Tuesday, December 20, 2011

ராவ் பகதூர் சிங்காரமும்..வைகுண்ட ஏகாதசியும்!

அந்த காலத்தில் தில்லானா மோகனாம்பாளுக்கும்..அதன் பிறகு வந்த ராவ் பகதூர் சிங்காரம் ஆகிய தொடர்களுக்குமாக வெள்ளிக்கிழமை எப்படா வரும் என்று காத்திருந்து,விகடன் வருவதற்க்குள் ஒரு போட்டா போட்டி..அது வந்தவுடன் ஆங்கரை அகத்தில் திண்ணையில் கழுகு போல் காத்து கிடக்கும் தாத்தா தன் வீட்டோ அதிகாரத்தை பயன் படுத்தி விகடனை லபக்கென்று எடுத்துக் கொள்ள, முணுமுணுப்புடன் அம்மாவும்,சித்திகளும்,சித்தப்பாக்களும்.. அத்தைகளும் ரேழி உள்ளுக்குள் ஏக்கம் ப்ளஸ் கோபத்துடன் மறைய..அவர்கள் முகங்களை ’அதில் என்ன அப்படி?’என்று சின்னப் பிள்ளையான நான் புரியாமல் பார்க்க..பிறகு விபரம் தெரிந்த நாளில்....மணியனின் காதலித்தால் போதுமா.உமாவிற்காக.இதய வீணை..வனஜா..சுந்தரம்..கிரிக்காக ..என்று நானும் அவர்களுடன் அடித்துக் கொண்டேன் என்பது வேறு விஷயம்!
..அது ஒரு காலம்..இன்றைய மெகா சீரியல் இடத்தை..அன்றைய தொடர்கதைகள் பிடித்துக் கொள்ள..ஹூம்.. நான் கடைசியாய் படித்த தொடர்..அழகு..தாமரை மணாளன்..என்று ஞாபகம்..
தில்லானா மோகனாம்பாள் ..ராவ் பகதூர் சிங்காரம் ஒப்பிடவே முடியாது..தில்லானா மோகனாம்பாள் பக்கம் அதிர்ஷ்டக் காற்று வீச..அது பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் ஆயிற்று..அந்த அளவுக்கு திரையில் விளையாட்டுப் பிள்ளை பரிமளிக்க வில்லை என்றாலும் கதையை பற்றி துளிக் கூட குறைவாகச் சொல்லி விட முடியாது..COMPARE பண்ண வேண்டும் என்று நீங்கள் கட்டாயப் படுத்தினால் இப்படி வேண்டுமானால் சொல்லலாம்!
தில்லானா மோகனாம்பாள் ஜாங்கிரி... ராவ் பகதூர் சிங்காரம் ஜிலேபி!
ராவ் பகதூர் சிங்காரம் ஒரு அருமையான தொடர்..எங்கள் பக்கத்து வீட்டு மாமி அதான் .. நிகிலாவின் அம்மா சொன்னது இன்னமும் ஞாபகத்திற்கு வருகிறது..கொத்தமங்கலம் சுப்பு..கோபுலு..போன்ற விகடன் குழு கதை நடந்த ஊருக்கு வந்து ஒரு ஆறு மாதம் கேம்ப் போட்டுக் கொண்டு கதை எழுதுவார்களாம்..அந்த மாமி மேல் மங்கலம்!
ஆரம்பம் படு ஜோர்..அந்த பஞ்ச பாண்டவர்கள் அறிமுகம் அருமை..சிங்காரம்..கில்லாடி முருகன்..பஞ்சாட்சரம்..கதுவாலி ராமன்..கூத்தாடி ரங்கன்..சிங்காரம் சித்தப்பா தர்மலிங்கம் அவர் பையன் வேலுச்சாமி..சாதாரண வேலுச்சாமி இல்லை கவாய் வேலுச்சாமியாக்கும்!
அந்த சுருளிபாறை..காளை மாடு நீல வேணி..ஜல்லி கட்டு உறங்காம் பட்டி பெரிய கருப்பன்..செங்கமலம்..அப்படியே பத்மினி ஜாடை..சிங்காரம் சிவாஜி ஜாடை கோபுலு கை வண்ணம்!
