Friday, November 25, 2011

காலம்!


..அவன்..

லலிதாவா அது!
எவ்வளவு நாளாயிற்று, பார்த்து?
முப்பது வருடங்கள்..
நிச்சயமாய் இருக்கும்.
யதேச்சையாய், நாகர்கோவில் சம்பந்தி தம்பி பிள்ளை கல்யாணம்.
பார்த்தால், பச்சைக் கலர் பட்டுப் புடவையில்..
அவளுக்கு பச்சை என்றால் ரொம்பவும் பிடிக்கும்.
பச்சைக் கலர் தானே அவளை அடையாளம் காட்டியது.
காலம் போட்டுப் புரட்டியதில்,
ஒன்றிரண்டு வெள்ளி மயிர்களைத் தவிர,
அவளிடம் வேறு வித்யாசம் இல்லை.
பஸ்ஸில் பயணிக்கையில்,
அவள் பக்கத்தில் நின்று கொண்டு..
”..என் கண்மணி என் காதலி”- அந்த காலத்து
பிரபலமான அந்த பாடலை முணுமுணுக்க....
அவளும் மெலிதாய் பதிலுக்கு ஹம் செய்ய..
விதி விளையாட..எங்கெங்கோ பிரிந்து.
இப்போது லலிதா..
ஒரு சின்ன சபலம்..
நினப்பே ஒரு சுகமாய்..
அந்த சுகத்தில் ஒரு லயிப்பாய்..
எனக்காக காத்துக் கொண்டு இருக்கிறாளோ,
இன்னமும்?


..அவள்..

பார்த்தவுடனே தெரிந்து விட்டது,
அவர் ராம் தானென்று.
என்ன கொஞ்சம் தொப்பை போட்டு விட்டது..
வருடங்கள் ஆனால் தான் என்ன..
தலை வழுக்கை விழுந்து..
ஆனால் அந்த கண்கள்
மட்டும் இன்னமும் குறும்பாய்..
அது தானே அவரை
காட்டி க் கொடுத்தது?
அந்த இளம் வயது வசந்தத்தை,
அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியுமா?
இப்படியும் இருக்குமோ?
எனக்காக..இன்னமும்..
அவர் காத்துக் கொண்டு இருக்கிறாரோ?

..பொது..

நீ... நீங்க லலிதா இல்ல?
ஆமாம்... நீங்க ராம் தானே?
அடுத்தது?
அதை..அதை..
எப்படி கேட்பது?
இருவருக்கும் மனத்துள்
ஆசாபாசத்துடன்..
அந்த கேள்வி எதிரொலிக்க..
திடீரென்று ஒரு குரல்!
தாத்தா என்று ஒரு சிறுமி,
ராமின் காலை கட்டிக் கொள்ள..
பாட்டி என்று ஒரு பொடிசு
லலிதாவைக் கட்டிக் கொள்ள..
யாருக்காகவும், யாரும் காத்துக்
கொண்டிருக்காத..யதார்த்தம்
இருவரையும்
கலகலவென சிரிக்க வைத்தது!

12 comments:

வெங்கட் நாகராஜ் said...

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை! என அழகிய கதை மூலம் சொல்லி விட்டீங்க...

CS. Mohan Kumar said...

சார் நல்லா இருக்கு. துவக்கத்திலேயே முப்பது வருடங்கள் இருக்கும் என சொன்னதை மறு முறை பார்க்கும் போது தான் புரிகிறது.

ரிஷபன் said...

அவன்..அவள்.. பொது ..

காலத்தாலும் மறக்க முடியாத காவியம்.

ஸ்ரீராம். said...

எதிர் பால் நமக்காகக் காத்திருக்காதா என்ற எதிர்பார்ப்பால் வரும் எண்ணங்கள் எதிராய்ப் போவது எதிர்பார்த்த ஏமாற்றம் இருவருக்கும்!

Yaathoramani.blogspot.com said...

அருமையான பதிவு
காலக் கொடூரன்
அவன் யாருக்காகவும் எதற்காகவும் காத்திருப்பதில்லை
ம்னம் கவர்ந்த பதிவு வாழ்த்துக்கள்
த.ம 2

அப்பாதுரை said...

அருமை!

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

காலம் காலையும் யதார்த்தம் மனதையும் சுற்றிக்கட்டிக்கொண்டது.சபாஷ்.

middleclassmadhavi said...

//யாருக்காகவும், யாரும் காத்துக்
கொண்டிருக்காத..யதார்த்தம்//
அருமை!

RAMA RAVI (RAMVI) said...

யதார்த்தமான கதை.அருமையாக இருக்கு.

ADHI VENKAT said...

ரொம்ப நல்லா இருந்தது சார்.

நிலாமகள் said...

யாருக்காகவும், யாரும் காத்துக்
கொண்டிருக்காத..யதார்த்தம்!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

சூழ்நிலைகள் காரணமாக யாருக்காகவும் யாரும் காத்திருக்காமல் போனாலும், ஒருவர் மனதில் மற்றொருவர் என்றுமே ஊஞ்சலாடிக் கொண்டுதான் இருப்பார்கள்.

அந்த ஊஞ்சலாட்டத்தின் சுகம் அந்த இருவருக்கு மட்டுமே தெரிந்த பரம ரகசியம். மற்றவர்களால் அதை உணரவே முடியாது.

நல்லதொரு பதிவு.