நாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..
- ஆரண்ய நிவாஸம் (1)
- கவிதை (88)
- சிறுகதை (73)
- தொடர் (1)
- நிகழ்வுகள் (25)
- விமர்சனம் (5)
- வெட்டிப்பேச்சு (78)
Tuesday, November 8, 2011
ஈகை திருநாள்....
தக்கலையிலிருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு, நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தது,
லாரி.வண்டியை ரொம்பவும் நிதானமாக ஓட்டி வந்தார் அமீர்பாய். இந்த காலத்து பசங்களைப்
போல,போட்டாபோட்டி போட்டுக்கொண்டு, அவருக்கு ஓட்டத் தெரியாது.எதிலும் நிதானம்
தான்.அதனால் தான், ரொம்ப காலமாக மல்லாரி அண்ணனுக்கு வண்டி ஓட்டிக் கொண்டு
இருக்கிறாரோ என்னவோ...
"என்னவே..அமீர்பாய் ? அவனவன் அஞ்சு ஆறு வருஷம் தான் 'டைவரா' இருக்கான். அப்புறம்
முதலாளி தலைல,மொளவாயை அரைச்சுட்டு, அவனே சொந்தமா லாரி வாங்கி ஓட்டறான்.
எல்லாப் பயல்களும், பம்மாத்து பயலுவ. நீரு என்னடான்னா, விடாம இருபது வருஷமா,
ஒரே வண்டியை ஓட்டறீரு..என்னவே சேத்தீரு ?"
கரீம் பாய் இடித்துக் காட்டும் போதெல்லாம் இரு கைகளையும் மேலே தூக்கி, ஒரு சிரிப்பு சிரிப்பார்.
" அல்லா இருக்கிறானாம்.பார்த்துக் கொள்வானாம்!"
அமீர் பாய்க்கு வயது ஐம்பது,ஐம்பத்தைந்து ஆகிறது. மகள் சல்மாக்கு போன ரஜப்
மாசத்தில தான் பந்தக் கால் நட்டு,'சேரா' கட்டி,மல்லிகைப் பூவினால் மணமகன் முகம்
மறைக்க, நிக்காஹ் முடித்து வைத்தார். மருமகன் தங்கமான புள்ள. தோவாளையில்
சொந்தமாக விறகுக் கடை வைத்து நடத்துகிறான். நம்ம 'மஹ்லா'வுல, அந்த மாதிரி
புள்ளயப் பார்க்கறது அபூர்வம்.
நிதானமாக ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கைச் சக்கரத்தில் சிறிது நாட்களாகவே
தடங்கல். ஒரு கவலையும் இல்லாத அமீர் பாய்க்கு, பணமுடை. ஒரு முன்னூறு ரூபாய்
தேவையாக இருக்கிறது. அது மட்டும் கிடைத்தால், அவர் நினைத்த காரியம் நடந்து
விடும். முதலாளியிடம் கேட்க மனம் வரவில்லை. அவராகத் தருகிறாரா.. பார்க்கலாம்.
இது தான் அவரிடம் ஒரு குணம். யாரிடமும் எதுவும் கேட்க மாட்டார். இது நாள் வரை
சம்பளத்தை உசத்த வேண்டும் என்று முதலாளியிடம் அவர் கேட்டதே இல்லை. மல்லாரி
அண்ணனாகப் பார்த்து, ஏதாவது கொடுத்தால் தான் உண்டு. அதையும், அப்படியே மகள்
சல்மாவிடம் கொடுத்து விடுவதுடன், அவர் கடமை முடிந்தது.
நாகர்கோவில் வந்து விட்டது. வண்டியை நிறுத்தினார்.
கொஞ்ச நாட்களாகவே, க்ளீனர் பையன் கமால் அவரை நச்சரித்துக் கொண்டு
இருக்கிறான். இவர் போய் முதலாளியிடம் சொல்ல வேண்டுமாம், அவனுக்கு ரம்ஜான்
ஈதுவிலிருந்து சம்பளத்தை உசத்த சொல்லி!
"அண்ணே" - தலையை சொறிந்து கொண்டு வந்தான் கமால், இப்பவும்.
" ராவுத்தரே கொக்காப் பறக்கறாராம். குதிரைக்கு கோதுமை அல்வா கேக்குதாங்
காட்டியும் ! போடா அப்பாலே.." என்று நாக்கைத் துருத்தியவாறே கையை ஓங்கிக்
கொண்டு வந்தார் அமீர் பாய். அவன் நகரவில்லை. அவனுக்குத் தெரியும் அவர்
அடிக்க மாட்டென்று.