பபூன் பஞ்சு..ட்ரையினில் சீட்டு விளையாடி, பிடிபடும் போது..போலீஸ்காரரிடம் தம்பட்டம் அடிப்பது..அயன் ஸ்த்ரீபார்ட் அல்லி முத்து..அதற்கு சொல்லப் படும் வியாக்யானம்..கோலாலம்பூர் குயிலிசை கோபால் தாஸ் ..சின்ன..சின்ன பாத்திரங்கள் கூட..சிக்கென மனதினில் இடம் பிடித்து விடும் லாவகம் ..செங்கமலம் அப்பா முத்தப்பர் என்றவுடன்..அவரின் ரத்த கொதிப்பு..முன்கோபம்..அவர் ஃப்ரண்ட் காட்டுப் பாவா ராவுத்தர்..அவர் பாடும் குணங்குடி மஸ்தான் சாஹிப் பாடல்கள் எல்லாமே கூட வந்து விடும்!
அந்த நாட்டுப் புறப் பாடல்கள்..
”..முனுசாமியே முன் படுதாவை விடுடா..”
“ நாதாரி நாயைப் போல் நாரதனும்
நன்று இங்கு விகடமும் பண்ண வந்தாய்..”
அதற்கு..
“ நாயென்றும் பேயென்றும் பேசி, அடி
நாக்கு தடித்த மவராசி..
நாயெல்லாம் விசுவாசி..
அவை முன் நீ ஒரு தூசி”
என்ற பதிலடி..
(ராவ் பகதூர் சிங்காரம் படித்து அனுபவித்தவர்களுக்குத் தான் நான் எழுதுவது புரியும்..அவர்களுக்காகவே தான் இது எழுதுகிறேன்)
பரணை ஒழிக்கும் போது அங்கே கட்டு கட்டாக ராவ் பகதூர் சிங்காரம் தொடர் வந்த பக்கங்கள் ..பாலு சித்தப்பா பைண்ட் பண்ண சேர்த்து வைத்திருக்கிறார்! அப்புறம் பார்த்தால் காணோம்!
என்னுடைய இருபத்தைந்தாவது வயதில் அச்சு..அச்சாக கோபுலு படத்துடன்,வந்த தொடர்கதை பைண்டிங்கை..(தொடரை பைண்டிங்கில் படிப்பது பரம சுகம்) லைப்ரரியில் இருந்து சுட்டுக் கொண்டு வந்தேன் ஒரு long range Plan! என் ரிடையர்ட்மெண்ட் பீரியடில் படித்து சுவைப்பதற்காக பாதுகாத்து வைத்த அந்த பைண்டிங் புக்கை நான் என் முப்பதாவது வயதில் வெளியூர் ட்ரான்ஸ்பர் ஆக, அண்ணா அதாவது எங்கள் அப்பா அதை கன காரியமாய் பழைய புஸ்தகக் காரனிடம் போட்டு..காசு பார்த்து விட்டது வேறு கதை!
ரிடையர்ட் ஆனவுடன் படிக்க வேண்டுமென்று ஒரு ஜாபிதாவே வைத்திருக்கிறேன்.
விகடன் - தெருவிளக்கு( பழைய பைண்டிங்குடன்)
- ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்.
- துப்பறியும் சாம்பு - தேவன்
- மிஸ்டர் வேதாந்தம் - தேவன்
- காதலித்தால் போதுமா - மணியன்.
- தில்லானா மோகனாம்பாள் (ரிஷபனிடம் இருக்கலாம்)
- ராவ் பகதூர் சிங்காரம் ( இரண்டுமே “கலைமணி”)
குமுதம் - உயிரின் விலை பத்து லட்சம் ( யார் எழுதியது என்று தெரியவில்லை)
உடல் பொருள் ஆனந்தி - ஜாவர் சீதாராமன்.
அது சரி எதனால் திடீரென்று இப்போது இந்த ராவ் பகதூர் சிங்காரம் ஞாபகம்?
அதில் ஸ்ரீரங்கத்தில் நடக்கும் வைகுண்ட ஏகாதசி பற்றியும் வருகிறது..
ஒருவன் நாடகம் நடக்கப் போகிறது என்று பறை அடித்துக் கொண்டு போக,ஆபத்துக்கு தோஷமில்லை ஒரு பத்து நிமிடம் கழித்து வைகுண்டம் போனாலும் பரவாயில்லை என்று மரணத்தின் விளிம்பில் இருக்கும் கிழவர்களும் அயன் ஸ்த்ரீ பார்ட அல்லி முத்து நாடகத்தை பார்க்க ஆவலுடன வ்ர..
அட... வைகுண்ட ஏகாதசியும் வரப் போகிறதே...
அதனால் இருக்குமோ?

