
அந்த கிராமமே விழாக் கோலம் பூண்டது போல எல்லார் முகத்திலும் மகிழ்ச்சி.எல்லா வீடுகளிலும் பெரிதாக கோலம் போட்டு, மத்தியில் பூசணிப்பூ வைத்திருந்தார்கள்.மைக் செட் போட்டு, ஆசைப் பட்டவர்கள் எல்லாம் ஹல்லோ..ஹல்லோ என்று நொடிக்கு ஒரு தரம் கத்தினார்கள். கிராமத்து வாலிபர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, பூக்களால் தோரணம் கட்டினார்கள்.
ஒரு பெரிய ஆல மரம்,நிறைய விழுதுகளுடன். அதன் அடியில்
வட்ட வடிவில் ஒரு பெரிய திண்ணை. அங்கு தான் ஊர் பஞ்சாயத்து
நடக்கும். அது வரைக்கும் தான் பேருந்து வரும். அந்த இடத்திற்கு ஆலமர ஸ்டாப் என்று பெயர்! அந்த திண்ணைக்குக் கீழே நாலைந்து
ஃபோல்டிங் சேர்கள். அதில் இரண்டு சேர்களில், பெரிய ரோஜா
மாலைகள் காத்துக் கொண்டிருந்தன.
மணியக் காரர், ஊர் கணக்குப்பிள்ளை, தலையாரி என்று கிராம அரசாங்க அதிகாரிகள் ஒரு வரிசையிலும், ஊர் பெரியவர்கள் கிராமணி தாத்தா, சிவன் கோவில் குருக்கள், போஸ்ட் மாஸ்டர் வெங்கிட்டு ஐயர், ஃபாதர் பெர்டிணாண்ட் என்று மறு வரிசையிலும், நிற்க, இவர்களுடன் ஒட்டியும்,ஒட்டாமலும் சின்னாஞ்ஞான் நின்றிருந்தான். அவன் முகத்தில் பெருமிதம் கொப்பளித்துக் கொண்டிருந்தது.
'சின்னாஞ்ஞான் , இப்படி முன்னாடி வாங்க..' - ஃபாதர்.
' சின்னாஞ்ஞான் இப்படி முன்னால வாப்பா..'
ஃபாதர் கூப்பிட்டதும், வேண்டாவெறுப்பாக கூப்பிட்டார் மணியக்காரர். இவர்கள் இருவரும் கூப்பிட்டதில் தன்னுடைய
இருப்பையும் நிலை நாட்டிக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில்,
வெங்கிட்டு ஐயர் சொன்னார்:
" முன்னால வாப்பா சின்னாஞ்ஞான். இன்னிக்கு ஊரில நீ தான்
ஹீரோ. நீ யாரு.. கலெக்டரோட அப்பாவாக்கும்"
சொல்லிவிட்டு ஒரு சிரிப்பு சிரிக்க, அவர் மீது அபிமானம் கொண்டவர்களும் அப்போது சிரித்தார்கள்!
மிகச்சாதாரண நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கும் சின்னாஞ்ஞான் இன்று கிராமத்துப் பிரமுகர் அளவுக்கு உயர்ந்து விட்டான்.அவனை இந்த அளவிற்கு உயரச்செய்தது, அவனுடைய பையனுக்குக் கிடைத்த அங்கீகாரம். அவனுடைய பையன் சரவணன் 'UPSC EXAM' ல் அகில இந்திய அளவில், முதல் பத்து ரேங்க்குக்குள் வந்து, 'ட்ரைனிங்க்' முடித்து, இப்போது தான் அவன் பிறந்த மண்ணிற்கு வருகிறான்!
அவனை வரவேற்கத்தான் அவ்வளவு கூட்டம்!
அந்த பையன் சரவணின் முன்னேற்றத்தில் ஃபாதருக்கும்
பங்கு உண்டு. இந்த பையன் பிரமாதமாக வருவான் என்று அவருக்கு
அப்போதே தோன்றிவிட்டது. அவனுடைய துறுதுறுப்பும்..சட்டென
கிரகிக்கும் சக்தியும்... எல்லாவற்றையும் விட அவன் ஐந்தாவது படித்த
போது, அவரிடம் அவன்கேட்ட கேள்வி..மலைத்துப் போய்விட்டார்.
அதற்கான விடை தெரியாமல் அப்போது முழித்தார். ஆனால்,
அதற்கான விடைஇப்போது ..இருபத்தைந்து வருடம் கழித்து
கிடைத்து விட்டது. சரவணன் வந்த பிறகு, ஊரார் எல்லாரிடமும்
அதைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்கிற ஆவல் அவர் கண்களில் ஒளிர்ந்து கொண்டிருந்தது!
கிராமத்தில், சேரியில் வசித்துக் கொண்டிருந்த சின்னாஞ்ஞானை மரியாதையோடு அழைக்கும் ஒரே பெரிய மனிதர் ஃபாதர்
பெர்டிணான்ட் தான். அவனை என்று இல்லை எல்லாரையும் அன்போடும், மரியாதையோடும் பழகும் அவரை அந்த கிராமமும் மிகவும் மதித்தது. மேலும், அங்குள்ள சின்ன பள்ளிக் கூடத்துக்கு ஹெட்மாஸ்டரும் அவர் என்பதால் கூடுதல் மரியாதை! அவரை
ஃபாதர் என்று கூப்பிடுவதா..அல்லது சார் என்று கூப்பிடுவதா என்று குழந்தைகள் திணறி கடைசியில் அவரை ஃபாதர் சார் என்று கூப்பிட, அதையே, அவரும் அன்புடன் அங்கீகரிக்க, எண்பது வயது கிராமணி தாத்தாவிலிருந்து, பல் முளைக்காத குழந்தைகள் வரை, எல்லாருக்கும் அவர் ஃபாதர் சார் தான்!
'மணி என்னப்பா எட்டேமுக்கா ஆகலியா?'
கணக்குப் பிள்ளை கேட்ட அடுத்த நிமிஷமே, பஸ் அங்கு வந்து
நிற்க ........
ஆ..... நம்ம சரவணன் ...
எல்லாரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சரவணன்
ஒரு சின்ன ஹோல்டாலுடன் சிம்ப்பிளாக இறங்கினான்.
படபடவென்று பட்டாசு சத்தம் ஐந்து நிமிடம் வரை கேட்டுக்
கொண்டிருந்தது. ஊர் பெரியவர்கள் சரவணனுக்கு மாலையிட,
எல்லாரையும் பணிவுடன் வணங்கினான், சரவணன். ஃபாதர்
முறை வந்த போது, அவர் காலில் அவன் விழ எத்தனிக்க, அதைத்
தடுத்து, அவனை இறுகக் கட்டிக்கொண்ட ஃபாதர் பேச ஆரம்பித்தார்.
" ஃபாதர் சார் மேல ஏறிப் பேசுங்க.."
சரவணன் அவரை மேலே தூக்கி விட ஃபாதர் பேச ஆரம்பித்தார்.
" இதோ இந்த புள்ள சரவணன் இருக்கானே.. கெட்டிக்
கார பய புள்ள..அப்பவே தெரியும் இவன் பெரிய ஆளா வருவான்னு..
ஒரு நா இந்த தம்பி என்ன கேட்டது.. பாருங்க..அப்ப மாரியம்மன் கோவில் திருவிழா..சுத்தி வர வேடிக்கையும்,கொண்டாட்டமும். அப்ப தம்பி சரவணன் என்னையப் பார்த்து,"...ஃபாதர் சார்..ஃபாதர் சார்..சேப்பு..மஞ்சள்..நீலம்..பச்சை..ன்னு எல்லா கலர்லேயும்.. பலூன் பறக்குதே..கருப்பு கலர்ல பலூன் கிடையாதா..அது பறக்கவே பறக்காதா"ன்னு கேட்டான்.அப்ப எனக்கு பதில் சொல்லத் தெரியல.சாமி....இப்ப தெரியுது..தம்பி சரவணா கருப்பு கலர்ல பலூன் இருக்கு. அது மத்த கலர் பலூன் மாதிரி உசரத்தில
பறக்கும்.... பறக்குது.. அந்த பலூன்...அந்த பலூன்..
நம்ம சரவணன் தான்.. ..'
உணர்ச்சி வசப்பட்ட குரலில் ஃபாதர் பெர்டினாண்ட் பேசப்பேச
ஊர்மக்களின் கரகோஷம் வானைப் பிளந்தது!!
இந்த கதை யூத்ஃபுல் விகடனில் வெளியாகி உள்ளது...
refer: http://youthful.vikatan.com/youth/Nyouth/ramamoorthistory270110.asp
-------- 0 ----------
12 comments:
வண்ண பேதம் இல்லாத வாழ்க்கை வேண்டும்!
''உன்னால் வெல்ல முடியும் '' என்று சிறப்பான பதிவு அளித்துள்ளீர்கள் ... அந்த பலூன் கதை அருமை , இதைத்தான் ஷிவ் கேரா சொல்லிருப்பார் ''' பறப்பு வண்ணத்தில் இல்லை மகனே , அது உள் இருக்கும் காற்றில் உள்ளது '' அது போல் உன் வளர்ச்சி உன் நம்பிக்கையில் ,எண்ணத்தில் , மனப்பான்மையில் உள்ளது ,, சரவணனை கொண்டு அழகாக சொல்லியுள்ளீர்கள் .. வணக்கமான வாழ்த்து .
நிற பேதம் - எளிமையா அருமையா சொல்லி இருக்கீங்க.
காம்ப்ளான் பதிவு...!
//உசரத்தில
பறக்கும்.... பறக்குது.. //
பலூன் மூலமாக அழகாய் விளக்கி இருக்கிறீர்கள். நன்று.
Karumaiyaay iruppinum UnkaL pathivin KaruththukkaL ARUMAI.
VAAZHTHUKKAL.
VAI.GOPALAKRISHNAN
டியர் ரிஷபன்,
வண்ணமா...வர்ணமா ? சூப்பர் கமெண்ட்.
வருக..வருக.. திரு பத்மநாபன் அவர்களே..
தங்களின் விமர்சனம் என்னை மேலும் எழுதத்
தூண்டுகிறது! மிக்க நன்றி !!
சித்ராவின் எழுத்துக்கள் என்னை நிஜமாகவே ஒரு
இலக்கியவாதி ஆக்குகிறது! மிக்க நன்றி சித்ரா மேம் !!
நல்லது வசந்த்! சுருங்கச் சொன்னாலும் ’நச்’என்று இருந்தது!!
வாருங்கள் திரு வை.கோபாலகிருஷ்ணண் அவர்களே!
உங்களைப் போல் எழுத ஆசை என்னுள் ! பார்ப்போம்!!
RAMALAKSHMI அவர்களே !
சுமாராக எழுதுகிறேனா...
Post a Comment