அது ஒரு அழகிய பர்ணசாலை!
குருகுல வாசம் முடிந்த ராஜகுமாரர்கள், விடுமுறையைக் கழிக்க
வந்திருக்கிறார்கள்.
இது ஒரு எளிய வாழ்க்கை..இங்கு எல்லாவற்றையும் தேடித் தேடித் தான்
போக வேண்டும்.
“யாரங்கே?” என்கிற ராஜகுமாரர்களின் அதிகாரம் இங்கு செல்லாது!
அவர்களும் குரு பத்னி இட்ட ஏவல்களை மற்ற மாணாக்கர்கள்
போல் செய்ய வேண்டும்..
மூன்று மாதங்கள் தான்!
அப்புறம் ராஜ போக வாழ்வு!
அந்த நான்கு ராஜகுமார்களுக்கு ஒரு சகோதரி!
அந்த ராஜ குமாரியும் அவர்களுடன் இங்கு வந்திருக்கிறாள்..
இந்த பர்ண சாலையில் ஓய்வு என்று தான் பெயர்!
ஆனால், இங்குள்ள மஹ ரிஷியிடம் வேதம் கற்க வேண்டும்!
பாடசாலை மாணாக்கர்கள் போல் ராஜ குமாரர்களும் தர்க்கம்,
வ்யாகர்ணம், சூத்ரம் போன்றவற்றைக் கற்க வேண்டும் என்று
மன்னவனின் ஆசை.
ரிஷி பத்னிக்கு பேச்சுத் துணைக்கு ராஜ குமாரி!
பொழுது போகாத நேரங்களில் ராஜகுமாரி பர்ண சாலைக்கு
வரும் மான்களுடன் பேசுவாள்..மயில்களுடன் ஆடுவாள்.
அந்த நான்கு ராஜ குமாரர்களும் ராஜகுமாரியிடம் ப்ரியமாக இருப்பார்கள்.
அவர்கள் அத்தனை பேருக்கும் அவள் என்றால் உயிர்!
கருவேப்பிலைக் கன்று போல் ஒரே சகோதரி ஆயிற்றே!
இப்படித் தான் ஒரு நாள்!
விளையாடச் சென்ற ராஜகுமாரியைக் காணவில்லை!
பதைத்துப் போய் விட்டார்கள் ராஜகுமாரர்கள்!
மஹரிஷியிடம் ஓடிப் போய் சொன்னார்கள்!
தியானத்தில் ஆழ்ந்த மஹரிஷி சொன்னார்.
“ கவலை வேண்டாம்..ராஜகுமாரி கிடைத்து விடுவாள்” என்றவர் மேலும்
சொன்னார்:
“ஹூம்....பஹதத்தன் வம்சம் இப்படியா போக வேண்டும்!”
அவர் சொன்னது போல், இரண்டு நாள் கழித்து, ராஜ குமாரி வந்தாள்...
ஒரு குதிரையுடன்!
“இதென்னது” என்று ராஜகுமார்கள் குதித்தார்கள், அவள் சொன்னதைக் கேட்டு!
ராஜ குமாரி தீர்க்கமாகச் சொன்னாள் : “இந்த குதிரை என்னுடன் தான் இருக்கும், இனி மேல்!”
கடைசியில் அவள் பிடிவாதமே வென்றது..
அந்த நான்கு ராஜ குமார்களும், அந்த ராஜ குமாரியும் அரண்மனை திரும்பினர்.
அந்த குதிரையும் தான்!
அந்த ராஜ குமாரர்களுக்கு அந்த குதிரையை கொஞ்சம் கூட பிடிக்கவில்லை!
வேண்டா வெறுப்பாகத் தான் அதைப் பார்த்தார்கள்..
ஆனால், அந்த ராஜகுமாரியின் கட்டளைப் படி, அதற்கு ராஜோபசாரம்!
ராஜகுமாரியின் கண்களுக்கு ..ராஜகுமாரியின் மனசுக்கு... அந்த குதிரை இரவில் ஒரு அழகிய ஆண் மகனாய் தோன்ற....!
ஒரு நாள் இரவில் அந்த குதிரை சொன்னது.
“ராஜ குமாரி..என்னை மறந்து விடு... நான் மறுபடியும் காட்டிற்கேப் போகிறேன்”
“முடியாத்”
“பிடிவாதம் வேண்டாம் ப்ரிய ஸகி..உன் அண்ணன் மார்களைப் பார்த்தால் எனக்கு
பயமாக இருக்கிறது..ஏதாவது சூழ்ச்சி செய்து என்னை கொலை செய்து விடுவார்கள்”
“ஒன்றும் நடக்காது.. நான் இருக்கிறேன்”
“ நீ இருப்பாய்... நான் இருப்பேன் என்று தோன்றவில்லை”
” நீ இல்லாமல் நானும் நானல்ல”
இந்த உரையாடல் முடிந்து நான்கைந்து நாட்கள் இருக்கும்.
