”சுக்லாம்பரதரம் .....சொல்லுங்கோ..”
என்று அந்த காவேரி ஆற்றங்கரையில் ஆவணி அவிட்டத்திற்கு வந்திருப்பவர்களைப் பார்த்து, இயந்திர கதியில் சொல்லிக் கொண்டிருந்தான், நாராயணன்...பிடிப்பில்லாமல்..மனத்தில் லயிப்பில்லாமல் அவன் சொன்ன வார்த்தைகளை மந்திரங்களாக நினைத்து, பின்னால் பயபக்தியுடன் சொல்லிக் கொண்டு இருந்தது, அந்த கூட்டம்.
காரணம் இல்லாமல் இல்லை..உணர்ச்சி வசப் பட்டுக் கொண்டு, கண்களில் நீர் கசிந்துருகி..பதம் பிரித்து..அர்த்தத்துடன் ஒவ்வொரு வேத மந்த்ர உச்சாடனையையும் ஸ்பஷ்டமாக..உற்சாகத்துடன், சொல்லிக் கொண்டிருந்த நாணா இன்று இல்லை..செத்துப் போயிட்டான்..இவன் வேறு யாரோ..வெளி நாட்டில் சொல்வாளே..ரூபாவா..ரோபோவா..ஏதோ ஒண்ணு அதைப் போல எந்திர மனுஷன் தான் இதோ இங்க நின்னுண்டு சொல்லிண்டு இருக்கானே இவன்.
வாய் மந்திரங்களைச் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில், கண்கள் வந்திருந்த தலைகளை எண்ணிக் கொண்டிருந்தது...மனசோ...தலைக்கு முக்கால் ரூபாய் என்று கணக்கு பார்த்துக் கொண்டு இருந்தது!
யாருக்காக சேர்க்கப் போகிறான், நாணா? உறவு என்று சொல்லிக் கொள்வதற்கு, இந்த உலகில் ஒட்டிக் கொண்டிருப்பது அவனுடைய அம்மா தான்..
அம்மாவிற்கு அவன் மேல் அபிரிமிதமான பாசம்...ஆஸ்த்மாவிற்கு அவள் மேல் பாசம்..குரங்குப் பிடியாய் பிடித்துக் கொண்டு விட மாட்டேன் என்கிறது..
மனசுக்குள் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறானே..தட்சணை..அது அம்மாவை சந்தோஷப் படுத்தாது..இவன் வாய் கொள்ளாம கூப்பிடறதே போறும்..அதுவே ஆனந்தம் அந்த ஜீவனுக்கு!
....இதோ இங்க நிக்கறாளே..இவாளைப் போல கார்த்தால பத்து மணிக்கு ஆஃபீசிற்குப் போய் ..அரட்டை அடிச்சுட்டு..சாயங்காலம் ..புதுசாய் குளிச்சவன் போல ’பளிச்’னு ஆத்துக்கு ஓடோடி வராளே..அது மாதிரி இல்லையேன்னு தான் ஏக்கமா இருக்கும்..அதுக்கென்ன பண்றது? வைதீகன் தர்ப்பக் கட்டையை தூக்கிண்டு தான் போகணும்..டை கட்டிண்டு, ஆஃபீசுக்குப் போக முடியுமா?
குடுமியோடு, டையை கற்பனை செய்து பார்த்தான்..கவிந்து கொண்டிருந்த துக்கத்திலும்..மின்னல் கீற்றாக சிரிப்பு மலர்ந்தது, மனதிற்குள்...
‘சூர்யஸ்ய....மாமன்ஸ்ய ..’ மனம் சூரியனை நினைக்க வில்லை..சந்திராவை நினைத்துக் கொண்டிருந்தது!
அவனைப் போலத் தான் அவளும்! ஆனா, ஒரு வித்யாசம்..அவ அம்மா நாலு ஆத்துக்கு உபகாரம் பண்ணக் கிளம்பிடுவா..ஏதாவது விசேஷம்னா,
அங்க கனகத்து மாமியோட சமையல் தான் மணக்கும்!