" உம்ம மாதிரி நானும் நுப்பது வருஷம் வண்டியைக் களுவ வேண்டியது தான் ..."
முணுமுணுத்துக் கொண்டே வாளியுடன் சென்றான் கமால்.
அமீர் பாய் யோசித்துப் பார்த்தார். இந்தப் பயலுக்காவது, ஏதாவது கேட்கலாமென்று.
முதலாளி தப்பாக எடுத்துக் கொண்டால்....வேண்டாம்...வேண்டாம்..அவனுக்கும் நம்ம
மாதிரி கிடைக்கும் போது கிடைக்கட்டும்.
இது நாள் வரை மகள் சல்மா அவரை 'அத்தா..அதை வாங்கித் தா..இதை வாங்கித்தா..'
என்று வாய் திறந்து கேட்டதில்லை. எல்லாத்துக்கும்' உம்ம இஷ்டம்' என்கிற பதில் தான்
மகளிடமிருந்து வரும். தகப்பன் குணம்.
மறு நாள் ஈது பண்டிகை!
ஆண்டவனின் சன்னிதானத்திலே, ஆண்டி முதல், அரசன் வரை அனைவரும் சமம்
என்பது போல, பஞ்சப் பராரிகளுக்குப் பக்கத்திலேயே, பட்டாடை உடுத்திய கனவான்களும்
'அல்லாஹு அக்பர்...அல்லாஹு அக்பர்...ஹம்து' என்று ஒருமித்து, ஏகநாயகனின் தெய்வீக
முழக்கத்தில் ஈடுபட்டிருந்தனர். புனித நோன்பினை முடித்த பெருமிதம், அத்தனை பேர்
முகங்களிலும் தெரிந்தது. கேவலம், மானிட இச்சைகளை முழுவதுமாக, முப்பது நாட்களுக்கு
வெறுத்துத் தள்ளுவேன்....ஏன் தள்ளியாகிவிட்டது ...என்ற உணர்வே அங்கே மேலோங்கி
இருந்தது. மனதுக்கு ஒவ்வாததை வேண்டாம் என்றால் வேண்டாம் தான் என்ற நெஞ்சுரம்
தொழுகைக்கு வந்த அனைவரிடமும் பிரதிபலித்தது.
ஜமாத்தின் முதல் வரிசையிலேயே, மல்லாரி அண்ணனுக்குப் பக்கத்திலேயே, அமீர்பாய்
நின்று கொண்டிருந்தார்.எல்லாரையும் விட ஆண்டவன் தான் உயர்ந்தவன் என்பது போல
அனைவரும் மெய் மறந்து நின்றிருந்தனர்.
'சுஃபான ரப்பியுல் அலீம்!....'
மனதுக்குள் மனனம் செய்து...டவுன் ஹாஜியார் மண்டியிட, அனைவரும் உணர்ச்சிப்
பெருக்குடன் குனிந்து மண்டியிட்டார்கள்.
அமீர் கரடுமுரடானவர் தான் ! ஆண்டவனின் சன்னிதானத்திலே, சிறு குழந்தை போல
ஆகி விட்டார். இந்த 'ட்ரிப்பு' எப்படியாவது போயாவணும்... கண்களில் அவரையும் மீறி
கண்ணீர் வழிந்தோடியது.
ஹாஜி ஸாப் அடுத்த 'ரஹ்-ஆத்' துக்காக எழுந்து நின்றார். அமீர் பாயினால் எழுந்திருக்க
முடியவே இல்லை.
மிகவும் சிரமப் பட்டு எழுந்தார்.
'துஆ' முடிந்ததும், ஒருவரை ஒருவர் 'முலாக்கத்' செய்து கொண்டனர். முதலாளியும்,
தொழிலாளியும் அணைத்துக் கொண்டனர்.
"இங்க சித்த வாரும்.." மல்லாரி அண்ணனால் தாங்க முடியவில்லை. இவரை ஒதுக்குப்
புறமாக அழைத்துச் சென்றார்.
"நீரும் என்னண்ட விசுவாசமா இருந்திருக்கீரு... உமக்கு நா ஒண்ணும் செய்யலேங்கறது
என்னை உறுத்திக்கிட்டு இருக்கு...ஒம்ம மக நிக்காஹ்க்குக் கூட அஞ்சு நூறு தான்
கொடுத்தேன். நீரு இது வரை, எதையும் திருப்தியோடத் தான் வாங்கி இருக்கீரு ...கொறச்ச..
