத்துக்குப் போனாக் கூட, கொஞ்சம் அசந்தா விருந்தை கோட்டை விட்டுடுவோம்..”
 “ நல்லா சொன்னே..போ!போன வாரம் ஒரு ஃப்ரெண்ட் பையன் கல்யாணத்துக்குப் போனேன்.. நிறைய ப்ரெண்ட்ஸ்களைப் பார்த்த சந்தோஷத்திலே, அப்புறம் சாப்பிட்டுக்கலாம்னு விட்டுட்டேன்..பசிக்கும் போது போய்ப் பார்த்தா, எல்லாமே காலி”
 ” அதான் பந்திக்கு முந்து என்று சொல்றாங்க..இங்க அந்த பயம் இல்ல..எல்லா நிகழ்ச்சிகளும் முடிந்த பிறகு தான் சாப்பிடவே போனோம்.. எல்லாம் இருந்தது..அந்த கடையில வேலைப் பார்த்தவங்கள் எல்லாரும் ஃபேம்லியோட வந்து “ என்ன சார் வேணும்னு அன்போட கவனிச்சிட்டாங்க..”
 “ எல்லாத்தையும் விட ஹைலைட் என்ன தெரியுமா?”
“என்ன?”
 “ அவங்க கஸ்டமர்ஸை கஸ்டமர்ஸ்னு சொல்லவேயில்ல..”
“ பின்ன என்ன சொல்றாங்க?”
 “ ஃப்ரெண்ட்ஸ் என்று சொல்றாங்க..அப்படி சொல்றதுல ஒரு அன்யோன்யம்..”
 ” அது சரி..கையில என்ன ஒரு படம் வைச்சிருக்கியே..ஒரு பெண் உடம்பு நிறைய நகைகளோட.”
“ ஆமாம்..அந்த பெண்ணுக்கு கஷ்டமாம்..ஏதாவது ஹெல்ப் பண்ணுங்கன்னு கேட்டது?”
 “ நீ என்ன ஹெல்ப் பண்ணப் போற?”
“ அந்த இடுப்புல இருக்கிற ஒட்டியாணத்தையும், கைவளையைகளையும் கழட்டிடப் போறேன்... ஒரு பத்து, பதினைந்து கிலோ குறைஞ்சுடும் இல்லையா.?”
 “ அது எப்படி ஹெல்ப் ஆகும்?”
“ அவங்க ஓவர் வைட்னு கஷ்டப் படறாங்க!
  ஏதோ நம்மாலான உதவி” .

Wednesday, June 6, 2012

இடுக்கண் களைவதாம் நட்பு!


கஃபூர் ஹார்ட்வேர்ஸ் முதலாளி அப்துல் கஃபூரைப் பார்க்க அவர் நண்பர் சாமினாதன் வந்திருந்தார். குசுகுசுவென என்னத் தான் பேசினார்களோ..அடுத்த அரைமணியில் அவர் கிளம்பினார், முகத்தில் ஏகப்பட்ட பரபரப்புடன்! பாய் ’கொஞ்ச நேரம் இருப்பா’ என்று சொல்ல,சொல்ல அந்த சாமினாதன் கிளம்பி விட்டார். ‘என்னப்பா யாக்கோப்பு, இப்ப வந்துட்டுப் போனவரைத் தெரியுமா?’ என்றார் கஃபூர் முதலாளி. ‘நல்லாவே தெரியும், பாய்’ ’ஆறுமுகம் உனக்கு?’ ‘தெரியாது’ ‘அப்ப சரி..இன்னிக்கி நீ பேங்க்குக்கு போற..போய் ஒரு லட்ச ரூபாய் ட்ரா பண்ணிட்டு, அதை அந்த சாமினாதன் வூட்ல போய் கொடுத்துட்டு வா’ ‘சரி’ ’இந்தா இது தான் அவர் வூட்டு அட்ரசு’ எனக்கு புசுபுசுவெனக் கோ[பம் வந்தது..இருக்காதா பின்னே...இந்த கடையில இருபது வருஷமா நான் வேலை பார்க்கிறேன்...டெய்லி பேங்க்குக்கு போய்ட்டு வரதும் நான் தான்..இன்னிக்கு ஒரு நாளும் இல்லாத திருநாளா, ஆறுமுகத்தை பாய் பேங்குக்கு அனுப்புறாரு...புத்தி ஏதாவது பிசகிடுச்சா..என்னை விட நேற்று வந்த ஆறுமுகம் உசத்தியாய்ப் போய்ட்டானோ....இருக்கட்டும்...... தாங்க முடியவில்லை..மதியம் கேட்டே விட்டேன். ’யாக்கோப்பு பாய்.. நம்ம சாமினாதன் வீடு ஏலத்துக்குப் போவுதாம்..லட்ச ரூபாய் இருந்தா சமாளிச்சுடலாமாம்.. கடன் கேட்கத் தான் வந்திருக்கார் மனுசன்..செக்கா கொடுத்தா பேங்குக்குப் போய் வாங்க டயம் இல்ல..அதுக்குள்ள ஜப்தி பண்ண ஆளுங்க வந்துடுவாங்க.. நான் பேங்க் போய் பணம் எடுத்து, அவர் வீட்ல கொடுத்தா, நாலு பேர் முன்னால சங்கடப் படுவாரு.. நீயும் என்னப் போலத் தான்..அதனாலத் தான் அவருக்கு முன்ன,பின்ன தெரியாத ஆறுமுகத்தை அனுப்பினேன்..’ சொல்ல..சொல்ல..என் மனத்துள் ரொம்ப உயரத்துக்கு போய் விட்டார் முதலாளி.

Saturday, June 2, 2012

விளிம்பு நிலை மனிதன்!






படிப்பு முடிந்து வரும்போது,
வானத்தை உரச வேண்டும்
என்று வெறியுடன்




வந்தவர்கள்
ஒன்றும் நடக்காமல்,
முப்பது வருடம்




முழுசாய் தொலைத்து ,
அவரவர் வீட்டு




ஜன்னல் கம்பிகளில்
கன்னத்தை தேய்த்துக் கொண்டு



நிற்கின்றோம்,
வாழ்வின் விளிம்பில்!


*************************


திருவாசகம் புஸ்தகம்


புரட்டினால்


பிரச்னை தீரும்


ஆம்....


வேலை தேடி


சென்னை செல்லுமுன்


மாமா கொடுத்தார் ஒரு


திருவாசகம் புஸ்தகம் !


கையில் உள்ள


இருப்பு தீர்ந்த நிலையில்


எடைக்குப் போட அந்த


புஸ்தகத்தை எடுத்தேன்!

ஒவ்வொரு ஐம்பது 
பக்கத்தில் இருந்த  
நூறு ருபாய் நோட்டுகள் 
என்னை காப்பாற்றின !/


படித்துப் பார்


பிரச்னை தீரும் !


மாமா நினைவு வர


பிரித்தேன்,


ஒவ்வொரு ஐம்பது


பக்கத்தில்


நுறு ருபாய் நோட்டுகள்


என்னை காப்பாற்றின !