Tuesday, April 24, 2012

ஆக்கங்கெட்ட கூவே.....


“தாத்தா.....வ்வ்வ்...” “என்னலே?” ”நானும் மார்க்கெட்டுக்கு வருவேனாக்கும்” “சவட்டினேன்னா, மொகரை எகிறிப் போவும்..வீட்டுக் கணக்கைப் போடுலே” அப்பாதைக்கு விட்டு விட்டான், சட்டி மண்டை..ஒரு அரை மணி நேரம் கழித்து மெள்ள ஆரம்பித்தான்.. “தாத்தாவ்.. நானும் மார்க்கெட் வருவேன்” “ஏலே..அங்க வந்தா, நீ அத்த வாங்கித் தா, இத்த வாங்கித் தான்னு பிடிவாதம் பிடிப்பே..இப்ப மாசக் கடைசீல, துட்டு இல்ல..உனக்கு முறுக்கு வேணா இந்த தாத்தா வாங்கியாறேன்...” : ஊம்... நானும் உன்னோட வருவேன்...எனக்கு ஒண்ணும் வாங்கித் தர வேணாம்.. வேடிக்கை காட்டினாப் போறும்” சன்னாசி தாத்தா மன்றாடிப் பார்த்தார்..பய புள்ள விடுவதா இல்ல.. “ அட ஆக்கங் கெட்ட கூவே, வந்து தொலை!” தாத்தா கையைப் பிடித்துக் கொண்டு, ஜம்மென்று கிளம்பி விட்டான், சட்டி மண்டை. காளியக்கா விளை சந்தை! லவுட் ஸ்பீக்கர்..குடை ராட்டினம்...குழாய் பல்பு, என்று படு அமர்க்களமாய் இருந்தது, சந்தை. தாத்தாவ்...பஞ்சு மிட்டாய்.... “ஏல..பேசாமல் வா..கடசீல வாங்கித் தாரேன்..” தாத்தாவ்..எலந்த வடை.. “சொன்னேன்னில்ல..இதுக்குத் தான் உன்ன கூட்டியார மாட்டேன்னு சொன்னது” தாத்தா குச்சி ஐஸாவது வாங்கித் தா.... ”ஒண்ணும் கிடையாது” தாத்தா பலூன்... தரையில் விழுந்து..புரண்டு அழ ஆரம்பித்து விட்டான், சட்டி மண்டை. பொறுக்க முடியாமல் போய், முதுகில் ஒரு போடு போட்டார், தாத்தா.. விசும்பிக் கொண்டே வந்தான், சட்டி மண்டை. தாத்தாவுக்கே அவனைப் பார்த்தால், பரிதாபமாய் இருந்தது..இருக்கட்டும் என்று ஒரு பெரிய சைஸ் பாம்பே அப்பளம் வாங்கிக் கொண்டு திரும்பிப் பார்த்தால், பய புள்ளயக் காணோம்.... கோச்சுகிட்டு எங்கிட்டாவது ஓடிப் போயிருக்குமோ, புள்ள.. எங்கே போயிருப்பான்? சல்லடைப் போட்டு தேடிப் பார்த்து விட்டார், சட்டி மண்டையைக் காணோம்! கிழவிக்கு என்ன பதில் சொல்வது? பயம் பிடித்துக் கொண்டு விட்டது, தாத்தாவுக்கு. ”ஏ..லே...சட்டி மண்ட...... ” தாத்தாவுக்கு அழுவாச்சியாய் வந்தது.. இங்கே.. பத்து கடை தள்ளி.... தா..த்...தாவ்....வ்.......... தாத்..........தாவ்......... தா..........த்தா வ்வ்வ்வ்வ்..... ஒருவர் பஞ்சு மிட்டாயோடு வந்தார்.. ”வாணாம் போ” கையை தட்டி விட்டான், சட்டி மண்டை. மற்றொருவர் கை நிறைய எலந்த வடையோடு வந்தார்.. ”இது வாணாம்....தாத்தா தான் வேணும்” “ தம்பி அளுவாதே, இந்தா குச்சி ஐஸ்..தாத்தாவை நான் பார்த்துட்டு வரேன்” “ குச்சி ஐஸ் வாணாம்” இன்னொருவர் கலர் கலராய் பலூன்களோடு வந்தார்... பலூன் வாணாம் போ..தாத்தா தான் வேணும்...தாத்தாவ்...” கதறிக் கொண்டு இருந்தான், சட்டி மண்டை! “ தா.....த்த்தா வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்”

8 comments:

ஜீவி said...

குழந்தைகளின் மனநிலை; சொந்தங்களின் அருகாமையில் அவை கொண்டிருக்கும் உரிமை, பாதுகாப்பு உணர்ச்சி - என்று மனம் லயிப்பில் ஆழ்ந்து விட்டது.

சின்ன குட்டியூண்டு கதைதான்; ஆனால் எழுதிய விதம் அழகு. ஒரு பக்க கதையின் ஊடே, எழுதியவன் நானாக்கும் என்று வேண்டாத உரிமை எடுத்துக் கொண்டு நீங்கள் எதுவும் பேசவில்லை;ஆனால் பாத்திரங்களைப் பேசவிட்டு மன உணர்வுகளைப் பேச வைத்திருக்கிறீர்களே; அது தான் சிறப்பு.

உரையாடல்களின் நடுநடுவே இடம் விட்டு, பத்தி பிரித்துப் போட்டிருந்தீர் களென்றால் இன்னும் கதையின் வாசிப்பபு அழகு கூடியிருக்குமே என்கிற நினைப்பை சொல்லாமல் இருக்க முடியவில்லை.

பகிர்தலுக்கு நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

சூப்பர் தாத்தா, சூப்பரோ சூப்பர் பேரன்.

பாசப்பிணைப்பு புரிகிற்து.

நல்ல பதிவு, பாராட்டுக்கள்.

அப்பாதுரை said...

புரியவைக்க முடியாத உறவு பற்றிய சிறப்பான கதை.

ஸ்ரீராம். said...

குழந்தை மனம்.
ஆசைகள் நேரத்தையும் தேவையையும் பொறுத்து எப்படி மாறி விடுகிறது!
பதிவை கொஞ்சம் பத்தி பிரித்து போடக் கூடாதா? படிக்க எளிதாய் இருக்குமே...

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. கதா பாத்திரங்களின் பெயர்கள் அசத்தல்... :)

ரிஷபன் said...

கடைசீல என்னதான் ஆச்சு.. சட்டி மணடைக்கு..

ADHI VENKAT said...

உறவுகளின் அர்த்தத்தை சொல்கிறது கதை. பெயர்கள் அருமை.

பேரன் இப்போ எங்கிருக்கிறான்....

வசந்தமுல்லை said...

அருமை! புது முயற்சியில் வெற்றி நடை! வாழ்த்துக்கள் !!!!!!!!!!!!!!!!!