எனக்கு இன்று காலை ஒரு ரிஜிஸ்டர் போஸ்ட் வந்தது. படித்துப்
பார்த்து விட்டு மயங்கி விழுந்தவன் தான் !
ஆறு மணி நேரம் கழித்து முழிப்பு வந்தது...மறுபடியும் அந்த வக்கீல் நோட்டீஸ்
ஞாபகம் வர மறுபடி மயக்கம் ...இப்படியாகத் தானே ஒரு நாளில் இருபத்தி ஐந்து மணி நேரம் கிட்ட தட்ட 'கோமா' ஸ்டேஜில் கிடந்தேன் !
அப்படி என்ன இருந்தது அதில் !
என்னை அலைக் கழித்த அந்த வக்கீல் நோட்டீஸ் இது தான் ...
".........எங்கள் கட்சிக் காரர் திரு அருமை ராஜன் சாரி எருமை ராஜன் தலைவர் எருமைகள் சங்கம் 777, எருமை ராஜன் நகர், எருது நகர் பின் கோட் 7777777
என்ற விலாசத்தில் வசிக்கும் அன்னார் சார்பாக நான் அறிவிப்பது என்னவென்றால் தாங்கள் தங்கள் வலைப்பூவில் அவரது இனமான
எருமைகளைப் பற்றி மிகமிகக் கேவலமாக அதுவும் மனிதர்களுடன் சம்பந்தப் படுத்தி எழுதி உள்ளீர்கள் .
இதனால் எங்கள் கட்சிக் காரர் மனவருத்தம் அடைந்து அதே மனக்
கிலேசத்துடன் NATIONAL HIGHWAYS ஐ கடக்கும் போது, மனிதர்கள் ஓட்டி வந்த MATADOR VAN
ஒன்று இடித்து மண்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவருக்கு MENTAL DEPRESSION வருவதற்கும் காரணமாக உங்கள் எழுத்து உள்ளது .
இந்த அசெளகர்யங்களினால் ஏன் உங்கள் மீது எ.பி.கோ. செக்ஷன் 707
பிரகாரம் மான நஷ்ட ஈடு வழக்கு போடக்கூடாது என்பதற்கும் , தங்களால்
என் கட்சிக் காரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஏன் ஏழு மிலியன் டாலர்
அபராதம் விதிக்க கூடாது என்பதற்கும் இந்த அறிவிப்பு கண்ட எழுபத்திஏழு நாட்களுக்குள்
பதில் தருமாறு எங்கள் கட்சிக் காரர் சார்பாக கோரப் படுகிறது. அப்படி தங்களிடமிருந்து பதில் வராத பட்சத்தில் இந்த அறிவிப்பையே சம்மதமாக
எடுத்துக் கொண்டு தங்கள் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப் படும் என்று
இதன் மூலம் கடுமையாக எச்சரிக்கை செய்யப் படுகிறது .
இவண் ,
எங்கள் கட்சிக் காரர் எருமை ராஜன் சார்பாக ,
எம தர்ம ராஜன் எம்.ஏ .பி. எல் .... "
எப்பொழுது எருமை மாடு பற்றி 'கன்னா பின்னா' என்று எழுதினேன்என்று
எனக்கும் தெரியவில்லை ..மேலும்
எருமை மாடு என்பது எனக்கு மிகவும் பிடித்த மிருகம். நான் மட்டும் பெரிய தலைவராய் இருந்திருந்தால் எருமை மாட்டையே தேசிய
விலங்காக
அறிவித்து விடும் அளவிற்கு ஆசை உள்ளவன்.எருமை மாடுகள் மீது இத்தனை
பிரியமாய் இருக்கும் ஒருவனைப் பார்த்து இப்படியா எழுதுவது ?
அது தான் என் வருத்தமே !
இப்போது நான் என்ன செய்வது ?
இந்த இக்கட்டினை எப்படி சமாளிப்பது?
ஏதாவது பதில் எழுத வேண்டுமே...
இல்லாவிட்டால் ஏழு மிலியன் டாலராமே ...
ஆயிரம் ரூபாய் நோட்டை பார்த்தே நூறு நாளுக்கு மேல் ஆகி விட்டது !
யாராவது வக்கீல் நண்பர்கள் இருந்தால் சொல்லுங்களேன்...ப்ளீஸ்..
பின் குறிப்பு :
1. வக்கீல் FEES கொடுக்க என்னிடம் காசு கிடையாது !
2. ஒரு கட்டு வைக்கோல் வேண்டுமானால் தருகிறேன் !!
கடைசியாக வந்த தகவல்
அடுத்த இரண்டு நாட்கள் கழித்து மறுபடியும் ஒரு ரிஜிஸ்டர்ட் போஸ்ட் !
பயந்து கொண்டே கையெழுத்துப் போட்டேன் ..பிரித்துப் பார்த்தால் அந்த
வக்கீல் நோட்டீஸ் வேறொரு வலைத்தள சொந்தக் காரருக்காம் !
தவறிப் போய் எனக்கு அனுப்பி விட் டார்களாம்.!
நல்ல வேளை ..தலைக்கு வந்தது, கொம்போடு போயிற்று !