Thursday, January 5, 2017

நெய்யாற்றங்கரையில் குடும்பம் இருந்தது. நாகர் கோவிலில் வேலை.வேப்பமூடில் ரூம் எடுத்து தங்கி இருந்தான்.அடிக்கடி, 'ட்ரவேண்டரம் போட் மெயிலி'ல்  பயணிப்பான்.க்யூ இருந்தாலும்,இல்லாவிட்டாலும் அந்த இரண்டாவது கவுண்டருக்குத் தான் வருவான்.அதிலும் ஒரு டசன் பேர்கள் பின்னாடி நின்றிருந்தாலும், அவர்கள் அத்தனை பேருக்கும் பெருந்தன்மையாய் வழி விட்டு, கடைசி ஆளாய் தான் டிக்கெட் வாங்குவான்.அதை அந்த கவுண்டரில் இருந்த அந்த பெண்ணும்  நன்றாக தெரிந்து வைத்திருந்தாள்.
அப்படித் தான்  அவன், ஒரு சாவதானமான புதன் கிழமை மதியம் நாகர் கோவில் ரயில்வே ஜங்ஷன் வந்த போது....
"நெய்யாற்றங்கரை தானே?"
"அட..எப்டீ கண்டுபிடிச்சீங்க?"
"அதான்,நெத்தீல எழுதி ஒட்டியிருக்கே.."
நெற்றியை பொய்யாய் தடவி பார்த்துக் கொண்டான். கவுண்டரில் இருந்த அந்த பெண்ணும் அதைப் பார்த்து சிரித்தாள்.
"சரி..ஊரை சொல்லிட்டீங்க...ஒங்க பேரு?"
"மேரி"
"........................."
"'வில் யு மேரி மீ'ன்னு ஒடனே, மனசுக்குள்ள மத்தாப்பு பறக்குமே?"
"அட...ஆமாங்க!"
"ஞானஸ்னானம் பண்ணிப்பீங்களா?"
"கங்காஸ்னானம் பண்ணுவேன்...அதுவும் தீபாவளிக்கு தீபாவளி தான்..என்னைப் போய்.."
"பயப்படாதீங்க....நாங்க முஸ்லிம்"
"நீங்க ஸ்லிம்மா இருக்கும் போதே தெரிஞ்சுகிட்டேன்..நாங்க மாப்ளாஸ்"
"அட!"
சந்தோஷத்தில் அவள் ஹம் செய்தாள்..
'உளறி கொட்டுகிறோமோ' என்று பயமாக இருந்தது.இருந்தாலும் தொடர்ந்தான்..
"ஏங்க...இது, பைரவி தானே?"
"எப்டீ கண்டுபிடிச்சீங்க?"
"கொஞ்சம் கொஞ்சம் க்ளாஸிகல் ம்யூஸிக் தெரியும்ங்க...நமக்கு அந்த பீல்டுல ப்ரெண்ட்ஸ்ங்க ஜாஸ்தி!"
"ஓ"
"ஒங்களுக்கு பைரவி நல்லா வருதுங்க!"
"நாலு பிஸ்கட்ட காசு குடுத்து, கடைல வாங்கி, நடுத்தெருல போட்டுப் பாருங்க..ஒங்களுக்கும் பைரவி வரும்!"
"கலாய்க்கறீங்களா?"
"ஊகூம்!"
"உண்மையை சொல்லுங்க..நீங்க?"
"நாங்க தேசிகர்ம்பாங்க.."
"அட...நாங்களும் தேசிகர் தாங்க...கேரளாக்கு புலம் பெயர்ந்துட்டோம்..தண்டபாணி தேசிகர் கூட எங்களுக்கு..."
"டிஸ்டண்ட் ரிலேட்டிவ் ம்பீங்களே,ஒடனே!"
"ஆமாங்க...ஒரு இருநூத்தைம்பது  கிலோ மீட்டர் டிஸ்டன்ஸ் .."
"ஹா...ஹா.."
"அது சரி, இந்த 'செவன்த் பே கமிஷன்'ல ஒங்களுக்கு நல்ல ஹைக் தானே!"
"இல்லீங்க, வேலைக்கு சேர்ந்து ஒண்ணரை வருஷம் தான் ஆறது..அப்பா திடீர்னு காலமாயிட்டாரு...அஞ்சாறு தம்பி தங்கைங்க..இந்த வேலை கூட 'கம்பாஸினேட் க்ரவுண்ட்'ல கிடைச்சது தான்..அம்மாக்கு அப்பாவோட பென்ஷன் வரதுனால, ஏதோ காலம் ஓடுது...நீங்க?"
"அதை ஏன் கேக்கறீங்க? எங்க வீட்ல எல்லாரும் செட்டில் ஆயிட்டாங்க..நான் ஒர்த்தன் தான் வீணா போயிட்டேன்..கால் டாக்ஸி ட்ரைவரா ஏதோ பொழைப்பு ஓடிகிட்டு இருக்கு!ஹூம்!"
       ஆழ் மௌனம், ஒன்று அநிச்சையாய் அவர்கள் இருவருக்கும் இடையே குறுக்கே புகுந்தது.
       மௌனத்தை கலைத்தான், அவன்.
       "வரேங்க!"
       "ம்"
.............................
      அடுத்த முறை ஜங்ஷன் வரும் போது, ஏனோ அவன்  அந்த இரண்டாவது கவுண்டர் பக்கம் எட்டி கூட பார்க்கவில்லை!
       அவள் அதை எதிர்பார்க்கவும் இல்லை!!
 





............
    

"