கனகத்து மாமி, தம் பொண்ணு சந்திராவையும் ஒத்தாசைக்குக் கூட்டிண்டு போவா..அந்த காலத்தில..கல்லிடைக் குறிச்சி மாதிரி வட்டமா, பெரிய ஆத்துக் கூடத்தில எல்லாரும் ஊர் வம்பு பேசிண்டும்...அப்பளாத்துக்கு வட்டு இட்டுண்டும் இருக்கும் போது தான் ஒரு நாள் நாணாவின் கவனத்தைக் கவர்ந்தாள் சந்திரா.
தாழ்வாரத்தில..வெயில் வந்தா மணி பன்னிரெண்டு என்று தெரியும்..தெரிஞ்சுண்டும், வாசல் வழியாப் போற நாணாவை சந்திரா எதுக்குக் கூப்பிடணும்?
’இந்தாங்கோ... நாணு சாஸ்திரிகள் வாள்! மணி என்ன ஆறது..சித்த சொல்லுங்கோ?’
கண்களில் குறும்பு மின்ன அவள் அன்று கேட்டதை நினைத்துக் கொள்கிறான், நாணா..
அவனை யாரும் நாணு சாஸ்திரிகள் என்று கூப்பிட மாட்டா..அதுக்காக ‘டேய் நாணுன்னும் கூப்பிடறது கிடையாது..கும்ப கோணம் ராஜா வேத பாடசாலையில படிச்ச பையன்கிற மரியாதை அவனிடம் ஒட்டிண்டு இருக்கும்!
’ விசாலாட்சி அம்பா சமேத விஸ்வ நாத ஸ்வாமி சன்னிதெள...
அகிலாண்டேஸ்வரி அம்பா சமேத ஜம்புகேஸ்வர ஸ்வாமி சன்னிதெள..
சுகுந்த குந்தளாம்பா அம்பா சமேத மாத்ருபூதேஸ்வர ஸ்வாமி சன்னிதெள..’
‘.....சமையல் காரா ஆத்திலே பொறந்ததே ஈரேழு ஜன்மத்துக்கும் போறும்..
தர்ப்பைப் பிடிக்கிற வாத்யாருக்குவேற நான் வாக்கப் படணுமா நான்? நன்னா கதை சொன்னே போ!..எனக்கு வரப் போற ஆம்ப்டையான் சின்ன வேலையில இருந்தாலும் டெய்லி ஆஃபீஸ் போயிண்டு வந்துண்டு இருக்கணும் அதான் என் ஆசை!”
’மளுக்’கென்று நாணாவின் மூன்று மாத ஆசையை, முருங்கைக் காயை ஒடிக்கிறார்போல ஒடித்துப் போட்டு விட்டு ’ஸ்டைலா’க நடந்து சென்று விட்டாள் அந்த சந்திரா!
‘அதான் என் ஆசை..அதான் என் ஆசை..’ சினிமால சொல்றாப்பல ஏதோ ஒண்ணு, மனசுல படீர்..படீர்னு வந்து அடிச்சது நாணாவுக்கு..வாயில ‘அதான்
என் ஆசை’ன்னு அவனை மீறி வரப் பார்க்கவே, சட்னு ‘ஆனந்த வல்லி அம்பா சமேத நாக நாத ஸ்வாமி சன்னிதெள’ன்னு ஒரு வழியா சமாளிச்சுண்டுட்டான்..
தேவதைகளுக்கு அர்க்யம் விட்டுக் கொண்டிருந்தார்கள், எல்லாரும்..
முழங்காலளவு தண்ணீரில் நின்று கொண்டு!
நாணா கரையில் நின்று கொண்டு மந்திரம் சொல்லிக் கொண்டு இருந்தான்..
‘...ச்சே..என்ன பொழைப்பு இது..ஒவ்வொருத்தன் எவ்வளவு அமெரிக்கையா இருக்கான்..இந்த காலத்திலும், நாம காயத்ரியை கட்டிண்டு
மாரடிக்கணும்னு தலையில எழுதியிருக்கே..என்ன பண்றது?...’
இதான் கடைசீ ஆவணி அவிட்டம்..தலையை ‘க்ராப்’ வைச்சுண்டு இன்னும் பத்து நாள்ள பட்டணத்தைப் பார்க்க ஓடிப் போக வேண்டியது தான்
வாசு ஏதோ ஆட்டோ ஓட்டறானாம்..ஏதாவது ஒரு ஒர்க்ஷாப்ல க்ளீனர் வேலையாவது வாங்கித் தர மாட்டானா...! அப்புறமா கொஞ்சம் காசு சேர்த்துண்டு இப்ப என்னடி சொல்றேன்னு சந்திராவைப் பார்த்து நாலு கேள்வி கேட்கணும்..
