நகரின் பிரதான மையத்தில் இருந்தது அந்த பிள்ளையார் கோவில்.அவனுக்கு
அந்த கோவிலில் தேங்காய் உடைக்கும் வேலை..மடப்பள்ளி உண்டை கட்டி உணவு...அப்புறம் வாரம் ஐம்பது ரூபாய் சம்பளம்.. நிம்மதியாய் போய்க் கொண்டிருந்தது வாழ்க்கை!
அதற்கு வந்தது வினை!
அதுவும் பிள்ளையார் கோவில் குருக்கள் உருவில்!!
எப்படித் தெரியுமா?
ஒரு நாள் அந்த குருக்கள் ஒரு லெட்டரை கொடுத்து போஸ்ட் பாக்ஸில் போடச் சொன்னார்..இவனும் போட்டு விட்டு வந்தான்.
ரெண்டு நாள் கழித்து அந்த லெட்டர் அவர் விலாசத்துக்கே வந்தது..
அப்போது தான் தெரிந்தது அந்த குருக்களுக்கு ‘மறந்து போய் தன் வீட்டு விலாசத்துக்கே போஸ்ட் பண்ணினது! ஒரு ஆதங்கத்துடன் அவனைக் கேட்டார்..
‘..அப்பா நீயாவது பார்த்திருக்கலாமே..எந்த அட்ரசுக்கு லெட்டர் போனதுன்னு..’
அவன் சொன்ன அந்த பதில் தான் அவன் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விட்டது..
‘..சாமி எனக்கு எளுத படிக்கத் தெரியாதுங்களே!’
குருக்கள் எழுந்து உட்கார்ந்தார், ஆச்சர்யத்துடன்!
‘..என்ன உனக்கு எழுத, படிக்க தெரியாதா?’
‘ஆமாமுங்க’
‘இந்த காலத்துல இப்படி ஒரு ஆளா?’
‘ என்ன பண்றது..அப்படியே விட்டாச்சு’
‘ நான் விடப் போறது இல்ல..உனக்கு கொஞ்சம், கொஞ்சமா சொல்லித் தரேன்..என் கிட்ட நீ படிச்சுக்கோ..’
‘ சரிங்க’
அத்துடன் அவர் விட்டு விடுவார் அவர் என நினைத்தான்.ஆனால், நினப்பதெல்லாம் தான் நடந்து விடுவதில்லையே!
அடுத்த நாள்..
‘ அப்பா ..இங்க வா..இந்தா ஸ்லேட்.. உனக்காக வாங்கியிருக்கேன்..இன்னிலேர்ந்து வித்யாரம்பம்’
அவனுக்கு படிக்க துளிக்கூட விருப்பமே இல்லை!
அவரும் அவனை விடுவதாக இல்லை!!
அன்றைக்கு ஆரம்பித்தது தான் சனி!
ஒரு கால கட்டத்தில் அந்த குருக்கள் அவனால் எழுத படிக்க முடியாமல் போகவே, கோபத்துடன் அவனை கல்தா
பண்ணி அனுப்பி விட்டார்!
மறு நாள் சங்கட ஹர சதுர்த்தி!
அந்த குருக்கள் கொடுத்த காசுக்கு சின்னதாய் ஒரு தேங்காய், பூ கடை போட்டான்..கோவில் வாசல் முன்!
எல்லாருக்கும் ஆச்சர்யம்!
‘ வேலை போயிடுத்துங்க, எனக்கு..தேங்கா,பூ, பழம் நம்ம கடையில வாங்குங்க சார்..இது தான் நம்ம பொழைப்பு இனிமேல்’
கோயிலுக்கு வந்த எல்லாரும் அவன் மேல் இரக்கப் பட்டு அவன் கடையில் பூஜை சாமான்கள் வாங்கினார்கள்..
கொஞ்ச நாளில் ஊர் கடைவீதியில் ஒரு ஜவுளிக் கடை வைக்கும்
அளவிற்கு வியாபாரம் வளர்ந்தது..
என்ன ஒரு அதிர்ஷ்டம் அவனுக்கு!
ஒரு பத்து வருடத்தில் அந்த ஊர் பெரிய பணக்காரன் ஆகி விட்டான் அவன்!
இப்படித் தான் ஒரு நாள் பேங்குக்கு போக வேண்டிய கட்டாயம் அவனுக்கு! எப்போதும் அவன் உதவியாள் தான் பேங்க்குக்கு போவதெல்லாம் .அன்று அந்த உதவியாள் லீவ் ஆதலால் அவன் பேங்க் போக வேண்டியதாயிற்று!