ஒரு முரசு அறிவிப்பு!
“ மன்னன் அஸ்வ மேத யாகம் செய்யப் போகிறானாம்.”
ராஜ குமாரி துவண்டாள்..அழுதாள்...அழற்றினாள்...ஒன்றும் பயனில்லை!
அவள் குதிரை தான் அஸ்வ மேத யாக க் குதிரையாம்!
அந்த ராஜ குமார்கள் பிடிவாதமாக நின்றார்கள்..
கடைசியில் அவர்கள் பிடிவாதமே வென்றது!
அதன் பிடரியைப் பிடித்துக் கொண்டு பிரியா விடை கொடுத்தாள், அந்த
ராஜகுமாரி.
திட்டமிட்டபடி அடுத்த ஐந்தாம் நாள் வந்தது அந்த செய்தி!
“ கள்வர்கள் அந்த குதிரையைக் கொன்று விட்டனர்”
வடக்கிலிருந்து வந்தது அச்செய்தி!
ராஜகுமாரி அழவில்லை..
அப்படியே வடக்கு பார்த்து ஹடயோஹத்தில் அமர்ந்து விட்டாள்!
அந்த அஸ்வம் இறந்த ஐந்தாம் நாள்....
அவளும் இறந்து விட்டாள்!
தான் கூறிய வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்க வேண்டி, தன் இன்னுயிரைத்
துறந்தாள், அப்பேதை!
“ நீ இல்லாமல் நானும் நானல்ல!”
பின்னொரு காலத்தில், குருஷேத்ரப் போரில் தர்மன் “அஸ்வத்தாமா கதா குஞ்சரஹ” என்று சொன்னானாம்..சொல்லும்போதே, அது வரை தரைக்கு மேல், இருந்த அவன் ரதம் தரையைத் தொட்டதாம்..
அஸ்வம் என்றால் குதிரை..ஆனால், அஸ்வத்தாமா என்பது ஒரு யானையின் பெயராம்..அதையும் அந்த கதாகுஞ்சரஹ என்பதை மெதுவாகச் சொன்னானாம் தர்மன்.
தன் மகன் அஸ்வத்தாமன் சிரஞ்சீவி என்பதை துரோணாச்சார்யார் மறந்து விட்டாரா?
ஏதாவது மாயை அவர் கண்களை மறைத்து விட்டதா?
துரோணர் என்கிற மாவீரனை வீழ்த்த அந்த மாயக் கூத்தன் விரித்த வலை இது!
வலையில் சிக்கியவன் யானைப் போரில் வல்லவனான பஹதத்தன்..
அவனுடன் கூடவே மாண்டு போன அந்த நான்கு ராஜ குமாரர்கள்!
தன் அருமை மகள் இறந்த உடனேயே மனதளவில் இறந்து விட்டான், பஹதத்தன்! குரிஷேத்ரத்தில் இறந்தது பிம்பம் மட்டுமே!
ஆக, ஒரு யானையை வீழ்த்தியது குதிரை!
ஒரு வம்சமே புல் பூண்டு இல்லாமல் போய் விட்டது என்பது மட்டும் இதில் உண்மை!
பின்குறிப்பு : இது மகாபாரத காப்பியத்தின் உபகதை அல்ல!
அடியேனின் கற்பனை மட்டுமே!
11 comments:
ஆச்சர்யமான கதை. எப்படியெல்லாம் நிகழ்வுகள்.. கற்பனைக்கு எட்டாத சில சம்பவங்கள் நிஜ வாழ்விலும் கூட. அருமையான பகிர்வு.
உருக்கமான இதிகாசப் பக்கம்!...
அருமை.
மிக அற்புதமான கதை.
wow!
யாரு பஹதத்தன்னு கேக்க நினைச்சேன்.
அடியேனின் கற்பனை மட்டுமே!
Ahhh..!
அருமையான கற்பனை
கற்பனைக் கதை என்று நீங்கள் சொல்லி விட்டாலும் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. சரளமான எழுத்து நடை வியக்க வைக்கிறது என்னை. தொடர்கிறேன் உங்களை.
கற்பனைக்காவியம் இரு நிகழ்வுகளை அருமையாக இணைத்தது.. பாராட்டுக்கள்..
லாஜிக் ரொம்ப நன்றாகப் பொருந்தச் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுகள்!
அருமை.
வித்தியாசமான கற்பனை.
Post a Comment