Saturday, November 26, 2011

டாலரும்..ரூபாயும்!


என் நண்பனின் மகனிடம் ஸ்கைப்பில் பேசினேன்..
அடிக்கடி அவனுடன் பேசுவது வழக்கம் .மேலும் அவன் என் ஸ்டூடண்ட்.
அங்கு காஃபி இரண்டு டாலராம்..தோசை ஐந்து டாலராம்..
“என்னப்பா, காஃபி நூறு ரூபாயா? தோசை இரு நூற்றைம்பது ரூபாயா?”
இப்பொழுதெல்லாம் ஒரு டாலர் ஐம்பது ரூபா ஆகிறதே!
“அங்க்கிள்...எதையும் ரூபாயில் கன்வெர்ட் பண்ணாதீங்க..மயக்கம் தான் வரும்.
இது நடந்து ஒரு வாரம் ஆகியிருக்கும்.
சலூனுக்கு சென்றிருந்தேன்.
ஆவின் பால் கட்டண உயர்வு..பஸ் கட்டண உயர்வு அமுல்படுத்திய நேரம்.
முடிதிருத்துபவர் உணர்ச்சிவசப் பட்டு சொல்லிக் கொண்டிருந்தார்.
”என்னிக்கு பால் விலை ஏறும்னு சொல்லி வாய் மூடலை..அதுக்குள்ள டீக்ககடையில டீ விலை ஏத்திட்டான், சார்.பஸ் பாருங்க மெய்ன்கார்கேட்டுக்கு நாலு ரூபா..என்ன் அநியாயம்..
காய்கறி அது உச்சத்தில நிக்குது..”
பொறுமி தள்ளினார், அவர்.
பேசும் போது,என் தலையில் அவர் கத்தி விளையாடிக் கொண்டிருந்தது.
நான் ஏன் பதில் பேசுகிறேன்..
ஒரு வழியாய் முடித்தார்.
நூறு ரூபாய் நோட்டு நீட்டினேன்.
அவர் ஐம்பது ரூபாய் பாக்கி கொடுத்தார்.
என்னது..இருக்கிற நாலு முடியை வெட்ட ஐம்பது ரூபாயா..என்ன ஒரு அநியாயம்?
மனசு அடங்கவேயில்லை..
யாரிடமாவது சொல்லி ஆற்றி கொள்ள வேண்டும் போல் இருந்தது.
எதேச்சையாய் கண்ணன்..நண்பனின் மகன்... வந்தான் லைனில்..
“சொல்லுங்க, அங்க்கிள்.
நம்மூர் எப்படி இருக்கு?”
“கண்ணா..அதையேன் கேட்கறே? .இங்க.. விலை வாசி எக்கசக்கமா எகிறிடுச்சு.., பஸ் சார்ஜ்..பால் கட்டணம் எல்லாம் ஏறிடுச்சு இப்ப முடி வெட்டிக்க ஒரு டாலர் வாங்கறாங்க. நம்மூர்ல.”
“ஐயையோ ஐம்பது ரூபாயா அங்க்கிள்?”
“கண்ணா..எதையும் ரூபாயில கணக்குப் போடாதே!
மயக்கம் தான் வரும்!”

11 comments:

Unknown said...

சூப்பர்... காலம் போற போக்குல முடியெல்லாம் எங்க வெட்டறது. முனிவர்கள் ஸ்டைல்-ல ஜடாமுடி தாடிதான் பெஸ்ட். என்ன சொல்றீங்க?

வெங்கட் நாகராஜ் said...

அதானே... எதையும் ரூபாயில் பார்த்தால் - அல்லது டாலரில் பார்த்தால் கஷ்டம் தான்... :)

ஜீவி said...

ஹேர் கட்டிங் அங்கு 14 டாலர்கள்.
சென்ற முறை அங்கு போய்விட்டு திரும்பிய சூட்டில் இங்கு செய்து கொண்ட பொழுது 100 ரூபாய் தாளை நீட்டினேன். அவர் பாக்கி 50 ரூபாய் தந்த பொழுது நீயே வைத்துக் கொள் என்று சொன்ன என் தாராளம் அவருக்கு வியப்பாய் இருந்தது.

இராஜராஜேஸ்வரி said...

“கண்ணா..எதையும் ரூபாயில கணக்குப் போடாதே!
மயக்கம் தான் வரும்!”/

வெளிநாட்டில்போய் கடையில் கால்குலேட்டரில் ரூபாயில் கனவர்ட் செய்யும்போதே கடைக்காரர் பொருளை எடுத்து உள்ளே வைத்துவிட்டார்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

//என்னது..இருக்கிற நாலு முடியை வெட்ட ஐம்பது ரூபாயா..என்ன ஒரு அநியாயம்?
மனசு அடங்கவேயில்லை..//

அடர்த்தியான முடியாய் இருந்தால் சலூன்காரருக்கு அறுவடை செய்வது எளிது. இருக்கிற நாலு முடியைத் தேடித்தேடியல்லவா வெட்ட வேண்டும்!
அதற்குத்தான் ஸ்வாமி 50 ரூபாய்.
கொள்ளை மலிவே! vgk

ப.கந்தசாமி said...

என்னங்க நீங்க, நாலு முடிதான் இருக்குங்கறீங்க, கத்தரிக்கோல எடுத்து கண்ணாடி முன்னால நின்னுக்கிட்டு நாமளே வெட்டீட்டா அம்பது ரூபாய மிச்சம் பண்ணலாமே, அத வுட்டுட்டு பொலம்பப் படாதுங்க.

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
நிலை மாறுகையில் ஒரு சொல்லே
மாறுகிற விதம் ரசிக்கும்ப்டியாக உள்ளது
வாழ்த்துக்கள்
த.ம 2

நிலாமகள் said...

சிரித்து தான் ஆற்றிக்கொள்ள‌ வேண்டும் இந்த‌ வ‌யிற்றெரிச்ச‌ல்க‌ளை:)

ரிஷபன் said...

வாங்க முடியாதுன்னுதான் அதுக்கு விலை - வாசின்னு வச்சாங்க..

துரைடேனியல் said...

Arumai. Mudi vetrathaiyum pathivakkiya thiramaikku vaalthukkal.
TM 3.

CS. Mohan Kumar said...

:)))

சார் சென்னையில் அம்பது ரூபா ஆகி ரொம்ப நாள் ஆச்சு. புது விலை ஏற்றத்துக்கு பின் என்ன ஆகும்னு தெரியலை