பேங்க் மேனேஜர் கேட்டார்.
“ எவ்ளவ் டெபாசிட்?”
“ பத்து லட்சம்”
அசந்து போய் விட்டார், அவர்..டெபாசிட் ஃபார்ம் ஃபில்லப் பண்ணி இவனிடம் பவ்யமாய் கொடுத்தார்..
இவன் அவரிடம் ஸ்டாம்ப் பேட் கேட்டான்.
“எதுக்கு?”
“எனக்கு SIGN பண்ணத் தெரியாது..அந்த ஸ்டாம்ப் பேட் இங்க்ல
கை நாட்டு வைப்பேன்..”
“இவ்ளவ் பெரிய பணக்காரர் , உங்களுக்கு கையெழுத்துப் போட
தெரியாதா?”
“கையெழுத்தென்ன..எழுத ..படிக்க கூட தெரியாது?”
“ அப்டியா...உங்க நாலட்ஜுக்கு நீங்க மட்டும் எழுத படிக்கத் தெரிந்திருந்தா...”
சிரித்துக் கொண்டே சொன்னான், அவன்.
“ பிள்ளையார் கோவிலிலே தேங்கா உடைச்சுண்டு இருந்திருப்பேன்!”
- (மூலம் : சாமர்செட் மாமின் சிறுகதை ஒன்றின் தழுவல்)
.
11 comments:
// “இவ்ளவ் பெரிய பணக்காரர் , உங்களுக்கு கையெழுத்துப் போட
தெரியாதா?”
“கையெழுத்தென்ன..எழுத ..படிக்க கூட தெரியாது?”
“ அப்டியா...உங்க நாலட்ஜுக்கு நீங்க மட்டும் எழுத படிக்கத் தெரிந்திருந்தா...”
சிரித்துக் கொண்டே சொன்னான், அவன்.
“ பிள்ளையார் கோவிலிலே தேங்கா உடைச்சுண்டு இருந்திருப்பேன்!” //
மூலக்கதையை அருமையாகவே எடுத்துச்சொல்லியிருக்கீங்க!
பத்து லட்சம் டெபாஸிட் கிடைத்த வங்கி மேலாளர் போல மகிழ்ச்சி அடைந்தேன் .... ஸ்வாமீ.
பாராட்டுக்கள். வாழ்த்துகள். vgk
அருமை சார்.
ரேகா ராகவன்.
மூலக்கதை புது ஆடையணிகளால் ஜொலிக்கிறது!
:))))
படிக்கத் தெரியாமல் இருந்தால் நல்லாத்தான் இருந்திருக்கும் !
கருத்தளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி!
மொழி பெயர்த்தல் எனக்கு பிடிக்காத ஒன்று ! படைத்தவனின் மூலக்
கூறு சிதைக்கப் படாமல் பிரதி எடுப்பதை நான் விரும்பாதது தான் காரணம் !
கண்ணாடி டம்ளரில் இருந்த சர்பத்தை பிற மொழி வாசகனுக்குக்
கொடுக்க ஒரு STRAW போதுமே ! EXTRA வாக நான் எதற்கு?
உதாரணமாக, WOMAN IN PARADISE என்பதை 'சொர்க்கத்தில் மாதரசிகள்' என்று சொல்வது மொழிபெயர்ப்பு ! அதனையே கொஞ்சம் சுவாரஸ்யமாய்
'சொர்க்கத்தில் சூடான சுந்தரிகள்' என்று சொல்வது தழுவல் !
தழுவல் தரும் சுகமே தனி தானே !
நல்ல கதையா இருக்கே....:)
அடடா... என்ன ஒரு தழுவல்... :)))
நல்ல கதை ஆர்.ஆர்.ஆர்.
இமெயில் விலாசமில்லாத ஆளா, உமக்கு வேலையில்லை"
என்றதும், தள்ளுவண்டியில் ஹெம்பர்கர் விற்று பணக்காரன் ஆன கதையை அழகாய் வேஷ்டிகட்டி சிங்காரித்து விட்டீர்கள். பாரதி சொன்ன பிற மொழிச் செல்வம் கொணர்ந்திங்கு கொட்டியிருக்கிறீர்கள். சபாஷ் ஆர் ஆர் ஆர்.
வெளி நாட்டுச் சரக்கு நம்ம மொந்தையில மயக்குது சாரே.
அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்.
Post a Comment