கூட என்கிற முணுமுணுப்பு உம்மண்ட கெடையாது. அதனால, நீரு ஓட்டற லாரியை உமக்கே
இந்த ரமலான் நாளிலே தரேன் எடுத்துக்கும்.." என்றார் அதே கண்டிப்புடன்!
" மொதலாளி.."
அமீர் பாயின் நா தழுதழுத்து, அவரைக் கூப்பிட்டது.
"என்ன?"
" ஒரு சின்ன விஷயம்"
இது நாள் வரை இல்லாமல், இன்று தான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறார், அமீர் பாய்.
"சொல்லும்"
" அந்த கமால் பையனுக்கு நுப்பது ரூபா சம்பளம் கூட கொடுங்க"
" என்ன சுத்த கூறு கெட்ட ஆளா இருக்காரு...இவருக்கு ஏதாவது கேளுங்கன்னா..
அவனுக்கு கொடுக்க சொல்றாரு.." - மனத்துள் நினைத்தார் மல்லாரி அண்ணன்.
" சரி "
" எனக்கு ஒரு முன்னூறு ரூபா...கடனாகத் தாரும்.."
" எதுக்கு? இவருக்கு எதுக்கு முன்னூறு ரூபா.அதுவும் கடனாக?...."
கடன் வாங்கி போகக் கூடாது என்கிற விவரம் அமீர் பாய்க்கு நன்றாகவே தெரியும்.
ஏதோ உணர்ச்சிப் பெருக்கில் உளறிக் கொட்டி விட்டார்!
" ஹஜ்ஜுக்குத்தான்!!!"
" மாப்ளே.."
அவரை நெஞ்சாரத் தழுவிக் கொண்டார், மல்லாரி அண்ணன்.
" உம்ம பணம் மாப்ளே.உம்ம .நுப்பதாயிரம் ரூபா... சம்பளத்திலிருந்து ஹஜ்க்குப் போக பேங்க்ல
போட்டு வைச்சது கிடக்கு.. போயிட்டு வாரும்..வேணாம்..வேணாம்..என்னையும்
கூட்டிட்டுப் போங்க..."
ஒரு பத்தரை மாற்றுத் தங்கத்தை உரசிப் பார்த்து விட்டோமே!
குற்ற உணர்வில், பொது இடம் என்பதயும் மறந்து அழுது விட்டார், மல்லாரி அண்ணன்!
கண்ணீரின் ஊடே மிகவும் வெளிராகத் தெரிந்தார், அமீர் பாய்!
பின் குறிப்பு: 1. இது ஒரு மீள் பதிவு..
2. பத்திரிகை : தினமணி கதிர் (1980 வாக்கில்)
3. எழுதியவர் : “தரன்” என்கிற நான்.
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
அற்புதமான சிறுகதை.
மீண்டும் படிக்க வாய்ப்பு தந்ததற்கு நன்றி.
நிச்சயம் உங்கள் பேர் சொல்லும் படைப்பு.
Good story... இந்த இன்ட்லி ஓட்டுப்பட்டை எங்கிருந்து புடிச்சீங்க... வித்தியாசமா இருக்கு...
அழகான், அருமையான, அற்புதமான கதையை மீண்டும் படிக்க வாய்ப்பளித்ததற்கு நன்றிகள்.vgk
தரனின் தரமான கதை.
அதிசயமான இண்ட்லி வோட்டுப்பட்டையில் அமுக்கி விட்டேன். உங்களுக்கு மட்டும் ஸ்பெஷலாகக் கொடுத்திருக்கிறார்கள். உலகத் தரம் வாய்ந்த எழுத்தாளர்களுக்கு மட்டுமோ என்னவோ?
இன்ட்லி 2 முதல் 3 ஆகக் கண்டது மகிழ்ச்சியளித்தது.
எல்லாரையுமவிட ஆண்டவர் உயர்ந்தவர். சத்தியமான வரிகள். எப்போதும் ஆண்டவர்தான் நம்மை எல்லாம் சொல்ல வைக்கிறார். எழுத வைக்கிறார். இதுபோன்ற கதைகள் எப்போதும் நெகிழ்வானவை.
மனதை நெகிழ வைத்த கதை.
அருமையோ அருமை .ஆர் ஆர் ஆர் சார்
இந்த சிறப்பான பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_28.html) சென்று பார்க்கவும்... நன்றி...
வணக்கம்
இன்று உங்களின் படைப்பு ஒன்று வலைச்சரம் கதம்பத்தில் 28/11/2012அறிமுகமாகியுள்ளது, நல்ல படைப்பு அருமையான பதிவு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment