Saturday, March 24, 2012

விழிக்குத் துணை !!!!!

“கண்ணிலான் பெற்றிழந்தான்,என உழந்தான்” என்கிறான், கம்பன்..இராமபிரான் காட்டுக்குப் போகிறேன் என்று சொல்லும் போது,தயரதனுக்கு பெற்ற கண்கள் போனது போல துன்பம் இருந்ததாம்..
வள்ளுவனும் கண்களைப் பற்றி நிறைய எழுதி விட்டான்.
“கண்ணானால் நான் இமையாவேன்” என்றான், அறுபதுகளில் ஒரு கவிஞன்!
“கண்கள் இருந்தால்..” என்று கேட்கிறான், இன்றைய கவிஞன்!
ஆக,
ஐம்புலன்களில் கண் என்பது இன்றியமையாதது..அது மட்டும் இல்லை என்றால்?
அது எத்தனை கஷ்டம்?
கண் தானம் என்பது எவ்வளவு உயர்ந்த விஷயம்?
..எங்கள் அலுவலகத்தில் செல்வராஜ் என்கிற மனிதர் இருக்கிறார்..அவர் பெயரே ”கண் தானம்” செல்வராஜ். எத்தனையோ மனிதர்களுக்கு கண் தானம் செய்வதின் அவசியத்தை எடுத்துரைத்திருக்கிறார்..அவரால் பயன் பெற்றவர்கள் எத்தனை எத்தனையோ!இறந்தவர்கள் எத்தனையோ பேர் இருப்பவர்களைக் கொண்டு இவ்வுலகைப் பார்க்கிறார்கள் என்றால் அதற்கு அசைக்க முடியாத கிரியா ஊக்கி நம் செல்வராஜ்!
அவருடன் ஒரு பத்து நிமிடம் பேச வாய்ப்பு கிடைத்தது..செயற்கரிய செய்து பெற்ற இம்மானுடப் பிறப்பை எவ்வளவு அழகாக அவர் உபயோகப் படுத்திக் கொண்டு வருகிறார் என்று அறிந்து அசந்து போய் நின்றோம், நாம்!

“ஆனந்தா, என் கண்ணையே ஒப்படைக்கிறேன்” என்று ஒரு படத்தில் சிவாஜி ஜெமினியிடம் சொல்வார்..அது போல, ”என் கண்ணையே உங்களிடம் ஒப்படைக்கிறேன்” என்று நம்மிடம் சொல்லி விட்டு ஒருவர் சிதம்பரத்தில் ஆனந்த கூத்தாடுகிறார்..மற்றவரோ நிம்மதியாக பாற்கடலில் பள்ளி கொள்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது எமக்கு!

கண்களைப் பெற்ற ஒருவர் என்ன சொல்கிறார் என்று கேளுங்களேன்..

கைகளில் டக்டக் கென்று ஒரு குச்சியைத் தட்டிக் கொண்டு செல்லும் அவஸ்தை இல்லை. ரோடில் போவோர்,வருவோரை வழி கேட்டு இனி வறுத்தெடுக்க வேண்டாம்..”என்ன பாவம் செய்தோம்,இப்படி ஒரு பிறவி பிறப்பதிற்கு?” என சுய இரக்கம் கொள்ள வேண்டாம்..
கண்கள் கொடுக்க நம் ‘கண் தானம் செல்வராஜ்” நம்முடன் இருக்கும்போது நாம் ஏன் கவலைப் பட வேண்டும்?

கழி வேண்டாம் கையில் யாரையும், இனி
வழி கேட்கும் விசனம் வேண்டா,’பூவுலகில்
பழி என் செய்தோம்?’என வருந்திடல் வேண்டா,
விழி தரும் செல்வன் ஈங்கிருக்குங்கால்!

12 comments:

கே. பி. ஜனா... said...

கண்ணான பதிவு !

வை.கோபாலகிருஷ்ணன் said...

BHEL SSTP ”கண்தானம் செல்வராஜ்” வாழ்க!

அவரை இன்று அனைவருக்கும் அறிமுகப்படுத்தியுள்ள ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி வாழ்க!

[காட்டியுள்ள படத்தைப்பார்த்தால் ரொம்பவும் பயமாக உள்ளது ஸ்வாமி]

நல்லதொரு பயனுள்ள
'விழி’ப்புணர்வு ஏற்படுத்தும் பகிர்வு.

நன்றி.

ரிஷபன் said...

!இறந்தவர்கள் எத்தனையோ பேர் இருப்பவர்களைக் கொண்டு இவ்வுலகைப் பார்க்கிறார்கள் என்றால் அதற்கு அசைக்க முடியாத கிரியா ஊக்கி நம் செல்வராஜ்!

நல்ல அறிமுகம்.
ஜனா ஸார் சொன்னது போல கண்ணான பதிவு.
வைகோ சொல்வது போல ‘விழி’ப்புணர்வு ஏற்படுத்தும் பகிர்வு.
கண்ணைத் திறந்துட்டீங்க மூவார் முத்தே..

வெங்கட் நாகராஜ் said...

கண் தானம் பற்றிய நல்ல பகிர்வு... வெளிச்சத்தை கண் இல்லாதவர்க்குக் காட்டிய திரு செல்வராஜ் பற்றி நீங்கள் பதிவிட்டதற்கு மிக்க நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

வழித் துணையாகும்
விழிக்குத் துணை புரியும் அருமையான பகிர்வுகள்..

வாழ்த்துகள்..

ADHI VENKAT said...

அருமையான பதிவு சார். செல்வராஜ் சாருக்கு பாராட்டை தெரிவித்து விடுங்கள். ரொம்ப நல்ல காரியம் செய்யறார்.

படம் ரொம்ப பயமா இருக்கு சார். படத்தை ஒரு கையால் மறைத்துக் கொண்டே தான் படித்தேன்....

நானும், என் கணவர் இருவருமே கண் தானத்துக்கு பதிந்து வைத்திருக்கிறோம்.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
வாழ்த்துகள்.

நிலாமகள் said...

வாழ்த்துக‌ள்... பாராட்டுக்க‌ள்! ம‌ர‌பிலும் க‌வியெழுதும் புல‌மைக்கும், ஊன‌க்க‌ண் திற‌ந்து ஞான‌க்க‌ண் அடையச் செய்த‌மைக்கும், 'கிரியா ஊக்கி' திரு. செல்வ‌ராஜை ஊக்க‌ப்ப‌டுத்தும் வ‌ண்ண‌ம் அறிமுக‌ப்ப‌டுத்திய‌மைக்கும்!

அப்பாதுரை said...

என்னையும் தன் மகனையும் சுட்டிக்காட்டி, "நீங்க ரெண்டு பேரும் என் கண் மாதிரி" என்பார் என் பெரியம்மா ஒருவர். அவருக்கு ஒரு கண் தெரியாது என்பது ரொம்ப நாளைக்குப் பிறகு தான் தெரிஞ்சிக்கிட்டேன்.

அப்பாதுரை said...

செல்வராஜ் வியக்க வைக்கும் மனிதர்!

cheena (சீனா) said...

அன்பின் ஆர் ஆர் ஆர்

கண் தான்ம் தான் உலகிலேயே சிறந்த தானம் - இறந்த பின்னர் மண்னூக்குள் / நெருப்புக்குள் போகும் கண்ணைத் தான்ம செய்து ஒருவருக்கு விழிகளைக் கொடுத்து நல்ல செயல் புரிவது நன்று.

கண் தான செல்வராஜ் இச்செயலைச் செய்ய மற்றவர்களை ஊக்குவிப்பதும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதும் நன்று - அவருக்கு இறைவன் எல்லா நலனையும் அளித்து, அவர் நூறாண்டு வாழ்ந்து இன்னும் ஆயிரக்கணக்கனவர்களுக்கு கண்கள் பெற்றுத்தர அருள் புரிவானாக !

நல்வாழ்த்துகள் செல்வராஜ்
நல்வாத்துகள் ஆர் ஆர் ஆர்

நட்புடன் சீனா

இராஜராஜேஸ்வரி said...

விழி’ப்புணர்வு ஏற்படுத்தும் செல்வராஜ் வியக்க வைக்கிறார்.....