“சொல்லுங்கோ..ஓம் பூர்ப்புவஸ்ஸரஹா..தத்ஸ விதுர்வரேண்யம்.......”
அவன் சொல்லிக் கொண்டே போக, எல்லாரும் கோரஸாகச் சொன்னார்கள்.
நாராயணன் ஸ்ரத்தையா மந்திரம் சொல்லிண்டு இருக்கான்... நாம பண்ணி வைக்கிற கடைசி ஆவணி அவிட்டம் என்று கூட இருக்கலாம்!
நாணா என்ன நாணா..பட்டணம் போனதுக்கப்புறம் க்ராப்..மீசை எல்லாம்
வைச்சுண்டு நம்பளைப் பார்த்தாலே’டிப்டாப்’பாக இருக்கணும்...எல்லாரும்
மிஸ்டர் நாராயணன் சார் இருக்காரான்னு கூப்பிடணும்....கலர்,கலரா சட்டைப்
போட்டுக்கணும்..பேண்ட் போட்டுக்கணும்......
எல்லாரும் ஒருவரை ஒருவர் நமஸ்காரம் பண்ணிக் கொண்டு இருந்தார்கள்..புதுசா யாரோ ஒருத்தர் நாணா பக்கம் வந்தார்..அவருடன் கூட
கோடி ஆத்து சீனு!
” .... நாணா, இவர் நம்மூருக்கு புதுசா வந்திருக்கார்..டெல்லியில பெரிய புரஃபஸராயிருந்து ரிடையர்ட் ஆனாராம்..உன்னோட பேசணும்னு ஆசைப் படறார்..” என்றான் சீனு..
” நமஸ்காரம்”
“ நமஸ்காரம்”
கை கூப்பியவர் அப்படியே அவன் கையை வாத்ஸல்யமாகப் பிடித்துக் கொண்டார்.
“இந்த இருபது வயசுல அதுஅதுகள் ’ஸ்டெப்’ வைச்சுண்டு..சிகரெட் குடிச்சுண்டு அலையறதுகள்..பழசை மறக்காம உங்களைப் போல சில பேர் இப்படி இருக்கறதுனால தான் நாட்டில மழை கொஞ்சமாவது பெய்யறது....
சும்மா சொல்லக் கூடாது..மந்திரங்கள் எல்லாம் ஸ்வர சுத்தமா நன்னா
சொல்றேள்.. நானும் டில்லியில பார்த்திருக்கேனே..என் பர்ஸ் மேல தான் நாட்டம் எல்லார்க்கும்...ஒண்ணும் தெரியாது..ஆனா, பெரிசா தர்ப்ப்பக் கட்டை தூக்கிண்டு வந்துடும், சாஸ்திரிகள்னு...”
சொல்லிச் சொல்லி மாய்ந்து போனவர், அவனது கைகளை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டார்... நாணாவிற்கு மனது நெகிழ்ந்து போய் விட்டது அப்படியே!
”ஆச்சார்ய தேவோ பவ.... என்று தெரியாமலா சொன்னார்கள்...இத்துனூண்டு வயசுல இவ்வளவு ஞானத்தைப் பார்த்தது இல்ல...தீர்க்காயுஸா இருக்கணும்...”
நாணாவிற்கு பெருமை தாங்க முடியவில்லை..
குடுமியை முடிந்து கொண்டான்..
கணீரென மந்திரங்களை உச்சரிக்க ஆரம்பித்தான்..
அப்படி மந்திரங்களை உச்சரிக்க ஆரம்பித்த போது, கிரஹணம் ஒன்று கொஞ்சம் கொஞ்சமாய்
விலக ஆரம்பித்தது, மனதுக்குள்ளிருந்து.
’சந்திர’ கிரஹணமாய்த் தான் இருக்க வேண்டும் அது! .
பின் குறிப்பு:
நான் எழுதி, அச்சில் வந்த முப்பத்தி மூன்று சிறுகதைகளில் மூன்றாவதாக வெளி வந்த சிறுகதை இது!
பத்திரிகை : தினமணி கதிர்
இதழ் : 10.02.1985