5 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஆபத்துக்கு தோஷமில்லை ஒரு பத்து நிமிடம் கழித்து வைகுண்டம் போனாலும் பரவாயில்லை என்று மரணத்தின் விளிம்பில் இருக்கும் கிழவர்களும் அயன் ஸ்த்ரீ பார்ட அல்லி முத்து நாடகத்தை பார்க்க ஆவலுடன வ்ர..//

விறுவிறுப்பான ஊறுகாய் போன்ற இந்த விஷயம் கிடைக்கும் வரை, படிக்க ஒரு மாதிரியாகத் தான் இருந்தது.

இப்போ தான் நானே வைகுண்டத்திற்கோ அல்லது அதை விட ருசியான வேறெங்கோ செல்கிற திருப்தி.vgk

middleclassmadhavi said...

Thodarkathaitai kizhithu vaithu, bind panni, athan original padangaludan, pathi pakka matra seithikalaiai padippathan sugame alaadhi!!

Thanks!

நிலாமகள் said...

எதனால் இப்போது இந்த ராவ் பகதூர் சிங்காரம் ஞாபகம்?//

ஒரு மாண‌வ‌ன் ப‌சுமாட்டைப்ப‌ற்றி தேர்வுக்கு க‌ட்டுரை ப‌டித்து சென்றிருந்தானாம். தேர்வுத் தாளில் கேட்க‌ப்ப‌ட்ட‌தோ தென்னைம‌ர‌ம் ப‌ற்றிய‌ க‌ட்டுரை. ப‌டித்த‌தை எழுதிவிட்டு, இறுதியில் 'இப்ப‌டியான‌ ப‌சுவைதான் தென்னைம‌ர‌த்தில் பிடித்து க‌ட்டுவார்க‌ள்' என்று முடித்த‌ க‌தையாய்...

//ராவ் பகதூர் சிங்காரம் படித்து அனுபவித்தவர்களுக்குத் தான் நான் எழுதுவது புரியும்..அவர்களுக்காகவே தான் இது எழுதுகிறேன்//

பொடிசுங்க‌ளெல்லாம் ஓர‌மா உட்காருங்க‌!

//..அது ஒரு காலம்..இன்றைய மெகா சீரியல் இடத்தை..அன்றைய தொடர்கதைகள் பிடித்துக் கொள்ள..ஹூம்..//

உங்க‌ விவ‌ர‌ணை, அந்த‌த் தொட‌ரை ப‌டிக்காம‌ல் போனோமே என்ற‌ ஏக்க‌த்தை தூண்டிய‌து!

ரிஷபன் said...

ஆங்கரை ஆத்தில் திண்ணையில் கழுகு போல் காத்து கிடக்கும் தாத்தா தன் வீட்டோ அதிகாரத்தை பயன் படுத்தி விகடனை லபக்கென்று எடுத்துக் கொள்ள, முணுமுணுப்புடன் அம்மாவும்,சித்திகளும்,சித்தப்பாக்களும்.. அத்தைகளும் ரேழி உள்ளுக்குள் ஏக்கம் ப்ளஸ் கோபத்துடன் மறைய..அவர்கள் முகங்களை ’அதில் என்ன அப்படி?’என்று சின்னப் பிள்ளையான நான் புரியாமல் பார்க்க..பிறகு விபரம் தெரிந்த நாளில்....மணியனின் காதலித்தால் போதுமா.உமாவிற்காக.இதய வீணை..வனஜா..சுந்தரம்..கிரிக்காக ..என்று நானும் அவர்களுடன் அடித்துக் கொண்டேன் என்பது வேறு விஷயம்!

தில்லானா மோகனாம்பாள் புத்தகத்தை சவுக்கில் (பழைய புத்தகக் கடையில்) விகடனில் வெளிவந்ததை வாங்கி (யாருக்கும் தர மாட்டேன்) இத்துப் போகிற நிலையில் வைத்திருக்கிறேன்!

சில பழைய கதைகளைப் படிக்கும்போது என் பேனாவை முறித்து போடத்தான் தோன்றுகிறது..

கோமதி அரசு said...

அந்த சுருளிபாறை..காளை மாடு நீல வேணி..ஜல்லி கட்டு உறங்காம் பட்டி பெரிய கருப்பன்..செங்கமலம்..அப்படியே பத்மினி ஜாடை..சிங்காரம் சிவாஜி ஜாடை கோபுலு கை வண்ணம்!//

போனவருடம் ராவ்பகதூர் சிங்காரம் படித்தேன். செங்கமலம் கம்பீரமாய் நீலவேணியை பிடித்துக் கொண்டு இருப்பது கண்ணை விட்டு நீங்காது.

நீங்கள் சொல்வது போல் நானும் நினைத்துக் கொண்டேன். கோபுலு அவர்களின் கை வண்ணம் நன்றாக இருக்கும்.